#🌎பொது அறிவு
*#ஆர்_எஸ்_மனோகர்*
நாமக்கல்லில் (1925) பிறந்தவர்.
இயற்பெயர்: ஆர்.எஸ்.லஷ்மி நரசிம்ஹன்.
தந்தை சுப்பிரமணியன் அஞ்சல் துறையில் பணியாற்றியவர். அவரது பணிமாற்றம் காரணமாக குடும்பம் கர்நாடகாவின் பெல் லாரிக்கு குடிபெயர்ந்தது. அங்கு ஷேக்ஸ்பியர் நாடகங்கள் நடத்தி வந்த இயக்குநரும், நடிகருமான ராகவாச்சாரியின் நடிப்பும், வசன உச்சரிப்பும்தான் இவருக்கு உத்வேக சக்தியாக இருந்தது.
சென்னை பச்சையப்பா கல்லூரியில் பி.ஏ. சமஸ்கிருதம் படித்தார். அப்போது, 'மிருச்சகடிகா' என்ற சமஸ்கிருத நாடகத்தில் கதாநாயகனாக நடித்து, அனைவரையும் கவர்ந்தார். நாடகக் களத்தில் அடியெடுத்து வைத்தவர், சுகுண விலாஸ் சபாவின் 'தோட்டக்காரன்' நாடகத்தில் நடித்தார். 'நாடகத் தந்தை' பம்மல் சம்பந்த முதலியார் நாடகத்தைப் பார்த்து இவரைப் பாராட்டினார். பட்டம் பெற்று, அஞ்சல் துறையில் சேர்ந்தார்.
அக்காலத்தில் ஜே.ஆர்.ரங்கராஜு என்பவர் எழுதிய துப்பறியும் கதை "ராஜாம்பாள்". இதில் நடிக்கப் புது முகங்களைத் தேடினார்கள். அப்போது லஷ்மி நரசிம்ஹனைக் கேள்விப்பட்டு அவரை அழைத்து நடிக்கச் செய்தனர். ஏற்கனவே பள்ளிக் காலத்தில் "மனோகரா" என்ற நாடகத்தில் நடித்துப் புகழ் பெற்றிருந்ததால் மனோகர் எனப் பெயர் மாற்றம் செய்து நடிக்க ஒப்பந்தம் செய்தார். இப்படத்தில் வீணை எஸ்.பாலச்சந்தர் அவர்கள் வில்லன். மனோகர் கதாநாயகன். பி.கே.சரஸ்வதி கதாநாயகி.
1956 ஆம் ஆண்டு வெளிவந்த "நல்ல வீடு" திரைப்படத்தில் மனோகர் கதாநாயகன். நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு வில்லன் மற்றும் கதாநாயகன் வேடம்.
பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். "கானல் நீர்" என்ற படத்தில் பட்டதாரி இளைஞராக நடிக்க நிஜப் பட்டதாரியான இவரே நடித்தார். 1952 ஆம் ஆண்டு வெளியான "தாயுள்ளம்" திரைப்படத்தில் மனோகர் கதாநாயகன். ஜெமினி கணேசன் வில்லன். இப்படி இன்னும் பல படங்களில் கதாநாயகன் வேடங்களில் நடித்துப் புகழ் பெற இருந்த மனோகருக்கு 1959 ஆம் ஆண்டு "வண்ணக்கிளி" திரைப்படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடிக்க சந்தர்ப்பம் வந்தது. வந்த வாய்ப்பை நழுவ விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் மனோகர் என்று தான் சொல்ல வேண்டும். ஆம்! அந்தப்படத்தில் வில்லனாக அசத்தியிருந்தார்.
ஏற்கனவே அவர் ஒரு நாடக நடிகர். எம்.ஆர்.ராதா அடிக்கடி இவ்வாறு சொல்லுவது வழக்கம். நாடகம் எனது உயிர் மூச்சு. சினிமா அதுக்குப் பிறகு தான் என்று. அது ஆர்.எஸ்.மனோகர் வாழ்க்கையிலும் நன்றாகப் பொருந்தியது. அதனால் வண்ணக்கிளி திரைப்படத்தில் இவர் வில்லனாக நடித்ததில் ஒன்றும் தவறில்லை. அதன்பிறகு "கொஞ்சும் சலங்கை", "அம்மா எங்கே", "எதிரிகள் ஜாக்கிரதை", "கொஞ்சும் குமரி", "அனாதை ஆனந்தன்", "பறக்கும் பாவை", "சங்கிலி", "யாருக்குச் சொந்தம்", "நாலும் தெரிந்தவன்", "நீ", "நீதி", "நான்", "தாயே உனக்காக", "வல்லவனுக்கு வல்லவன்", "இரு வல்லவர்கள்", "பட்டணத்தில் பூதம்", "உலகம் சுற்றும் வாலிபன்" "அடிமைப் பெண்", "இதயக்கனி" என 200 க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார் மனோகர்.
மனோகர் நேரடியாக தமிழ் திரையுலகில் நடிக்க வரவில்லை. சர்க்கார் உத்தியோகம் என்று அக்காலத்தில் அழைக்கப்படும் அஞ்சல் துறையில் பணியாற்றிய காலத்தில் பல நாடகங்களை நடத்தியவர். தேசிய சிந்தனைகளும் கலை ஆர்வமும் கொண்டிருந்த மனோகர் மேடை நாடகங்களில் நடிப்பதில் ஆர்வம் உள்ளவராக இருந்தார். தனது கனவுகளைப் பின் தொடரத் தெரிந்த அக்கலைஞன் "இலங்கேஸ்வரன்" என்னும் நாடகத்தில் நடித்து அழியாப் புகழ் பெற்றான்.
நாடகத்தின் மீதான காதலால் 'நேஷனல் தியேட்டர்ஸ்' நாடக நிறுவனத்தை 1954-ல் தொடங்கினார். 'இன்ப நாள்', 'உலகம் சிரிக்கிறது' ஆகிய சமூக நாடகங்களை அரங்கேற்றினார். பின்னர் பிரம்மாண்ட இதிகாச, வரலாற்று நாடகங்களை அரங்கேற்றினார். ராவணன், சூரபத்மன் உள்ளிட்ட எதிர்மறைக் கதாபாத்திரங்களின் மறுபக்கமான ஆக்கபூர்வ அம்சங்களை அற்புதமாகப் படம் பிடித்துக்காட்டும் வகையில் நாடகங்களைப் படைத்தார். சிறப்பான மேடை அமைப்பும், தந்திரக் காட்சிகளும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.
பிரம்மாண்டமாக தயாராகியிருந்த 'இலங்கேஸ்வரன்' நாடகம், மக்களிடம் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி நஷ்டமாகிவிடுமோ என்று பயந்த மனோகர், காஞ்சி பரமாச்சாரியாரை சந்தித்தார். அவர் ''கவலைப்படாதே'' என்று கூறி ஆசீர்வதித்து அனுப்பினார்.
விரைவிலேயே, இலங்கையில் இந்த நாடகத்தை தொடர்ந்து 21 நாட்கள் நடத்தும் வாய்ப்பு தேடி வந்தது. நாடகத்தைப் பார்த்து வியந்த மக்கள், இவருக்கு 'இலங்கேஸ்வரன்' என்ற பட்டத்தைக் கொடுத்து கவுரவித்தனர். இவரது நாடகங்களிலேயே அதிக முறை (1,800-க்கு தடவைக்கு மேல்) மேடையேறியதும் இந்த நாடகம்தான்.
'சாணக்கிய சபதம்', 'சூரபத்மன்', 'சிசுபாலன்', 'இந்திரஜித்', 'நரகாசுரன்', 'சுக்ராச்சாரியார்' உள்ளிட்ட நாடகங்களும் குறிப்பிடத்தக்கவை. சொன்ன நேரத்துக்கு நாடகம் தொடங்கிவிட வேண்டும்; அனைத்தும் துல்லியமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். ஒவ்வொரு நாடகத்துக்கும் 30 நாட்கள் ஒத்திகை பார்ப்பாராம்.
"இசைப் பேரறிஞர்", நாடகக் காவலர் உட்பட பல விருதுகள், பட்டங்கள் பெற்றவர். தமிழ் நாடகத் துறையில் ஒரு திருப்புமுனையை உருவாக்கிய ஆர்.எஸ்.மனோகர் 81-வது வயதில் (2006) மறைந்தார்.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
