ShareChat
click to see wallet page
search
ஒரு வகையில் பார்த்தால் சலிப்பாக இருக்கிறது! எத்தனை முறை தான் இதே போன்ற காட்சிகளையும், வசனங்களையும் பார்த்துக் கொண்டே இருப்பது? இவ்வாறு நடக்கும் போதெல்லாம் நானும், என்னைப் போன்றவர்களும் பொங்கி எழுந்து திமுக அரசு மீதுள்ள கசப்புணர்வுகளையெல்லாம் கடந்து தமிழக அரசின் பக்கம் நின்று ஆளுநரை வருத்தெடுத்துள்ளோம். ஆளுநர் சொல்வதில் பல உண்மைகள் இருக்கலாம். அந்த உண்மைகளை என்னைப் போன்ற பத்திரிகையாளர்களும், இங்குள்ள எதிர்கட்சித் தலைவரும் தான் பேச முடியுமே அன்றி ஆளுனர் பேசுவது அருவெறுப்பானது. இந்தக் கருத்தில் தான் நான் இப்போதும் நிற்கிறேன். ஆனால், தொடர்ந்து தமிழக அரசுக்கும், ஆளுநருக்குமான மோதலை கூர்மையாக அவதானித்து வருகையில் மேற்படி ஆளுநர் சட்டசபையில் நடந்து கொள்ளும் போதுதெல்லாம் - அதிகார அத்துமீறல் என்று தெரிந்தே அவர் செய்வதும், இவர்கள் ஆவரை தொடர்ந்து செய்ய அனுமதிப்பதும் – திமுக அரசின் மீதான மக்களின் கோபத்தை மடைமாற்றி அவர்களுக்கு செல்வாக்கை பல மடங்கு உயர்த்தி தருகிறது என்பதை உணர முடிகிறது. ‘’அதனால் தான் முதல்வர் ஸ்டாலின் ஒருமுறை தயவு செய்து இந்த ஆளுநரை மாற்றிவிடாதீர்கள்,. அவர் எங்களுக்கு நல்லது தான் செய்து கொண்டிருக்கிறார். இதை நான் மத்திய அரசுக்கு வேண்டுகோளாகவே வைக்கிறேன்’’ என்றார். ரொம்ப சிம்பிளாக நாம் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். தெலுங்கானவில் தமிழிசை தராதராமின்றி செயல்படுவதைக் கண்டு கொதித் தெழுந்த அன்றைய முதல்வர் சந்திரசேகரராவ் அவர்கள், ‘’ஆளுநரை அழைக்காமலே நான் சட்டசபையை நான் நடத்துகிறேன்’’ என்று நடத்திக் காண்பித்தார். அதனால் ஒன்றும் அவர் ஆட்சிக்கு கேடு விழைந்திடவில்லை. மாறாக, தெலுங்கானாவின் தன்மானத்தை அவர் உரிய நேரத்தில் வெளிப்படுத்தினார் என்றே புரிந்து கொள்ளப்பட்டது. அதுமட்டுமின்றி, தமிழிசை எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்கு மாவட்ட ஆட்சியரும், காவல்துறை அதிகாரியும் போய் நின்று வரவேற்கும் மரபுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். அத்துமீறலில் திளைத்த தமிழிசை தன்னை அனாதையாக உணர்ந்து புலம்பியதால் அவருக்கு பாண்டிச்சேரிக்கும் பொறுப்பு தரப்பட்டது. அவர் பாண்டிச்சேரியிலேயே பம்மிக் கொண்டார். இங்கே என்ன நடந்து கொண்டுள்ளது? ஆளுநர் அடிக்கடி குண்டக்க,மண்டக்க பேசப் பேச ஆளும் தரப்பில் உற்சாகம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ‘’ஆளுனர் அளவுக்கு மீறி செலவு செய்கிறார் ‘’ என்று அம்பலப்படுத்திய பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் அமைதிபடுத்தப்பட்டு, அதற்கு பிறகு அவர் செலவுக்கு முன்னைக் காட்டிலும் அதிகமாக அள்ளிக் கொடுக்கப்பட்டது. நாளும், பொழுதும் ஆளுநர் மாளிகை திருவிழா கோலம் காண்கிறது. தன் முன்னே பாடுகின்ற, ஆடுகின்ற, சொற்பொழிவாற்றுகின்ற கலைஞர்களுக்கும், சொல்வாணர்களுக்கும் பரிசில்களை அள்ளி, அள்ளித் தருகிறார். தமிழகத்தின் அனைத்து பெரிய கோவிலக்ளுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் குடும்ப சகிதம் படை பரிவாரங்களோடு செல்கையில் அவ்வளவு கவனிப்பும், அரவணைப்பும் தரப்படுகிறது. சதா சர்காலமும் ஒரு அரசை தூற்றி வசைபாடும் ஆளுநருக்கு ஆலவட்டம் கட்டி முதல் மரியாதைகளை இந்த திமுக அரசு வாரி வழங்குவானேன்? ஜெயலலிதாவைப் போல மம்தாவைப் போல ஆளுனர் நடமாட முடியாதபடிக்கு நெருக்கடிகளையும், பய உணர்வையும் ஏற்படுத்த வேண்டியதில்லை. குறைந்தபட்சம் அவரிடம் இருந்து விலகி நிற்கக் கூட முடியவில்லையே. கூட்டணிக் கட்சிகள் எல்லாம் ஆளுநரை எதிர்த்து போராட்டம் செய்து கைதானாலும் திமுக போராடாது. முதல்வரும், துணை முதல்வரும் ஓடோடிச் சென்று அவரது தேனீர் விருந்தில் கலந்து கொண்டு தேனொழுகப் பேசி மகிழ்கிறார்கள் என்பதையும் நாம் பார்த்தோம். ஆளுனர் விவகாரத்தில் அதிமுகவின் நிலைபாடு ஆதரிக்கதக்கதல்ல, ஆரோக்கியமானதல்ல. ஆனால், இன்று எடப்பாடி பழனிச்சாமி பேசியதில் உள்ள ஒரு திடுக்கிடும் உண்மையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆளுனர் வெளிநடப்பு செய்து வெளியேறிய போது தானும் அடுத்ததாக வெளியில் வந்த எதிர்கட்சித் தலைவர் பழனிச்சாமி, ஆளுநர் வெளியேறிச் சென்றது பற்றி என்ன செய்தி சொல்லவேண்டுமோ, அதனை முன்கூட்டியே தயாரித்து வந்து, சட்டப்பேரவையில் தீர்மானமாக கொண்டு வருகிறார் முதல்வர். ஆளுநர் இப்படி நடந்துகொள்வார் என்பது முதல்வருக்கு எப்படி முன்கூட்டியே தெரியும்..? என்ற கேள்வியை முன்வைத்தார். இந்தக் கேள்வி மிகவும் அர்த்தம் செறிந்தது. கூடவே அவர் மறைத்த இன்னொரு விவகாரம் ஆளுனர் வெளியேறிய அடுத்த சில மணித்துளிகளிலேயே சட்ட சபையில் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு அதிருப்தி தெரிவித்தும், ஆளுநர் வெளி நடப்பு செய்தற்கு நியாயம் கற்பித்தும் 12 பாயிண்டுகளை விரிவாகச் சொல்லி ஆளுநர் மாளிகை அறிக்கை தருகிறது. ஆளுநர் கிண்டி மாளிகையை சென்றடையும் முன்பே இந்த அறிக்கை வந்துவிட்டது. அதிலும் அந்தப் பதிவில், ‘' ஆளுநரின் மைக் மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டது, அவர் பேச அனுமதிக்கப்படவில்லை'' என்பதும் துல்லியமாக சொல்லப்பட்டுள்ளது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி சட்ட சபைக்கு வெளியில் வந்து நிற்பதற்குள்ளாக அவருக்கும் கிடைத்து விடுகிறது. ஆக, இதெல்லாம் சொல்லி வைத்து, கலந்து பேசி டிசைன் செய்யப்பட்டதாகவே தெரிகிறது. ஆளுநர் எத்தனை முறை அவமதித்தாலும் ''அவரை அழைக்கத் தவறக் கூடாது'' என்ற மேலிடத்தின் கட்டளையை நிறைவேற்றிக் கொண்டு, அதில் தனக்கான ஆதாயங்களை அள்ளிக் கொள்கிறார் ஸ்டாலின். அதே போல, ''ஆளுநர் என்ன செய்தாலும் அதற்கு ஆதரவாக ஆளும் கட்சியைத் திட்டிப் பேசுங்கள்'' என்ற மேலிடக் கட்டளையை பழனிசாமி நிறைவேற்றி தன் விசுவாசத்தை வெளிப்படுத்துகிறார். உண்மையில் இந்த இரு பெரும் தமிழக கட்சிகளின் தலைவர்களுமே பாஜகவின் அடிமைகளே எனப் புரிந்து கொண்டு மக்கள் தெளியாத வரை இந்தக் கூத்துகளுக்கு தீர்வில்லை. சாவித்திரி கண்ணன் #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat