கர்த்தாதி கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை நான்காம் நாள் வாசிப்பு தொடர்ச்சி- நாள் 15.12.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
கலியனைப் பற்றி சித்திரபுத்திரரின் கணிப்பு
=====================
அப்போது ஈசுரரை அன்போ டுறவணங்கி
செப்போடு வொத்த சித்திரருஞ் செப்பலுற்றார்
சாத்திரத்தி லுற்ற தன்மை மிகக்கேளும்
சீத்துவ மாகச் சித்திரரும் செப்பலுற்றார்
முன்பிறந்த குறோணி உடலாறு துண்டதிலே
தன்பிறவி யோடாறு தான்பிறந்தான் சூத்திரமாய்
மண்தா னுடம்பு வந்துதித் தோன்றனக்கு
விண்தா னுடம்பு விலாசக் குருவோடு
சலந்தா னுடம்புக்(கு) உறுதி தைரியங்கள்
வலந்தா னிளகி வன்னியோ டுங்கூடி
கலந்து திரண்ட கட்டைமுண்ட மானதுக்குப்
பிலந்தூக்கும் வாயு பிராணன்கா ணீசுரரே
முப்பழியோ டாறு உயிரழித்த மாயனுக்கு
இப்போது வந்த இவன்தான் கொடிதுவையா
மாயனாலு முழமாய் மனுச்சிங் கமுகமாய்
வாயமாய் நம்மை வதைத்தானே யென்றுசொல்லி
அன்றா யனெடுத்த அளவா யுருவெடுத்துச்
சென்றா லவனுடைய திறத்தைநாம் பார்ப்போமென்று
வேகத்தால் துண்டம் வெடித்ததுகா ணிப்புதுமை
ஏகந்தா னாளும் ஈசனே யென்றுசொல்லி
.
விளக்கம்
==========
சித்திரபுத்திரர் சிவபெருமானை வணங்கி நமஸ்கரித்து, ஈசனே, இந்தச் சம்பவங்கள் தற்செயலாக நடைபெறுவதல்ல, இந்தப் பிரபஞ்சத்தைத் தோற்றுவிப்பதற்காக ஏற்பட்ட விதிமுறைகளை உள்ளடக்கமாகக் கொண்ட சாஸ்திரப்படியே நடைபெற்றுள்ளது. அந்த சாஸ்திரங் கூறுகின்ற செய்தியை ஆதாரமாகக் கொண்டே சொல்லுகிறேன் கேளுங்கள் என்று திறம்படக் கூறினார்.
.
முதன் முதலாகப் பிறந்த அசுரனாகிய குறோணியின் உடலிலுள்ள ஆறு கூறுகளில், குறோணியோடு சேர்த்து ஆறுபிறவியிலும் கெடுமதியாளனாகப் பிறந்த குறோணியின் ஆறாவது கூறே இப்போது ஏழாம் முறையாகப் பிறந்துள்ளது.
.
மண்ணும், விண்ணும், நீரும், நெருப்பும் ஒன்றினுள் ஒன்றாகச் சேர்ந்து திரண்ட உடம்பினைக் கொண்ட இவனுக்கு, இந்த உடலே பலமாகும். பஞ்சபூதங்களில் அதிக பலமுடைய காற்றே அவனுக்கு உயிர். இதுவரை அவன் எடுத்துள்ள பிறவிகளிலெல்லாம் இப்போது அவன் எடுத்திருக்கும் பிறவியே மிகமிகக் கொடிய பிறவியாகும்.
.
அதாவது, அவன் இதற்கு முன்புள்ள யுகங்களில் பிறந்திருந்த போது, அவனை, மகாவிஷ்ணு, நாலுமுழமுள்ள கந்தனாகவும், நரசிம்மனாகவும், ராமனாகவும், கண்ணனாகவும் அவதாரமெடுத்து அழித்ததை மனதில் வஞ்சமாக வைத்துக் கொண்டு கழிந்த யுகங்களில் மகாவிஷ்ணு அவதாரமெடுத்த உருவ அளவில் தானும் பிறவி எடுத்து மகாவிஷ்ணுவை எதிர்க்க வேண்டுமென்ற அவனுடைய நீண்டநாள் ஆசை இப்போது இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதெல்லாம் ஏகமெங்கும் இரண்டறக் கலந்து இவ்வுலகையெல்லாம் ஆளுகின்ற ஈசனே தாங்கள் அறியாததில்லை என்று சித்திரபுத்திரர் சிவபெருமானிடம் சொன்னார்.
.
.
அகிலம்
========
இப்படியே சித்திரரும் எடுத்துரைக்கவே ஈசர்
அப்படியே வந்தவனுக்(கு) ஆயுசு மவன்பலமும்
கரணமுதல் நடப்பும் கட்டாக நீதேர்ந்து
மரணமுதல் நடப்பும் வகுத்துரைநீ நம்கணக்கா
.
விளக்கம்
==========
அப்படி சித்திரபுத்திரர் சொன்ன செய்தியைக் கேட்ட சிவபெருமான் சித்திரபுத்திரரைப் பார்த்து, சித்திரபுத்திரா, நீ சொன்னபடியான காரணப்படிப் பிறந்திருக்கும் அவனுடைய ஆயுள்காலம் பற்றியும், அவனுடைய பலவலிமை பற்றியும் அவனுடைய பிறப்பு முதல் இறப்புவரையான அனைத்துக் கணக்குகளையும் தெளிவாக ஆய்வு செய்து தனித்தனியாக என்னுடைய கணக்கனகாகிய நீ எனக்குத் தெரிவிக்க வேண்டுமெனச் சிவபெருமான் உத்தரவிட்டார்.
.
.
அகிலம்
========
அப்போது சித்திரரும் ஆதியருள் நெஞ்சில்வைத்துப்
பொற்பாத முண்டெனவே புகல்வா ரியல்கணக்கர்
அப்பனு மம்மை அடங்கிமிகப் பெறாமல்
கொப்பளித்துத் தானாய்க் குறுத்துவந்த நீசனுக்குத்
தத்துவந் தொண்ணூற்(று) ஆறுந் தடிக்குணந்தான்
புத்தி புலனைந்தும் பொய்ப்பூண்ட பூதமுமாய்
சத்துருக்கன் கண்கால் தலையும் வெறும்நீசம்
உற்றுணர்ந்து பாராத உடலு மவன்காலும்
மாயக் காயமதுக்கு வருசமொரு நூறிருப்பு
தோயநாதத் துளிர் தொகைபத்துநூ றாயிரந்தான்
வாழ்வுவந்து சேர்க்கை வருசம் பதினாலு
தாழ்வு தசைநரம்பு சனித்தமுப்பத் தோராண்டில்
ஆர்க்கை எலும்பு அடைக்கும் நரம்புடனே
மூர்க்கத் தசையும் உதிரப் புனலுடம்பும்
மண்தண்ணீ ரோடே வகைக்காகாப் பாண்டமிது
விண்பரந்த வீடு வெளிவாயில் ஓட்டலுமாய்
ஓட்டை மடத்துக்கு ஒன்பது கொந்துடனே
வீட்டைப் பிரித்தால் விறகுக்கு மாகாது
.
விளக்கம்
==========
கலியனின் பிறப்பு முதல் இறப்பு வரையான அனைத்துக் கணக்குகளையும் ஆய்வு செய்து எனக்கு தெரிவியென்று சிவபெருமான் சொன்னதால் சிந்தை மகிழ்ந்த சித்திர புத்திரர், சிவக் கிருபையை சிந்தையில் சுமந்துகொண்டு, தன் மூலமாக வெளிப்பட இருக்கும் அனைத்துக்கும் அந்த ஆதிசிவனின் பொற்பதமே பொறுபதமே பொறுப்பென நினைத்துக் கொண்டு இயல்பான கணக்கினை எடுத்துரைக்கிறார்.
.
சிவபெருமானே ! தாங்கள் அதிசயப் பிறவி எனக் கருதுகின்ற அந்தக் கலியன், ஆணும் பெண்ணும் அன்பு பொருந்தி, அதனால் ஒருவரை ஒருவர் மருவிப் புணர்ந்து, மாதுவானவள் கர்பமாகிப் பிறக்கவேண்டிய இயல்புகளுக்கு எதிராக, மண்ணைப் பிளந்து கொண்டு தானாக முளைத்த இவனுடைய தத்துவக் கூறுகளெல்லாம் முரட்டுத்தனமாகவே இருக்கும்.
.
அவனுடைய புத்தியும் புலன்களும் பொய்த்தன்மையுடையது. உலகத்திற்கே சத்துருவாக முளைத்த அவனுடைய கண்களும், கால்களும், தலையும் நீசத் தன்மையானது. எந்தச் செயலையும் தொலைநோக்குடன் சிந்திக்க இடம் தராத உடலுக்குச் சொந்தக்காரன். அவன் அமர்ந்திருக்கும் உடலுக்கு ஆயுள் காலம் நூறு வருடமேயாகும்.
.
அவனுடைய உடலில் உள்ள சுக்கிலம் எனப்படும் இந்திரியம் பத்துலட்சம் உயிர் அணுக்களாக அமைந்திருக்கும். அவனுடைய உடல் பதினான்கு பதினான்கு ஆண்டுகளுக்கு ஒரு மாற்றத்தை எய்தும், ஜெனித்தது முதல் முப்பத்தொரு வயதை எட்டியதுமே அவனுடைய தசை நரம்புகளெல்லாம் தளர்ச்சியுடையத் தொடங்கிவிடும்.
.
இரத்தம், எலும்பு, நரம்பு, தசை, நீர் இவைகளாலான இந்த உடல், மண் பண்டத்திற்கு ஒப்பானது. இறுதியில் எதிற்குமே இது உதவாது. பகட்டான இந்த உடலில் பல ஓட்டைகள் உள்ளன. அந்த ஓட்டடைகளில் ஒன்பது ஓட்டைகளே வாசலகளாக இருக்கும். இத்தகைய இந்த வீட்டை அதாவது உடம்பை விட்டு உயிர் பிரிந்துவிட்டால் அதை விறகிற்கு கூடப் பயன்படுத்த முடியாது.
.
.
தொடரும்….. அய்யா உண்டு. #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚


