#மறைந்த பாடகர் ஜுபீன் கார்க்,
ஒரு பாடகனின் மரணத்துக்காக அசாம் அழுது புரள்கிறது.
மூன்று நாள்களாக அந்த மாநிலத்தில் வாழ்க்கை நிலைகுத்திக் கிடக்கிறது. கடைகள் திறக்கவில்லை. வீதிகளில் அவரது பாடலைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஜுபீன் கார்க், பிறப்பால் பார்ப்பனர். ஆனால், தனக்கு சாதியில்லை, மதமில்லை, கடவுள் இல்லை என்று அறிவித்துக்கொண்டவர். பூணூலை அகற்றிக்கொண்டவர். எளிய மக்களோடு தன்னை இணைத்துக் கொண்ட கலைஞர். அதிகாரத்துக்கு எதிராகப் பேசத் தயங்காதவர்.
நடிகர், இசையமைப்பாளர், கொடையாளர் என்று பல தளங்களிலும் செயல்பட்டவர். பல்வேறு விதமான கருவிகளை இசைக்கத் தெரிந்தவர். கோவிட் பெருந்தொற்றின்போது குவஹாத்தியில் உள்ள தனது இரண்டடுக்கு வீட்டை, மருத்துவ மையமாக்கத் திறந்துவிட்டவர்.
40 மொழிகளில் 38 ஆயிரம் பாடல்கள் பாடியவர். தமிழிலும்கூட 'கண்கள் என் கண்களோ' என்ற இசைத் தொகுப்புப் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
பாலிவுட்டிலும் சிறிதுகாலம் செயல்பட்டாலும், மீண்டும் அசாமி மொழிக்கே திரும்பிவந்தவர். அப்போது அவர் கூறியது: பாலிவுட்டில் காட்டும் ஆட்டிடியூட் ரொம்ப அதிகம். அசாமில் நான் அரசனைப் போல வாழ்வேன். என்பாடல் வேண்டுமென்றால், அசாமுக்கு வாருங்கள்.
உல்ஃபாக்கள் செல்வாக்கு மிகுந்திருந்த காலத்தில் இந்தி, வங்க மொழிகளில் பாடுவதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், இந்த உத்தரவுகளை அவர் துணிந்து எதிர்த்தார்.
பண்பாட்டுப் பயணமாக சிங்கப்பூர் சென்றிருந்தவர், கடலில் ஸ்கூபா முக்குளிப்பு செய்தபோது சிக்கல் ஏற்பட்டு இறந்துவிட்டார். 52 வயதில் இந்த எதிர்பாராத மரணம் நேர்ந்திருக்கக்கூடாது. ஆனால், அவர் தன்வாழ்வை வாழ்ந்திருக்கிறார்.
இத்தகைய சுதந்திர சிந்தனையாளர்களுக்கே உரியமுறையில் பல சர்ச்சைகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறார். ஒவ்வொன்றையும் ஆராய்ந்து எடைபோடும் அளவுக்கு நமக்கு விவரம் தெரியாது.
ஆனால், ஒரு கலைஞனுக்காக ஒரு மாநிலமே அழுகிறது எனில் இந்தக் குறள்தான் நினைவுக்கு வருகிறது:
உள்ளத்தால் பொய்யாதொழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்.
அவரது மரணம் பற்றிய ஒரு செய்தியை இந்துஸ்தான் டைம்ஸ் இப்படி முடித்திருக்கிறது: "அவர் வெறும் சூப்பர்ஸ்டார் மட்டுமல்ல, அசாமின் ஆன்மாவும், குரலும் மனச்சான்றும் ஆவார்".
