கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஐந்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 05.01.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
==========
பத்திர காளியின் சாபம்.
========================
மாகாளி தானறிந்து மக்களைத்தான் கொன்றதினால்
ஓகாளி சோழன் ஊர்வறுமை யாகிடவும்
பன்னிரண் டாண்டு பாரில்மழை பெய்யாமல்
உன்னினாள் மனதில் உடனே மழைசுவறிப்
பெய்யாமல் சோழன் பேருலகம் பஞ்சமதால்
அய்யமது ஈயாமல் அறிவழிந்து வாடினனே
.
விளக்கம்
==========
அன்னை பத்திரகாளி வளர்த்த ஏழு சான்றோர்களின் இருவரைச் சோழமன்னன் கொன்றுவிட்டான் என்ற செய்தி அன்னை பத்திரகாளிக்கு ஆறாத கோபத்தை உண்டாக்கிற்று. எனவே, தன் பிள்ளைகளில் இருவரின் இறப்பிற்குக் காரணமான சோழனின் நாடு, பன்னிரண்டு ஆண்டுகள் மழை பெய்யாமல் வறட்சியாகி வறுமையில் வாட வேண்டுமென மனதிலே நினைத்தாள்.
.
அன்னையின் எண்ணப்படி அக்கணத்திலிருந்து பன்னிரண்டு ஆண்டுகள் சோழநாட்டில் மழை பெய்யத் தவறியது. ஆகவே, சோழநாட்டில் பஞ்சம் தஞ்சமடைந்தது. எனவே, மக்களெல்லாம் மன்னனை நாடிச் தம் பசி போக்க வழி வேண்டி முறையிட்டனர்.
.
மன்னனோ, பிச்சை வேண்டி வந்த தம்முடைய பிரஜைகளுக்கு, பிரதியுபகாரமாய் எதுவுமே செய்ய இயலாமல் அறிவிழந்து தவித்தான்.
.
.
அகிலம்
========
வைகையில் வதம் செய்யப்பட்ட சான்றோர் இருவரின் மனைவியர் தவம்.
========================================================================
இறந்தசான் றோர்களுட ஏந்திழைமா ரெல்லோரும்
சிறந்த தவம்புரிய சென்றனர்கா ணம்மானை
சென்ற தவத்தின் செய்திகே ளன்போரே
அழுக்குக் கலையணிந்து அணிந்தபொன் தாளாமல்
இழுக்குச் சொல்லீந்த ஈழன் பழிகொள்ளவும்
இறந்த மன்னவர்கள் எழுந்திருந் தெங்களையும்
சிறந்த மணத்தோடு உடன்சேர வந்திடவும்
பழிசெய்த சோழனுசர் பகலநரி ஓடிடவும்
அழிவாகிச் சோழன் அவன்மாண்டுப் போயிடவும்
வரந்தாரு மென்று மாயவரை நெஞ்சில்வைத்துப்
பரமானப் பெண்கள் பாரத் தவசுநின்றார்
.
விளக்கம்
=========
வைகையில் சோழ மன்னனால் வதம் செய்யப்பட்ட சான்றோர் இருவரின் மனைவியர்கள் இருவரும், மாளாத் துயரத்தால் மனங்கலங்கியவாறு, கட்டியிருந்த ஆடையை மாற்றிக் கட்ட மனமில்லாமல் மானசீக தர்மத் திருச்சரடாம் திருமாங்கல்யத்தையும் கழற்றாமல் மாயோனை மனதில் வைத்து மாதவம் புரிந்தனர்.
.
பத்துத் திசை போற்ற, பார் முழுவதும் வெற்றி கண்ட தம் கணவனை, இழுக்கான வேலை செய்ய இழுத்துவிட்டதும் அல்லாமல், இளக்காரமாகப் பேசிய கோளனாகிய அந்த ஈழனைப் பழி வாங்குவதற்கும், இறந்து போன இரண்டு சான்றோர்களும் உயிர்ப் பெற்று வந்து எங்களுக்கு மறுவாழ்வு தரவும், எங்கள் கணவனைக் கொண்ற சோழனின் நாட்டில் பகலில் நரி உலாவருமளவில் அந்நாடு காடாகிப் போகவும், அழிமதி கொண்ட சோழமன்னன் மாண்டு போகவும் எங்களுக்கு வரமருளும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியதாய் அந்த வனிதையர்களின் தவம் அமைந்திருந்தது.
.
.
அகிலம்
========
வேதியன் வேள்வியும் விஷ்ணு அனந்தபுரம் புறப்படுதலும்.
===========================================================
இப்படியே மாதர் இங்கே தவசிருக்க
அப்படியே மாயன் அவர்ஸ்ரீ ரங்கமதில்
இருக்கும் பொழுது இரணியநீ சக்கலியன்
கருக்காக லோகம் கண்டவிட மேபரந்து
ஸ்ரீரங்க மானதிலே சேர்ந்திருக்கும் வேதியர்கள்
நிதங் குளறி நெறிதவறிப் போனதினால்
முறைவைத்த பூசை முந்தி முறையெனவே
மறையவனும் பூசை வந்தே முகித்திடவே
பொறாமல் மற்றொருவன் பூசையெனக் கென்றுசொல்லி
மறவாத மாயவரை வணங்கிநிட்டை செய்யவென்று
முப்பது வேள்வி மொகுமொகெனத் தான்வளர்த்து
இப்போ நான்வீழ்வேன் இதில்மாயன் வாராட்டால்
என்றவ னெண்ணி ஏற்றவோ மம்வளர்த்து
அன்றவன் வீழ ஆர்ப்பரிக்கு மவ்வளவில்
மறையவனை மாயன் வந்தெடுத்துப் புத்திசொல்லி
நிறையொத்த மாயன் நெடுமறையோ னைக்கூட்டி
ஸ்ரீரங்கம் விட்டுத் திருவனந் தம்நோக்கிச்
சாரங்கர் போகத் தானேகும் வேளையிலே
நன்றான கேத்திரனும் நல்லமறை வேதியனும்
அன்றிளகிச் சென்று அரனார் திருக்கோவில்
வந்த பொழுது வானமதி லுள்ளோரும்
நந்நகோ பால நாரா யணரிடத்தில்
சென்று தொழுது தேவரெல்லாந் தெண்டனிட்டு
இன்று பெருமாள் இங்கே யெழுந்தருளி
வந்த வகையேது மாயவரே யென்றுசொல்லி
அந்தமுனி தேவர்களும் அச்சுதரோ டீதுரைக்க
நல்லதென்று அய்யா நாரா யணர்மகிழ்ந்து
வல்ல பரமே சுரரை மிகவாழ்த்தி
ஈசுரரே யென்றனக்கு இங்கிருக்கக் கூடாமல்
தேச மதைப்பார்த்துத் திருவ னந்தமேகி
இருக்கவே யென்று எழுந்தருளி வந்தேன்காண்
.
விளக்கம்
==========
இப்படியாக இரண்டு மாதர்களும் சோழ மண்டலத்தில் தவமேற்றிக் கொண்டிருக்கும்போது, மகாவிஷ்ணு ஸ்ரீரங்க மாபதியில் இருந்து கொண்டிருந்தார். அப்போது, இரணியனின் இறுதிப் பிறப்பாகிய கலிநீசன் தன்னுடைய கபட புத்தியைப் பிரயோகித்து நிலவுலகெல்லாம் வியாபித்து விட்டான்.
.
கலியின் வியாபகம் கட்டுக்கடங்காமல் போகவே, அது ஸ்ரீரங்க மாபதியின் பணிவிடையாளர்களையும் விட்டு வைக்கவில்லை. ஸ்ரீரங்க மாபதியில் பணிவிடைபுரிந்து வந்த வேதியர்களில் சிலர் தம்மைத் தாமே மகாவிஷ்ணுவாகப் பாவித்துக் கொண்டு மற்ற பணிவிடையாளர்களை விட தரம் உயர்ந்தவர்கள் என்றும், அருள் நிறைந்தவர்கள் என்றும், தம்முடைய வாக்கு பலிதமாகுமென்றும் கபட நாடகமாடத் தொடங்கினர்.
.
ஆகவே, அவர்களின் ஒற்றுமை உருக்குலைந்தது. எனவே, நீதி நிலைபுரண்டது. வழிபாட்டு நெறிமுறைகளும் தடம் மாறின. இதன் விளைவாகப் பணிவிடையாளர்களுக்குள் சண்டைகளும் சச்சரவுகளும் ஏற்படலாயின. எனவே, காலை, மதியம், மாலை ஆகிய நேரங்களில் இன்னின்னவர்கள் பூஜை செய்யவெண்டுமென கால அளவுகளை வரையறுத்தனர்.
.
அதில் ஒரு வேதியன் எனக்கே முன்னுரிமை வேண்டுமென அடம்பிடித்ததோடு, முதற் பூஜை செய்யும் உரிமை வழங்கப்பட வேண்டுமென்று மகாவிஷ்ணுவை நோக்கி தவம் புரிந்தான்.
.
அவன் தவம் செய்யுமிடத்தில் முப்பது வேள்விகளை வளர்த்தான். என்னுடைய தவ வேள்விக்கு இரங்கி, இங்கே மகாவிஷ்ணு வந்தருளத் தவறினால் இந்த வேள்வியிலேயே விழுந்து நான் சாவேன் என்று தன் தவ வேள்வியைத் தீவீரமாக்கினான். காலம் கடந்தும்கூட தமக்கு மகாவிஷ்ணு கருணை காட்டவில்லையே என்ற ஆவேசத்தோடு அந்த வேள்வித்தீயிலே வீழ்ந்து தன்னை மாய்த்துக் கொள்ள முனைந்தான்.
.
அப்போது, மகாவிஷ்ணு அந்த வேதியனின் எதிரிலே எழுந்தருளி, வேதியனே, வருமானத்தைக் கருதியும், கௌரவத்தைக் கருத்தில் கொண்டும் காலக்கெடு கணித்து, அதாவது முறை வைத்த பூஜையில் முதல் பஜை எனக்குத்தான் என்று சொல்லுகிறானே அதை அவனே நடத்திவிட்டுப் போகட்டும். இது கபடக் கலியில் கட்டுண்டவனால் நடத்தப்படும் களியாட்டம். இதற்காக நீ வருந்த வேண்டாம் என்பன போன்ற புத்திமதிகளை அந்த வேதியனுக்கு போதித்த மகாவிஷ்ணு, தன்னோடு அந்த வேதியனை அழைத்துக் கொண்டு ஸ்ரீரங்கமாபதியை விட்டு திருவனந்தபுரம் நோக்கிச் செல்ல புறப்பட்டார்.
.
ஸ்ரீரங்கத்திலிருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் மகாவிஷ்ணு, மறறம் வேதியனோடு சேத்திரனும் சேர்ந்து கொண்டான். இவ்வாறு மூவருமாகச் சென்று கொண்டிருக்கும் வழியில் சிவபெருமானின் திவ்விய தேசமிருந்தது. அந்தத் திருவிடத்தை இவர்கள் மூவரும் நெருங்கியபோது, அரூபிகளாகிய வானவர்களெல்லாம் நந்தகோபாலனும் நாராயணனுமாகிய மகாவிஷ்ணுவை வணங்கி சுவாமி, தாங்கள் இங்கே எழுந்தருளி வருவதற்கான காரணமென்ன என்று வினவினார்கள்.
.
அதனால் மனம் மகிழ்ந்த மகாவிஷ்ணு, சிவபெருமானை மானசீகமாக வணங்கியவாறு, ஈஸ்வரா, ஸ்ரீரங்கத்தில் பக்தி பூர்வமான சேவையை யாரும் செய்யவில்லை. பலர் பாடுபடாமலே பலனடைய முனைந்துள்ளனர். அங்கே பகட்டுருட்டுக்காக பணிவிடை செய்வோர் மலிந்துவிட்டார்கள். எனவே, எனக்கு அங்கிருக்க அணுவளவும் ஆசை இல்லை. ஆகவேதான் திருவனந்தபுரத்திற்குச் செல்லலாம் என்று புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறேன் என்றார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008}


