நவராத்திரி பண்டிகையானது, ஒரு மனிதனுக்கு வீரம் (துர்கா), செல்வம் (லட்சுமி), ஞானம் (சரஸ்வதி) ஆகிய மூன்றும் அவசியம் என்பதை உணர்த்துகிறது. முதல் 3 நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியையும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபடுகிறோம்.
புராணங்களின்படி, நவராத்திரியின் 9-வது நாளில், அன்னை பராசக்தி அனைத்து தெய்வங்களிடம் இருந்தும் பெற்ற ஆயுதங்களுக்குப் பூஜை செய்து வழிபட்டதை குறிக்கும் விதமாகவே ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இதை நினைவுபடுத்தும் வகையில், நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும், நம் வாழ்வாதாரத்துக்கு ஆதாரமாக இருக்கும் பொருட்கள் மற்றும் கருவிகளை வைத்து இந்த நாளை நாம் கொண்டாடுகிறோம்.
ஆயுத பூஜைக்கான வழிபாட்டு முறைகள் :
வீட்டை தூய்மைப்படுத்துதல் : பூஜை தொடங்கும் முன் வீடு முழுவதும் சுத்தமாக துடைத்து, நிலை, கதவுகள், ஜன்னல்கள் அனைத்தையும் சுத்தம் செய்து, திருநீறு, சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும். மாவிலை தோரணங்கள் கட்டுவது விசேஷம்.
பூஜை அறை : பூஜை அறையை சுத்தம் செய்து, சுவாமி படங்களுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, பூக்களால் அலங்கரிக்க வேண்டும். ஞானத்தின் தெய்வமான சரஸ்வதி தேவியை வழிபடுவதற்கு முன்பு, வினை தீர்க்கும் விநாயகரை வணங்குவது அவசியம். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, குங்குமப் பொட்டு, அருகம்புல் வைத்து வழிபட்ட பின்னரே சரஸ்வதியை வணங்க வேண்டும்.
தொழிலுக்கு மரியாதை : ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற சொல்லுக்கு ஏற்ப ஆயுத பூஜை அன்று நம்முடைய தொழில் கருவிகளை வணங்க வேண்டும். பூஜை அறையில் புத்தகங்கள், பேனாக்கள், வீட்டு உபயோக கருவிகளான சுத்தி, அரிவாள்மனை போன்றவற்றை சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரிக்கவும்.
தொழில் நிறுவனங்கள், தங்கள் தொழில் சார்ந்த இயந்திரங்களுக்குப் பொட்டு வைத்து அலங்கரித்து வணங்க வேண்டும். வாகனம் வைத்திருப்பவர்கள் தங்கள் வாகனங்களில் சந்தனத்தை தெளித்து, பூ வைத்து வழிபடலாம்.
நைவேத்தியம் : நைவேத்தியத்துக்காக வாழை இலையில் பொரி கடலை, அவல், வடை, பாயாசம் என பல வகையான பழங்களை வைத்துப் பூஜையை தொடங்க வேண்டும். பூஜை செய்த இடங்களில் மணியடித்து, நீரினால் 3 முறை சுற்றி நைவேத்தியம் செய்து, ஆயுதங்கள் மற்றும் புத்தகங்களுக்கும் நிவேதனம் செய்த பிறகு, சூடம் ஏற்றி தீபாராதனை செய்து வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். பின்னர் விபூதி, குங்குமம் மற்றும் பொரிக்கடலை ஆகியவற்றை அனைவருக்கும் விநியோகிக்க வேண்டும்.
பூஜை செய்ய உகந்த நேரம் எது..?
சரஸ்வதி பூஜை நேரம் (அக்டோபர் 1, புதன்கிழமை) : இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. எனவே, காலை 9 மணிக்கு மேல் 12 மணிக்குள் பூஜை செய்ய உகந்த நேரம் ஆகும்.
அதேபோல், நவராத்திரி விழாவின் நிறைவாக 10-வது நாளில் அம்பிகை மகிஷனை வதம் செய்து வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விஜயதசமி அக்டோபர் 2ஆம் தேதியான வியாழன் அன்று வருகிறது.
#ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் #நவராத்திரி
