ShareChat
click to see wallet page
#உவமைக்_கவிஞர்_சுரதா ”தேவையான ஆணி எது? தேவையில்லாத ஆணி எது?" என்னும் கேள்வியின் வழியே “ஆணியே புடுங்க வேண்டாம்” என்ற பேச்சுத் தொடர் வடிவேலினால் புகழ்பெற்றது. அவர் கூறுவதற்கும் முன்பாகவே ’தேவையில்லாத ஆணியைப் பிடுங்கியவர்’ பாரதிதாசன் வழிவந்த கவிஞர் என்றால் வியப்பாக இருக்குமில்லையா? ஆம். ஓர் அஞ்சலட்டையின் இறுதியில் சுப்புரத்தினதாசன் என்று தம் பெயரை எழுதுவதற்கு இடம் போதவில்லை. அதனைச் சுருக்கி சு.ர.தா. என்று எழுதினார். காலப்போக்கில் அவ்வாறே தம் பெயரை எழுதத் தொடங்கினார். பெயரெழுத்துகளுக்கு நடுவில் “எதற்கு இந்தத் தேவையில்லாத ஆணிகள்?” என்று கருதியவர் அவற்றைப் பிடுங்கிவிட்டார். ஆணி பிடுங்கப்பட்ட அப்பெயரே ‘சுரதா’ என்று நிலைத்தது. காதல் எப்படிப்பட்டது? வள்ளுவரைப் பின்பற்றிச் சொல்கிறார் சுரதா, “மலரினும் மெல்லியது காதலே”. காதல் தலைவி தன் தலைவனைப் பார்க்கிறாள். மகிழ்ச்சி மேலிடுகிறது. அதை அவனிடமே சொல்கிறாள் - இப்படி, “சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வதுபோலே உனைக்கண்டு உள்ளம் மகிழ்ந்தேனே”. சுரதாவின் இந்தப் பாடல் வரிகளின் வயது 60. ஆனால் இன்னமும் இளமையாகவே இருக்கிறது. காலையில் சூரியனை பார்த்து தாமரை மலரும். அந்தியில் கருக்கலைப் பார்த்து மல்லிகை மலரும். இரவில் நிலவைப் பார்த்து அல்லி மலரும் - அறிவோம் நாம். நாளும் இவை நடைபெறத்தான் செய்கின்றன. ஆனால் எப்போதோ மேகம் கருத்து, மழை பெய்யும் காலத்தில் மின்னல் வெட்டுகிறது. அதுவும் ஓரிரு மணித்துளிகளில் மறைந்து விடுகிறது. அந்த ஓரிரு மணித்துளிகளில் பட்டுத் தெறிக்கும் மின்னலின் சுடரைக்கண்டு தாழை மலர்கிறது, என்ற அறிவியல் உவமையைக் காதலுக்குள் நுழைக்கிறார் கவிஞர் சுரதா. அதனால்தான் அவர் ‘உவமைக் கவிஞர்’ என்று அழைக்கப்பட்டார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரின் முதன்மை மாணாக்கருள் சுரதாவும் ஒருவர். 1941ஆம் ஆண்டு சனவரி திங்கள் 14ஆம் நாள் பாவேந்தரை முதல்முதலாகச் சந்தித்தார் சுரதா. பாவேந்தரின் புகழ்பெற்ற ‘புரட்சிக்கவி’ பாவியம், நாடகமாக நடத்தப்பட்டபோது அதில் அமைச்சராக நடித்தவர் சுரதா. அந்நாடகம் தந்தை பெரியார், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடத்தப்பட்டது. 1947ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த ‘பொன்னி’ இதழில் பிரசுரமான சுரதாவின் ‘சொல்லடா’ எனும் கவிதை அவரை அடையாளம் காட்டியது. ‘தலைவன்’ என்ற இதழின் ஆசிரியர் நாராயணன்; அவ்விதழின் துணை ஆசிரியர் சுரதா. இதுவும் புதுக்கோட்டையில் வெளிவந்தது. அக்காலகட்டத்தில் திருலோக சீதாராம் என்பவர் நடத்திய ‘சிவாஜி’ இதழில் இவரின் பல கவிதைகள் வெளிவந்தன. சுரதாவின் முதல் நூல் ‘சாவின் முத்தம்’ இது 1946 மார்ச் திங்களில் வெளியானது. 1954இல் கலைஞரின் முரசொலி இதழில் சுரதாவின் கவிதைகள் வெளிவந்தன. 1955இல் ‘காவியம்’ எனும் வார இதழை நடத்தினார். 1956இல் ‘பட்டத்தரசி’ எனும் பாவிய நூலை வெளியிட்டார். 1958ஆம் ஆண்டு ‘ஊர்வலம்’ 1963ஆம் ஆண்டு ‘விண்மீன்’ 1964ஆம் ஆண்டு ‘சுரதா’ - ஆகிய கவிதை இதழ்களை நடத்தினர். 1974ஆம் ஆண்டு சுரதாவின் தொகுக்கப்பட்ட கவிதை நூல் ‘சுவரும் சுண்ணாம்பும்’ வெளியானது. இக்கவிதைகள் ஆனந்த விகடனில் வெளிவந்தன, வரவேற்பையும் எதிர்ப்பையும் சந்தித்தன. 1966ஆம் ஆண்டு இவர் ‘தமிழ்க் கவிஞர் மன்ற’த்தின் தலைவரானார். பி.யு. சின்னப்பா நடித்த ‘மங்கையர்க்கரசி’ என்ற படத்திற்குக் கதை வசனம் எழுதும் வாய்ப்பு வருகிறது. மங்கையர்க்கரசி, அமரகவி, ஜெனோவா ஆகியவை சுரதா பங்காற்றிய திரைப்படங்கள். தியாகராஜ பாகவதர் பிற்காலத்தில் எடுக்க முயன்ற ‘புதுவாழ்வு’ என்ற திரைப்படத்திற்கும் சுரதாவே எழுதினார். பத்துப் படங்கள்வரைக்கும் கதை வசனம் எழுதியிருப்பினும் அவற்றில் மேற்சொன்னவை உள்ளிட்ட சில படங்களே வெளிவந்தன. சின்னப்பாவிற்கும் பாகவதருக்கும் என்ன வேறுபாடு என்பதற்குச் சுரதா தரும் பதில் சுவையானது. “ஒரு ரூபாய் கிடைத்தால் பாகவதர் ஓர் ஆப்பிள் வாங்கிச் சாப்பிடுவார். சின்னப்பா ஒரு ரூபாய் மொத்தத்திற்கும் பூவன் பழங்கள் வாங்கிச் சாப்பிடுவார்.” அக்காலத்தின் திரைப்படங்களில் மிக இனிமையான பாடல்கள் எழுதுவபர்களில் கு.சா.கிருஷ்ணமூர்த்தியும் ஒருவர். அவர்தான் சுரதாவை திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர். ‘மங்கையற்கரசி’ எனும் திரைப்படம் இவர் உரையாடல் எழுதி வெளிவந்த படம். “கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே, இன்ப காவியக்கலையே ஓவியமே” - “அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே” போன்ற சுரதாவின் பாடல்கள் இன்றும் அவரை நினைவூட்டிக் கொண்டிருக்கிறன. சுரதா பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருக்கிறார். 1969ஆம் ஆண்டு இவரின் ‘தேன்மழை’ நூலுக்கு தமிழக அரசின் பரிசு கிடைத்தது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் இந்நூலுக்கு 1 லட்ச ரூபாய் பரிசுடன், இராசராசன் விருதும் வழங்கியுள்ளது. 1972இல் இவருக்கு தமிழக அரசு ‘கலைமாமணி’ விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. 1982ஆம் ஆண்டு இவரின் மணிவிழா நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் கொண்டாடப்பட்டது. அதே ஆண்டில் குன்றக்குடி அடிகளார் சுரதாவுக்கு ‘கவியரசர்’ பட்டத்தை வழங்கியுள்ளார். 1987ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர் இவர். 1990ஆம் ஆண்டு கலைஞர் இவருக்கு ‘பாரதிதாசன் விருது’ வழங்கிச் சிறப்பித்தார். 2007ஆம் ஆண்டு இவரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன. 2008ஆம் ஆண்டு சென்னையில் கவிஞர் சுரதாவுக்கு சிலை நிறுவப்பட்டது. அச்சிலையை கலைஞர் திறந்து வைத்தார்.  தேன்மழை  சுவரும் சுண்ணாம்பும்  அமுதும் தேனும்  எச்சில் இரவு  சாவின் முத்தம்  தமிழ்ச் சொல்லாக்கம்  பட்டத்தரசி  பாவேந்தரின் காலமேகம் - போன்ற பல்வேறு நூலை இவர் எழுதியிருக்கிறார். தஞ்சை மாவட்டம், பழையனூரில் திருவேங்கடம் - செண்பகம் அம்மையாரின் மகனாகப் 1921ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் நாள் கவிஞர் சுரதா பிறந்தார். இவரின் இயற்பெயர் இராசகோபாலன். தன் 84ஆம் வயதில் உடல் நலிவுற்றார். “பிறந்தோம் என்பது முகவுரையாம் பேசினோம் என்பது தாய்மொழியாம் மறந்தோம் என்பது நித்திரையாம் மரணம் என்பது முடிவுரையாம்” - இப்படி நிலையாமையைச் சொன்ன உவமைக் கவிஞர் சுரதா அவர்கள், 2006ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 20ஆம் நாள் நிலையற்ற வாழ்வில் இருந்து விடைபெற்றார் - மரணத்தைத் தழுவிக் கொண்டு. மறக்கமுடியுமா இவரை நாம் மறக்கமுடியுமா #🎬 சினிமா #📷நினைவுகள் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #😍Old மூவிஸ்
🎬 சினிமா - NATESAN கவிஞர்சுரதா a NATESAN கவிஞர்சுரதா a - ShareChat

More like this