இந்துக்களின் முக்கிய பண்டிகையாக கார்த்திகை தீபம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தீப ஒளியின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் ஒரு பண்டிகையாகும். சிவன் மற்றும் திருமால் இருவருக்கு இடையே யார் பெரியவர் என்கிற சர்ச்சை ஏற்பட்டபோது சிவன் ஜோதிப் பிழம்பாக நின்ற நாளே கார்த்திகை தீபமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீப ஒளியானது நம் வாழ்வில் உள்ள இருளை நீக்கி, ஞானம் மற்றும் செல்வத்தை கொண்டு வரும் என்கிற நம்பிக்கையுடன் இந்த பண்டிகையானது கொண்டாடப்பட்டு வருகிறது.
கார்த்திகை தீபம் 2025 தேதி மற்றும் நேரம்
குறிப்பாக தமிழ்நாட்டில் இது சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இந்த ஆண்டு கிருத்திகை நட்சத்திரம் டிசம்பர் 3 மாலை 04:48 மணிக்கு தொடங்கி டிசம்பர் 4ஆம் தேதி பிற்பகல் 03:08 வரை நீடிக்கிறது. எனவே தீபம் ஏற்றுவதற்கு டிசம்பர் 3 ஆம் தேதி மாலை 6:00 மணி என்பது பொருத்தமான நேரமாகும். சில பஞ்சாங்கங்களின்படி கார்த்திகை நட்சத்திரம் நீடிப்பதன் அடிப்படையில் டிசம்பர் 4 வியாழக்கிழமை அன்றும் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுவது டிசம்பர் 3 என்பதால் இந்த நாளே தீபத்திருநாள் கொண்டாடுவதற்கு உகந்த நாளாகும்.
கார்த்திகை தீபம் வழிபாட்டு முறைகள்
திருக்கார்த்திகை தினத்தன்று காலையில் நீராடி, உபவாசம் இருந்து மாலையில் தீபம் ஏற்றிய பிறகு உணவருந்துவது சிறந்தது. நாள் முழுவதும் சிவபெருமான் அல்லது முருகப்பெருமானை நினைத்து விரதம் இருக்கலாம். பொதுவாக மாலை வேளையில் சூரியன் மறைந்த பின்னர் ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் தீபம் ஏற்றுவது உகந்தது. திருவண்ணாமலைகில் தீபம் ஏற்றிய பிறகு நம் வீடுகளில் தீபம் ஏற்றலாம். தீபம் ஏற்றிய பின்னர் முருகப் பெருமான் விநாயகரை மனதார வழிபடலாம். கந்த சஷ்டி கவசம், சிவபுராணம் உள்ளிட்ட பக்திப் பாடல்களை பாடுவது சிறந்தது. பொரி உருண்டை, அப்பம், அவல், பாயாசம் போன்றவற்றை தயார் செய்து இறைவனுக்குப் படைத்து குடும்பத்தாருக்கும், அண்டை வீட்டாருக்கும் கொடுக்கலாம்.
தீப தினத்தன்று எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்?
கார்த்திகை தினத்தில் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வண்ணம் குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றலாம். தீபம் ஏற்றுவதற்கு அகல் விளக்குகள் மிகவும் சிறந்தது. கடைகளில் கிடைக்கும் செயற்கையான விளக்குகளை விடுத்து, மண் விளக்குகளை வாங்கி அதை சுத்தம் செய்ய வேண்டும். முதல் நாளே விளக்குகளை வாங்கி வந்து அதை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் சுத்தப்படுத்தி காயவிட வேண்டும். பின்னர் அவற்றிற்கு மஞ்சள் குங்குமம் வைத்து நல்லெண்ணெய் தீபமிட்டு வீடு முழுவதும் விளக்குகளை ஏற்றலாம். சமையலறை, படுக்கையறை, மொட்டை மாடி, நிலை வாசல் என்று அனைத்து இடங்களிலும் தீபம் வைக்க வேண்டும்.
விளக்கேற்றும் முறை
தீபத்திருநாளன்று இத்தனை விளக்குகள் தான் ஏற்ற வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. உங்களால் எத்தனை தீபம் ஏற்ற முடியுமோ அத்தனை தீபங்கள் ஏற்றலாம். பூஜை அறை, வாசல், கொல்லைப்புறம், துளசி மாடம், ஜன்னல்கள் என அனைத்து இடங்களிலும் 5,7,9,11 என்று ஒற்றைப்படை எண்ணிக்கையில் தீபம் ஏற்றலாம். வாசலின் இருபுறமும் தலா ஒன்று, வீட்டின் நடுப்பகுதியில் ஒன்று, துளசி மாடத்தில் ஒன்று, பூஜை அறையில் மூன்று அல்லது ஐந்து தீபங்கள் ஏற்றுவது சிறப்பு. அனைத்து தீபத்திற்கும் நெய் இட முடியாதவர்கள் ஒன்று அல்லது இரண்டு தீபங்களுக்கு மட்டும் நெய்யை பயன்படுத்தலாம். விளக்கிற்கு அடியில் வாழை இலை, பூவரச இலை அல்லது தட்டு போன்றவற்றை பயன்படுத்துவது சிறந்தது.
அறுகோண தீபம்
கிருத்திகை நட்சத்திரம் என்பது முருகப்பெருமான் அவதரித்த நட்சத்திரம் என்பதால் அறுகோண தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பானதாகும். மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை தீபம் ஏற்றப்படும் காட்சியை பார்த்து முடித்த பின்னர் வீட்டு வாசலில் நட்சத்திரம் வரைந்து அதன் ஆறு முனைகளிலும் அறுகோண தீபம் ஏற்றி 'சரவணபவ' என்று எழுதி வழிபடலாம். அறுகோண தீபம் ஏற்றி வழிபடுவது குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியத்தையும், திருமணமாகாதவர்களுக்கு திருமண வரத்தையும் நல்கும் என்று கூறப்படுகிறது.
இறைவனின் அருளைப் பெறுங்கள்.!
வீட்டில் பூஜைகளை முடித்த பின்னர் கோயில்களில் நடக்கும் திருக்கார்த்திகை சிறப்பு பூஜைகளிலும், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளலாம். சொக்கப்பனை நிகழ்வு என்பது இறைவன் மனிதர்களுக்கு மட்டுமல்ல உலகில் வாழும் நாய், பூனை போன்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் மோட்ச பாதை கிடைக்க வேண்டும் என்று இறைவன் காட்டும் ஒளிப் பாதையை குறிக்கும் நிகழ்வாகும். இந்த புனித நாளில் முறையாக விரதம் இருந்து தீபமேற்றி வழிபட்டு இறைவன் அருளை முழுமையாகப் பெறுங்கள். #🪔திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றப்பட்டது💫 #இன்று பரணி 🔥🔥🔥 தீபம் #🙏🔥பரணி தீபம்🔥🙏 #🙏ஏகாதசி🕉️ #🙏ஆன்மீகம்

