திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த பிரியா (40) என்பவருக்கு பேய் பிடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பேய் ஓட்டுவதற்காக திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு பேய் விரட்ட தனது மகள், மகனை அழைத்து கொண்டு பிரியா 3 பேரும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வீட்டில் யாருக்கும் சொல்லாமல் புறப்பட்டு சென்றுள்ளனர்.
பேய் விரட்ட சென்ற பெண்
அப்போது அங்கு பேய் விரட்ட சென்ற இடத்தில் அங்கேயே தங்கி பேய் விரட்டி அடிக்க கோவில் நிர்வாகத்தினர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கேயே 3 பேரும் தங்கி உள்ளனர். கோவில் வளாகத்தில் முடி சடை போட்ட போலி சாமியாடி பெண் ஒருவர் சந்தேகப்படும் படி நடந்து கொண்டதாக தெரிகிறது. பிரியாவின் மகள் கல்லூரி படிப்பதால் நம்மை கடத்தி விடுவார்கள் என்று எண்ணி அந்த கோவில் வளாகத்தை விட்டு புறப்பட்டு செல்ல முடிவு செய்துள்ளார்.
மூன்று நாட்களாக காட்டில் தவிப்பு
அப்போது 3 பேரும் இடம் மாறி மாறி சென்ற போதும் அந்த சடை பின்னல் போட்ட பெண் சாமியாடி பின் தொடர்ந்து சென்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவி தனது தாய் பிரியா மற்றும் 14 வயது தம்பியை அழைத்து கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்து உள்ளார். ஓட்டம் பிடித்ததில் 3 பேரும் புதுப்பாளையம் பகுதியில் உள்ள காட்டுக்குள் சென்றுள்ளனர். 3 பேரும் 2 இரவு 3 பகல் காட்டுக்குள்ளேயே நடந்து நடந்து ஓடையில் ஓடிய தண்ணீரை குடித்து ஓடை வழியாக ஓடி உள்ளனர். இந்த நிலையில் ஜோலார்பேட்டையில் உள்ள பிரியாவின் கணவர் புகழேந்தி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் காணவில்லை என்று ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் தேட ஆரம்பித்து உள்ளனர்.
மாடு மேய்க்க சென்ற நபர் அதிர்ச்சி
இந்நிலையில், காட்டுக்குள் எவ்வித தொடர்பு சாதனமும் இல்லாத 3 பேரும் மிகுந்த பசியில் இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் காட்டுக்குள் சுற்றிய களைப்பில் ஆற்று ஓடை அருகே அமர்ந்து, “யாராவது இருக்கீங்களா காப்பாத்துங்க” என்று சிறுவன் கத்தி சத்தம் போட்டு உள்ளான். அப்போது அங்கு மாடு மேய்க்க சென்ற ஒரு நபர் 3 பேரையும் கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்களுக்கு உடை கொடுத்து, காலணி கொடுத்து நடந்ததை கேட்டு அறிந்து அருகில் உள்ள புதுப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் புதுப்பாளையம் போலீசார் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்து அங்கு சென்ற ஜோலார்பேட்டை போலீசார் 3 பேரையும் மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
பின்னர் வீட்டிற்கு சென்ற 3 பேரும் திடீர் என்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காட்டில் நடந்த காரணத்தினால் கால்களில் காயத்துடன் கல்லூரி மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் வீடியோ எடுப்பது செய்தியாளர் என்று அறிந்து கொண்டு மேற்கொண்டு எவ்வித தகவலும் அளிக்க மறுத்து விட்டனர். தாய் மற்றும் பிள்ளைகள் பேய் ஓட்டுவதற்கு சென்று காட்டுக்குள் ஓடி வீடு திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #📺டிசம்பர் 2 முக்கிய தகவல் 📢

