#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று. செப்டம்பர் 29
1967 - எஸ்டிஆர்(நாணயக் குறியீடு எக்ஸ்டிஆர்) என்றழைக்கப்படும், அந்நியச் செலாவணி கையிருப்பு நிர்ணயத் தளர்வு முறையை உருவாக்க, பன்னாட்டு நாணய நிதியத்தின்(ஐஎம்எஃப்) அவை முடிவெடுத்த நாள்
பொதுவாக ஒரு நாட்டின் காகித நாணயத்திற்கு, அந்த நாட்டிற்குள்தான் மதிப்பிருக்கும். பண்டைய கால தங்க, வெள்ளி நாணயங்களில், அந்த உலோகத்திற்கே மதிப்பு இருக்கும். ஆனால், இந்த காகிதப் பணம், அதற்கு மாற்றாக அவ்வளவு தொகை வழங்கப்படும் என்ற உறுதிமொழியின் அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்படுவதால் ஃபியட்(உறுதிமொழி) கரன்சி என்றழைக்கப்படுகிறது. அப்படியான நிலையில், உதாரணமாக, இந்திய ரூபாயைக் கொண்டு மற்றொரு நாட்டில் எதையும் வாங்க முடியாது என்பதால், அந்நிய வணிகத்தில் தங்கம் போன்ற உலோகங்களே விலையாகப் பெறப்படும். தங்கத்தின் விலையோடு இணைக்கப்பட்ட பன்னாட்டு பரிவர்த்தனை முறை 1880ல் தோன்றியபோது, ஜெர்மெனி, ஸ்வீடன்-நோர்வே, ஃபின்லாந்து, டென்மார்க், ஆஸ்திரிய-ஹங்கேரி, கனடியக் கூட்டமைப்பு, பெல்ஜியம் ஆகியவையே மிகப்பெரிய அளவுக்குத் தங்கத்தைக் கையிருப்பாகக் கொண்டிருந்தன. இரண்டாம் உலகப்போரின் ஆயுத வியாபாரத்தில் பெரும்பகுதித் தங்கம் அமெரிக்காவிடம் சென்றுவிட, 35 டாலருக்கு ஒரு அவுன்ஸ் தங்கம் மாற்றித் தரப்படும் உறுதிமாழியுடன், டாலரையே பயன்படுத்தும் ப்ரட்டன் உட்ஸ் திட்டத்தை அமெரிக்கா திணித்தது. அதனால், ஒவ்வொரு நாடும் அச்சடிக்கும சொந்த நாணயத்திற்கு இணையான மதிப்பிற்கு, தங்கத்தைக் கையிருப்பு வைத்திருப்பதற்குப் பதிலாக டாலரை வைத்துக்கொண்டன. தங்கத்தின் மதிப்பைவிட ஏராளமான டாலர்களை அச்சடித்தபின், மாற்றித்தர இயலாது என்று 1973இல் அமெரிக்கா அறிவித்தது. டாலர் நெருக்கடியில் இருந்ததால் இதனை எதிர்பார்த்த ஐஎம்எஃப், 1967இலேயே முடிவெடுத்து, 1967இல் டாலருக்கு மாற்றாக இந்த ஸ்பெஷல் ட்ராயிங் ரைட்ஸ் என்பதை உருவாக்கியது. எளிமையாகச் சொன்னால், வங்கிகள் நமக்கு அளிக்கும் ஓவர்-ட்ராஃப்ட் வசதியைப் போன்றது இது. அதனால் பணமாக இன்றி, உத்தரவாதமாக வழங்கப்படும் இது, உலக வணிகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் 16 நாடுகளின் நாணயங்களின் மதிப்பைக் கொண்டு உருவாக்கப்பட்டது. அந்நியச் செலாவணி கையிருப்பைத்தாண்டி, இந்த வரம்புவரை வணிகத்தில் ஈடுபடுவதற்கான உத்தரவாதமான இது, ஒவ்வோர் ஐந்தாண்டுகளுக்கும் மறுபரிசீலனை செய்து மாற்றியமைக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாணயங்கள் யூரோ என்று ஒருங்கிணைந்தபின் நான்கு நாடுகளின் நாணயங்களை(டாலர், யூரோ, பவுண்ட், ஜப்பானிய யென்) அடிப்படையாகக் கொண்டிருந்த இது, சீன ரென்மின்பியின் வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு, 2016இல் அதனையும் இணைத்துக்கொண்டு, ஐந்து நாணயங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
(அப்படியே...: உலகிலேயே மிக அதிக வணிகப் பற்றாக்குறை கொண்ட நாடாகவும், மிகக்குறைந்த அந்நியச் செலாவணி கையிருப்பு கொண்டுள்ள நாடுகளில் குறிப்பிடத்தக்கதாகவும் அமெரிக்கா இருக்கிறது. மிக அதிக வணிக உபரி கொண்ட நாடுகளில் முதலிடம் சீனாவுக்குத்தான்!)
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
