புறக்கணியுங்கள்!
இந்த உலகத்தில் நீங்கள் யாரோ ஒருவராக இருக்கலாம். ஆனால் யாரோ ஒருவருக்கு நீங்களே உலகமாக இருக்கலாம். வாழ்க்கையில் பிறரால் புறக்கணிக்கப்படும் போதெல்லாம் இந்த வரிகளை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வாழ்வில் பிறர் நம்மை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே நமக்கான போராட்டங்கள் ஆரம்பமாகிறது.
நம்பிக்கை கொடுக்கவும் நம்பி கை கொடுக்கவும் யாரேனும் இருக்க மாட்டார்களா எனும் ஆதங்கம் பெரும்பான்மையான மனிதர்களிடம் மேலோங்கி வருகிறது. இத்தகைய எண்ணப் போராட்டங்களே மனப் பூசல்களையும், விரக்தியையையும் சோர்வையும் தருகிறது.
வாழ்வில் வெற்றி பெற அவமானங்களும், புறக்கணிப்பும் அவசியம் தேவை தான். அவமானங்களையும், புறக்கணிப்புகளையும் சேகரித்து வையுங்கள். பின்னாளில் நமக்கான வெற்றி விழாவில் சொல்வதற்கு உதவும். சக மனிதன் வளர்ந்து விடக்கூடாதே என்ற எண்ணங்கள் தான் இந்த புறக்கணிப்பிற்கான காரணமாகும்.பின்னாடி பேசுபவர்களுக்கு காது கொடுத்தால் நாம் முன்னாடி போக முடியாது. இந்தப் புறக்கணிப்பு கூட ஒரு உந்துதல் சக்தி தான். மண்ணிற்குள் புதைத்து வைத்த விதைகள் முட்டி மோதி வெளியே வருவது போல இவற்றையெல்லாம் புறம் தள்ளி வெளியே வாருங்கள். மனத் தடைகளைத் தாண்டி, புறத் தடைகளைத் தாண்டி வருவது தான் வாழ்விற்கான வெற்றியாகும்.
வேலை கேட்டுச் சென்ற முதியவரிடம் அந்த நிறுவன முதலாளி 61 வயதில் உங்களால் என்ன செய்து விட முடியும் என்று கேட்டதற்கு, இனிக்கும் 16 வயது இளமையும், அதனுடன் 45 வருட கடினமான அனுபவமும் சேர்ந்து 61 வயது இளைஞன் நான் என்று தன்னம்பிக்கையுடன் பதிலளித்த அந்த முதியவரை, நிர்வாக ஆலோசனை தலைவர் பதவியில் அமர்த்தினாராம் முதலாளி. இப்படித் தான் எதிர்பாராத சூழலையும் எதிர்நோக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
உளிபடாத கல் சிலையாவதில்லை. வலி இல்லாத வாழ்க்கையும் வெற்றி பெறுவதில்லை. எல்லாமே இலகுவாக கிடைத்து விட்டால் வாழ்வில் சுவாராசியமேது?
மிகப் பெரிய அவமானங்களைக் கடந்து வந்தவர்களே இன்று வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்.
இன்பமும் துன்பமும்: எதுவரினும் மனம் தளராத தன்மை, பரந்த ஆகாயம் போன்ற விசாலப் பார்வை, இதுவும் கடந்து போகும் என்ற மனப் பாங்கு, எந்த சூழலையும் தனதாக்கிக் கொள்ளும் வலிமை, பாறை போன்ற மன உறுதி இவை அனைத்தும் இருந்தாலே போதும் எந்த புறக்கணிப்புகளும், அவமானங்களும் நம்மை ஒன்றும் செய்யாது. எதிர்மறை எண்ணங்களைப் புறக்கணிக்கலாம். எதிர்மறை மனிதர்களைப் புறக்கணிக்கலாம். வேண்டாத ஆசைகளைப் புறக்கணிக்கலாம். தீய சிந்தனைகளையும், தீய மனிதர்களையும் புறக்கணிக்கலாம். அதே சமயம் நாம், பிறர் எவற்றையெல்லாம் செய்யக் கூடாது என நினைக்கிறோமோ, அதை நாமும் மற்றவருக்கு செய்யக் கூடாது என்பதில் கவனம் வைப்போம்.
மனதாலும், சொல்லாலும், செயலாலும் பிறரைக் காயப்படுத்தக் கூடாது.
வார்த்தைகள் வலிமை வாய்ந்தவை.
சொற்களால் அவமானப்பட்டு பிரிந்த உறவுகள் அதிகம். அதனால் தான் நாவினால் சுட்ட வடு என்று வான் மறை கூறுகிறது. ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும். வெல்லும் சொற்களாக நமது சொற்கள் இருக்கட்டும். அவமானப்படுத்தும் சொற்களைத் தவிர்த்து ஆக்கப்பூர்வ சொற்களைப் பயன்படுத்தலாம். உணர்வுப்பூர்வ மனிதர்களை நல்ல உணர்வுகளால் இணைப்பது நல்ல வார்த்தைகளே.
சகமனிதனை நேசிக்க ஆரம்பித்தாலே போதும். புறக்கணிப்புகளும், அவமானங்களும் என்ற வார்த்தைகளே நம் கலைக் களஞ்சியத்தில் இல்லாமல் போய் விடும்.அங்கீகரிப்போம் எளிய மனிதர்களையும். அரவணைப்போம் அகிலத்தையும். புறக்கணிப்புகளைப் புறம் தள்ளுவோம். அவமானங்களை அடித்து நொறுக்குவோம்.
வாழ்தல் இனிது. வாழ்க்கையும் இனிது. 😊😊😊 #பொழுது போக்கு #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪


