ShareChat
click to see wallet page
search
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஐந்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 04.01.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ========== அணையை அடைக்க சான்றோர் மறுத்தலும் அதில் இருவர் மரணமும். ====================== செய்கை முடிச்சான்றோர் தேசமன்ன னோடுரைப்பார் நல்லதல்ல மன்னவனே நம்மோ டிதுவுரைக்க இல்லை யிந்தவேலை இதற்குமுன் கேட்டிலையே வெட்டாப் படையை வெற்றிகொண்டோ மும்மாலே பட்டாங்கு எல்லாம் பகர்ந்தாரே சோழனுடன் மாயக் கலியதனால் மன்னவனுங் கேளாமல் ஞாயமொன்றும் போகாது நளிமொழிகள் பேசாதே குட்டையினால் மண்ணெடுத்துக் குளக்கரையைத் தானடைக்கக் கெட்டியல்லாமல் வேறு கெறுவிதங்கள் பேசாதே என்றுரைக்கச் சான்றோர் இயம்புவா ரம்மானை நன்றுநன்று மன்னவரே நமக்கு அழகல்லவே இவ்வேலை யொன்றும் எங்களோ டீயாமல் எவ்வேலை சொல்வீரோ யாமதற்குள் ளதென்றார் . விளக்கம் ========== செயற்கரிய செயல்களிலெல்லாம் மகுடம் தரித்த சான்றோர்களோ சோழ மன்னனைப் பார்த்து, மன்னா, நாங்கள் இம்மாதிரியான எந்த வேலைகளையும் இதற்கு முன்பு செய்ததே இல்லை என்பதைத் தாங்கள் கேள்விப்பட்டதே இல்லையா? எங்களிடம் இப்படியோர் வேலையை ஒப்படைப்பது எந்த வகையிலும் நல்லதல்ல. . தங்களின் மேலான கட்டளைகளுக்கு இணங்கி, வெல்லவே முடியாத வீரமிக்க படைகளைக் கூடி வெற்றி கொண்டுள்ளோம் என்ற உண்மை தங்களுக்குத் தெரியாததில்லை. எங்களுடைய இயல்புகளையெல்லாம் அறிந்திருந்தும் அறியாதவர்போல் இத்தகு வேலைக்கு எங்களை ஆட்படுத்த வேண்டாம் என்று தம்முடைய தரப்பு கொள்கைகளையும், குணக்கூறுகளையும் விளக்கமாக மன்னனிடம் சான்றோர்கள் விவரித்தார்கள். . சான்றோர்களின் இத்தகு வார்த்தைகள், கலி வயத்தால் கட்டுண்டிருந்த மன்னனின் கவனத்தில் எள்ளளவும் ஏறவில்லை. மாறாக கோபமே கொப்பளித்தது. சான்றோர்களைச் சீறிப் பார்த்துக் கொண்டே, என்றுடைய உத்தரவை நீங்கள் நிறைவேற்றுவதால் உங்கள் கௌரவம் ஒன்றும் குறைந்து போகாது. என்னிடம் உங்கள் பெருமைகளைப் பேசி காலத்தைக் கடத்தாமல் குட்டையிலே மண்ணை அள்ளி அணைகட்டி முடியுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது. அதை விடுத்து இங்கே அகங்காரம் பேசாதீர்கள் என்று மன்னன் மமதையாகப் பேசினார். . அதைக் கேட்ட சான்றோர்கள், மன்னனைப் பார்த்து, மன்னவா, எங்களுக்கு இதுபோன்ற வேலை செய்து பழக்கமில்லை. இதைத் தவிர வேறு எந்த வேலை கொடுத்தாலும் நாங்கள் அதைச் செய்து முடிக்கச் சித்தமாக இருக்கிறோம் என்றார்கள். . . அகிலம் ======== கேட்டந்த மன்னன் கிறுக்க முடனிறுக்கித் திட்டினான் சான்றோரைச் சினத்தான்கா ணம்மானை அப்போது சான்றோர் அதற்கிசையாமல் நின்றார் இப்போது சோழன் ஏதுசொல்வா னம்மானை நான்வேலை சொன்னால் நகட்டுவதோ உங்களுக்கு தான்பாரு மென்று தன்தள கர்த்தருடன் வேலையது கொள்ளுமென்று விசைகாட்டினான் கெடுவான் தூல மறியாமல் துள்ளியே சேவுகர்கள் சூழ வளைந்து துய்யசான் றோர்களையும் வேழம் பலதை விட்டுப் பிடித்திடவே சான்றோ ரடுக்கல் சாரவகை யில்லாமல் மீண்டகலத் தோற்று வெளியிலே நின்றிடவே அப்போது சோழன் அவனானை கொண்டுவந்து இப்போது சான்றோரை ஏறிப் பிடித்தனனாம் சான்றோர்கள் சோழனையும் தட்டப் படாதெனவே நன்றியுடன் நின்றார் நாடி யவன்பிடித்துக் குட்டையெ டென்றிடவே கூடா தெனவுரைக்கத் தட்டினான் வைகையிலே தலையைச் சாணான்றனக்கு ஆனைதனை விட்டு அரசனந்தச் சோழமன்னன் சேனைத் தலைவர் சிறந்தசான் றோர்கள்தம்மில் கொன்றா னொருவனையும் குளக்கரையி லம்மானை பின்னா லொருவனையும் பிடித்துக்கொடு வாருமென்றான் குட்டை யெடென்று கூறினான் மாபாவி திட்டமுடன் நாடாண்ட தெய்வ குலச்சான்றோர் முன்னிறந்த மன்னனிலும் மோசமோ நாங்களுந்தான் இன்னமிந்தக் குட்டை யாங்கள்தொடோ மென்றனராம் பின்னுமந்தச் சோழன் பிடித்தொரு வன்தனையும் கொன்றான்காண் வைகைதனில் குஞ்சரத்தை விட்டிடறி நன்றி மறந்து நாடாண்ட சோழமன்னன் கொன்றான் காண்ரண்டு குலதெய்வச் சான்றோரை அப்போது வித்யா தரமுனிவர் தானறிந்து செப்போடு வொத்த திருமா லருகேகி மாயவரே உம்முடைய மதலையேழு பேரில் காய மழித்தான் கரிகாலச் சோழனவன் என்ற பொழுது எம்பெருமா ளப்போது அன்றுபுட் டேயருந்தி அவளாட்போல் கோலமது கொன்று குமாரர்களைக் குசல்செய்த தும்பார்த்து அன்றுவை கையடைத்து அடிகள்மிகப் பட்டவரும் ஸ்ரீரங் கந்தன்னில் சிறந்தகோ பத்தோடே சாரங்கர் வந்து தானிருந்தா ரம்மானை . விளக்கம் ========= அதைக்கேட்ட மன்னவனோ ஆத்திரத்தால் சான்றோரை அவதூறாகத் திட்டினான். என்றாலும் சான்றோர் அவ்வேலைக்கு இசையவே இல்லை. மன்னனோ சான்றோர்கள் தம்மை அவமதிப்பதாகக் கருதி, என்னுடைய உத்தரவையா ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள் என்ன செய்கிறேன் என்று இப்போதே பாருங்கள் என்று சொல்லிக்கொண்டே தம் தளபதியை அழைத்து இவர்களை வேலை வாங்குங்கள் என்று வேகப்படுத்தினார். . சான்றோர்களின் பிறப்பின் பெருமையையும், அவர்களின் உடல் வலிமையையும் உணராத சேவகர்களோ, ஆவேசமாக ஓடிவந்து சான்றோர்களைச் சூழ்ந்து கொண்டனர். தளபதிகளோ யானையை விட்டு சான்றோரைப் பிடிக்க முற்பட்டனர் என்றாலும் சான்றோரைப் பிடிக்க முடியாததால், மன்னனே தம் பட்டத்து யானையை ஏவிச் சான்றோரை பிடிக்க செய்தார். சான்றோர்களோ, மன்னனை இனி மீற வேண்டாம் என்ற எண்ணத்துடன் நன்றி மறவாமல் நின்றிடவே, பட்டத்து யானையின் பிடியில் சான்றோர்கள் சிக்கினர். . அதனால் மகிழ்ச்சியுற்ற மன்னன் குட்டையை எடுங்கள் என்று சான்றோரைப் பார்த்துச் சீறினான். அதையும் சான்றோர் மீறினர். உடனே தம் தளபதிகளை அழைத்த மன்னன், இவர்களின் தலைகளை யானையின் கால்களால் இடறச் செய்யுங்கள் என்று உரத்த குரலில் உத்தரவிட்டார். . தளபதிகளோ, மன்னனின் உத்தரவை மறுநொடியே நிறைவேற்ற எண்ணி சான்றோர்களில் ஒருவரின் தலையை யானையின் கால்களால் எகிறவைத்துக் கொன்றனர். அடுத்து இன்னும் ஒருவரை அழைத்து வர அரசன் உத்தரவிட்டார். அதன்படியே அழைத்து வந்ததும் அவரிடமும் குட்டையைக் கையிலே எடு என்றார் மன்னன். . உடனே, இறந்தவர் போக எஞ்சியிருந்த சான்றோர்கள் ஆறு பேரும் சேர்ந்து இப்போது இத்தலத்தில் உங்களால் உயிர் துறந்த எங்கள் உத்தமச் சகோதரனைவிட நாங்கள் எவ்வகையிலும் இளைத்தவர்களல்ல, எங்கள் எல்லாரையும் கொன்றாலும் எடுக்க மாட்டோம் என்று குட்டையை, இனியும் தொடமாட்டோம் என்று உரத்த குரலில் ஓங்கி ஒலித்தார்கள். . இதனால் தாங்கொணா கோபம்கொண்ட மன்னன் இன்னும் ஒரு சான்றோனின் தலையையும் யானைக்காலால் எகிறிக் கொன்று விட்டான். இந்த இரண்டு சான்றோர்களும் இறந்த செய்தி வித்தியாதர முனிவரின் காதுக்கு எட்டியது. உடனே வித்தியாதர முனிவர் இதை மகாவிஷ்ணுவுக்கு தெரிவிக்கவேண்டுமென விரைந்து சென்று மகாவிஷ்ணுவைச் சந்தித்து, சுவாமி உம்முடைய பிள்ளைகள் ஏழு பேரில் இரண்டு பேரைக் கரிகால சோழமன்னன் கொன்று விட்டான் என்றார். . முனிவர் சொல்லி முடிப்பதற்குள் அங்கிருந்து புறப்பட்ட மகாவிஷ்ணு, வைகைக்கரை சென்று அங்கே செம்மனச் செல்வி என்னும் பிட்டு வியாபார மூதாட்டியிடம் உதிரும் பிட்டைக் கூலியாகப் பேசி, அந்தப் பிட்டு வாணிச்சியின் வீட்டு நபராக மண் சுமந்து, பிரம்படிகள் பலபட்டு வைகையை அடைந்த மகாவிஷ்ணு, தம்முடைய மக்களில் இருவர் மாண்டதையும் பார்த்துவிட்டு, கலிக்கொடுமையின் மீது கடுங்கோபங் கொண்டவராய் ஸ்ரீரங்கமாபதியில் வந்தமர்ந்தார். . . தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚
அய்யா வைகுண்டர் {1008} - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா ஆறுசெஞ்சடை சூடிய ஐயனே அலையிலேதுயி லாதி வராகவா நீறுமேனி நிரந்தரம் பூசிவா நீசிவாசிவ மைத்துன ராகவா வீறுசத்தி மணவாள ரானவா வீரலட்சுமி மன்னரரி ராகவா ஏறுமீதினி லேறிடு மீஸ்வரா எமையாட்கொள் ளும்நாரணா போற்றியே 04.01.2026 அய்யா வைகுண்டர் உண்டு அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா ஆறுசெஞ்சடை சூடிய ஐயனே அலையிலேதுயி லாதி வராகவா நீறுமேனி நிரந்தரம் பூசிவா நீசிவாசிவ மைத்துன ராகவா வீறுசத்தி மணவாள ரானவா வீரலட்சுமி மன்னரரி ராகவா ஏறுமீதினி லேறிடு மீஸ்வரா எமையாட்கொள் ளும்நாரணா போற்றியே 04.01.2026 அய்யா வைகுண்டர் உண்டு - ShareChat