04_01_2026 #திருப்பாவை #திருப்பாவை திருவெம்பாவை #திருவெம்பாவை,திருப்பாவை
#மார்கழி_இருபதாம்_நாள்
திருப்பாவை, திருவெம்பாவை - 20
திருப்பாவை - 20
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
செப்பமுடையாய், திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பன்ன, மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டு ஏல் ஓர் எம்பாவாய்.
Margazhi month Tiruppavai Tiruvempavai pooja songs 20
பாசுர விளக்கம்: கோபியர்கள் இந்தப் பாசுரத்திலும் பகவானையும், பிராட்டியையும் எழுப்புகிறார்கள்.
முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! நீயும் விரைந்து துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.
கண்ணனின் திருக்குணங்களையும், நப்பின்னையின் அழகையும் வர்ணிக்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். கண்ணன் கடவுள். அவள் எல்லோருக்கும் பொதுவானவன், அவன் நப்பின்னைக்கு மட்டும் சொந்தமானவன் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் அவனையும் கேட்கிறார்கள். உக்கமும் தட்டொளியும் ஆகிய விசிறியையும், கண்ணாடியையும் ஏன் கேட்கிறார்கள். விசிறினால் காற்று வரும். வீசுபவனுக்கு மட்டுமல்ல, அருகிலுள்ளவனுக்கும் சேர்த்து! நம் செயல்பாடுகள் நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயன் தருவதாக அமைய வேண்டும் என்பது இதன் உட்கருத்து.
திருவெம்பாவை - 20
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.
விளக்கம் :
எப்பொருளுக்கும் முதலாயுள்ள உன் திருவடி மலருக்கு வணக்கம். எவற்றுக்கும் முடிவாயுள்ள, செந்தளிர் போலும் திருவடிகளுக்கு வணக்கம்; எல்லாவுயிர்களுக்கும் தோன்றுதற்குக் காரணமாகிய பொன்போன்ற திருவடிகளுக்கு வணக்கம், எல்லாவுயிர் களுக்கும் நிலைபெறுதற்குரிய பாதுகாப்பாகிய அழகிய கழலணிந்த திருவடிகளுக்கு வணக்கம். எல்லாவுயிர்களுக்கும் முடிவு எய்துதற்குக் காரணமாகிய திருவடிகள் இரண்டிற்கும் வணக்கம். திருமாலும், பிரமனும், காணமுடியாத திருவடித் தாமரை மலருக்கு வணக்கம். நாம் உய்யும்படி ஆட்கொண்டருளுகின்ற தாமரை மலர்போலும் திருவடிகளுக்கு வணக்கம். இங்ஙனம் கூறிப் போற்றி இறைவனை வணங்கி, நாம் மூழ்குவதற்குரிய மார்கழி நீரில் ஆடுவோமாக என்று கூறி போற்றி பாடுகின்றனர்.
திடப்பொருளோ, திரவமோ, வாயுப் பொருளோ எல்லாவற்றிற்கும் மூலவித்து அவை எல்லாம் முடிந்து வந்து மக்கி மடிந்து போகிற இடம். எல்லா உயிருள்ளவைகளும் ஆரம்பமாகிற இடம். சிவனது தாமரைத் தளிர் போன்ற பொன்னிறத் திருவடிகள். பூவுக்குள் இருக்கும் தேன் மாதிரி சிவனது கணுக்கால் அணி கழல்களுக்குள்தான் இவ்வுலக இன்பங்கள் தோன்றுகின்றன. எல்லா உயிர்களின் முடிவும் சிவன் திருவடிகளில்தான் முடிவாகிறது. சிவனது திருவடிகளை பிரம்மாவும், திருமாலும் காண முடிவதில்லை. நம்மால் காண முடிகிறது. எப்படி நம் வாழ்க்கையை வளப்படுத்தி முக்தியை நோக்கி நம்மை அடிக்காமல் இழுப்பது அவன் திருவடிகள்தான். எல்லாவற்றிற்கும் கீழே இருப்பது அதல பாதாளம். அவற்றிற்கும் கீழே இருப்பது சிவனது திருவடிதான். அதனால் அது எல்லாவற்றிற்கும் மூலம். எனவே, அத்திருவடிகளைப் போற்றுவோம்! பனி நீராடும் இந்த மார்கழி மாதத்தில் சிவனைப் போற்றியபடி நீராடுவோம்!

