நடிகர் சிலம்பரசனுக்காக ஜானகி பாடிய ஒரு சிறப்பு பாடல் இன்று வரை பேசப்படுகிறது. இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தர், தனது மகன் சிலம்பரசனை சிறுவயதிலிருந்தே திரையுலகில் அறிமுகப்படுத்தி நடிக்க வைத்து வந்தார். 1989-ம் ஆண்டு வெளியான 'சம்சார சங்கீதம்' திரைப்படத்தில், தந்தை-மகன் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்ததும் டி. ராஜேந்தரே. இந்த படத்தில் இடம்பெற்ற 'ஐ ஆம் எ லிட்டில் ஸ்டார்' என்ற பாடல், சிம்புவின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.
"ஐ ஆம் எ லிட்டில் ஸ்டார்… ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்" என்ற வரிகளுடன், மழலை குரலில் பாடப்பட்ட அந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் பெரும் வரவேற்பை பெற்றது. ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், அந்த பாடலை பாடியது எந்தக் குழந்தையும் அல்ல; தனது குரலை மழலையாக ஆண் குரலாக மாற்றி பாடியவர் எஸ். ஜானகி தான். இந்தப் பாடல் சிம்புவின் ஆரம்ப கால அடையாளமாகவும் மாறியது. அதேபோல், குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷாலினிக்காகவும் பல படங்களில் ஜானகி மழலை குரலில் பாடி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பே, 1981-ம் ஆண்டு பாக்யராஜ் நடித்த 'மௌன கீதங்கள்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'டாடி டாடி ஓ மை டாடி' பாடலும் சிறுவன் குரலில் பாடப்பட்டு சூப்பர் ஹிட் ஆனது. அந்தப் பாடலையும் பாடியது ஜானகி தான் என்பது பலருக்குத் தெரியாத ஒரு சுவாரசிய தகவல். அதேபோல், ரஜினிகாந்துடன் நடித்த சிறுவன் பாடுவது போல அமைந்த 'பேஸ்ட் இருக்கு பிரஷ் இருக்கு எழுந்திரு மாமா' (ரங்கா) பாடலும், ஜானகியின் குரல் மாயாஜாலத்தின் இன்னொரு உதாரணம்.
#எனக்கு பிடித்த பாடகி ஜானகி அம்மா💞 #😍ஜானகி அம்மா குரல்😍 #🎤ஜானகி அம்மா மெலோடிஸ் #🎼ஜானகி,ஸ்வர்ணலதா ஹிட்ஸ் இவ்வாறு, ஒரே குரலில் பல மாயாஜாலங்களை உருவாக்கிய எஸ். ஜானகி, தனது அசாத்திய திறமையால் காலத்தை கடந்தும் கொண்டாடப்படும் பாடகியாக இருக்கிறார்.


