கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஐந்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 06.01.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
==========
மருக்கிதழு மீசுரரும் மாமுனிவர் தேவர்களும்
நீசனாய்த் தோன்றி நிரந்து பரந்திருந்த
தேசத் திருவனந்தம் செல்லவகை யேதுவையா
அல்லாமல் நீசன் அவனிடத்தில் போயிருந்தால்
எல்லா மவன்றனக்கு ஈடாகிப் போகுமல்லோ
கைவாய்த்து தென்று கலியனவன் கொண்டாடி
மெய்வாய்த்து தென்று மேலாக மாநீசன்
பரிகாசங் செய்வானே பார்முழுது மாநீசன்
ஆனதா லங்கேக அச்சுதரே ஞாயமில்லை
மான மழிந்தாச்சே மாகலியன் வந்ததினால்
எல்லாங் கழியை ஈடழிக்கப் பாருமையா
இல்லையே யானால் எங்களுக் கிங்கேதான்
சென்ற இடமெல்லாம் சிறைபோ லிருக்குதையா
என்றுதான் தேவர் ஈசர்முதல் சொல்லிடவே
.
விளக்கம்
==========
மகாவிஷ்ணு திருவனந்தபுரத்திற்குச் செல்லலாம் என்று புறப்பட்டு வந்த கொண்டிருக்கிருப்பதற்காக சொன்ன செய்தியைக் கேட்ட சிவபெருமானும், மாமுனிவர் முதலான தேவர்களெல்லாம் மாயவா, தாங்கள் ஸ்ரீரங்க மாபதியில் இருப்பதற்கு மனமில்லை என்பதற்கான காரணம் சரிதான், ஆனால் அங்கிருந்து எழுந்தருளிய தாங்கள் உலகில் எத்தனையோ திவ்விய தேசங்கள் இருக்க, கலிநீசன் ஆட்சிபுரிந்து கொண்டிருக்கும் திருவனந்தபுரத்தைத் தேர்ந்தெடுத்துச் செல்வதற்கான காரணமென்ன?
.
அப்படி அந்தக் கலிநீசனின் நாட்டில் தாங்கள் போய் இருந்தீர்களேயானால் எல்லா வகையான சங்கலபங்களும் அந்த நீசனுக்கு ஏதுவாகிப் போய்விடுமல்லவா? எல்லாம் தனக்குச் சாதகமாக அமைந்துவிட்டதென்று அந்தப் பொல்லாத கலியன் பெருமகிழ்ச்சியோடு, நம்மையும், நாட்டு மக்களையும் எள்ளி நகைத்து ஏளனமாய்ச் சிரிப்பானே, அந்த நகைப்பும், சிரிப்பும் அந்த நாட்டோடு மட்டும் நின்றுவிடாதே, பாரெல்லாம் பரவிவிடக் கூடுமே, ஆகையினால் அச்சுதராகிய தாங்கள் அந்த கலியனின் நாட்டிற்குச் செல்வது எந்த வகையிலும் நியாயமில்லை அய்யா.
.
அந்த மாபாவியாகிய கலிநீசன் பிறந்ததால், நம்முடைய மானம், மரியாதை எல்லாம் போனது போதாதா? அந்த இயல்பு கெட்ட கலியை இல்லாமலாக்குவதற்கு ஏதேனும் ஒரு உபாயத்தைச் செய்யுமய்யா. அப்படி தாங்கள் செய்யாதிருந்தால் எங்களால் இங்கே இருக்க முடியாது. நாங்கள் எங்கே சென்றாலும் அது எங்களுக்குச் சிறைவாசமாகவே தெரிகிறதய்யா என்று தேவர்களும் சிவபெருமானும் மகாவிஷ்ணுவுக்கு உணர்த்தினார்கள்.
.
.
அகிலம்
=======
அன்று அவர்களுக்கு அச்சுதரு மேதுரைப்பார்
நன்றுநன்று வானவரே நல்லபர மேசுரரே
கலியேது நீசம் காணேது வையகத்தில்
சலிவேது ராச்சியத்தில் தானேதும் நானறியேன்
அனந்தபுரம் போக ஆதியி லென்றனக்குத்
தனந்தசுக முனிவன் சாபமுண் டானதினால்
கொஞ்சநா ளானாலும் குடியிருக்க வேணுமங்கே
வஞ்சகங்க ளில்லாத மாயன்வழி கொண்டனராம்
ஈசர்தனை யனுப்பி எம்பெருமா ளச்சுதரும்
வாசமுள்ள சேத்திரனும் மறையவனுந் தேவர்களும்
சங்க மதுகூடித் தத்திதத்தி யாய்வரவே
வங்கத் திருவனந்தம் வழிநோக்கித் தான்வரவே
வழியிலோ ரற்புதந்தான் மாயவனார் கண்டுமிகக்
களிகூர்ந் தவருடனே கட்டாக ஏதுரைப்பார்
மாமுனியே தேவர்களோ வழியி லொழுங்கொழுங்காய்
ஓமுனியே நின்றதையும் உரைப்பீர்கா ணென்றுரைத்தார்
.
விளக்கம்
=========
அவர்கள் அத்தனை பேரின் ஆதங்கத்தையும் பரிந்து கொண்ட மகாவிஷ்ணு வானவர்களே, உங்களுடைய உணர்வுகளை நான் மெச்சுகிறேன் என்று சொல்லிவிட்டு, சிவபெருமானைப் பார்த்து, பரமேஸ்வரா, கலியனுடைய கபடமான செயல்களைப் பூலோகத்தில் யாராலும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஏறத்தாழ உலகில் எல்லாருமே கலிமாய்கைக்குள் கட்டுண்டு கிடப்பவர்களாகவே இருக்கின்றனர். ஆனால், அவர்களைப் பற்றியிருக்கும் கலியின் விழுக்காடுதான் சற்று ஏற்றமும் இறக்கமுமாக இருக்கிறது. அந்தக் கலி பிடித்திருப்பதைக் கண்டவர் யார்? அந்தக் கலியின் கபடச் செயல்களால் இந்தப் புவியில் என்ன நடக்கப் போகிறது? திருவனந்தபுரத்தில் கலி எந்த அளவில் உள்ளது என்பதைப் பற்றியெல்லாம் நானறியேன்.
.
அன்றொருகால் சுகமுனிவன் என்னைத் திருவனந்தபுரத்திற்கு வரும்படியாக அழைப்பு விடுத்ததுமல்லாமல் அதற்கான வாக்குறுதியையும் என்னிடம் வாங்கியுள்ளான். ஆகவே, குறைந்த காலங்களாவது திருவனந்தபுரத்தில் தங்கியிருந்தாக வேண்டும் என்று சிவபெருமானிடம் சொல்லி, அவரை அங்கிருந்து கைலாயத்திற்கு அனுப்பி வைத்து விட்டு மகாவிஷ்ணு திருவனந்தபுரத்திற்குத் தன் பயணத்தைத் தொடரலானார்.
.
மகாவிஷ்ணுவோடு, சேத்திரன், அந்தணர்கள் மற்றும் வானவர்களெல்லாம் சேர்ந்து திருவனந்தபுரம் நோக்கிக் கூட்டமாக வந்து கொண்டிருக்கும் போது, மகாவிஷ்ணு வழியிலோர் அற்புதத்தைக் கண்டு அதிசயித்தார். தம்மோடு வந்து கொண்டிருக்கும் மாமுனிவர்களையும், தேவர்களையும் பார்த்து முனிவர்களே, தேவர்களே, இந்த நடைபாதையில் வரிசை வரிசையாக இத்தனை சிலைகளும் நிற்பதேன்? இவர்கள் யார்? என்ற விவரத்தை எனக்கு விரிவாகச் சொல்லுங்கள் என்றார்.
.
.
அகிலம்
=========
சிலையாகி நிற்கும் ரிஷிகளின் செய்தியும் சாப விமோசனமும்.
==================================================================
அப்போது மாமுனியில் அருண முனிவனொன்று
செப்போடு வொத்த திருமாலை யும்பணிந்து
மாயவரே நான்முகனும் வாழும் பிரம்மமதில்
ஆய கலையிருஷி ஐம்பத் தொருநான்கோர்
பிரமன் பிறப்பைப் புகுந்தெடுத் திவ்விருஷி
வரமான புத்தகத்தை மாறாட்டஞ் செய்ததினால்
அறிந்தந்த வேதாவும் அவர்கள் தமையழைத்துச்
செறிந்த இருஷிகளைச் சிலைக்கல்லாய்ச் சாபமிட்டார்
அப்பொழு திவ்விருஷி அயனைத்துதித் திச்சாபம்
எப்பொழு திச்சாபம் ஏகுமென்றார் மாயவரே
வேதா தெளிந்து விஷ்ணுஸ்ரீ ரங்கம்விட்டுத்
தீதோர் திருவனந்தம் செல்லவரும் வேளையிலே
வந்து சிலைதனையும் மாயவனார் தொட்டிடுவார்
சிந்து திருக்கைதான் சிலைமேலே பட்டவுடன்
தீருமுங்கள் சாபமென்று சிவயிருஷி யானோர்க்குப்
பேருல கம்படைத்த பிரமன் விடைகொடுத்தார்
அந்தப் பொழுதில் ஐம்பத்தொரு நான்குரிசி
இந்தக் கற்சிலையாய் இவரிருந் தாரெனவே
மாமுனிவன் சொல்ல மாயவரும் நல்லதென்று
தாமுனிந்து கற்சிலையைத் தான்தொட்டா ரம்மானை
.
விளக்கம்
=========
நடைபாதையில் வரிசையாக நின்றுகொணடிருக்கும் ஐம்பத்து ஐந்து கற்சிலைகளைப் பற்றிய காரண காரியங்களைப் பற்றி மகாவிஷ்ணு தம்மோடு பயணித்துக் கொணடிருக்கும் தேவர்களிடமும், முனிவர்களிடமும் கேட்டதும், அதல் ஒருவரான அருணமுனி என்பவர், மகாவிஷ்ணுவின் திருவடியைத் தொட்டு வணங்கியவாறு, சுவாமி, இங்கே கற்சிலைகளாக நிலைபெற்றிருக்கும் ஐம்பத்து ஐந்து பேரும் ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் கற்றுத் தேர்ந்துயர்ந்த ரிஷிகள்.
.
இவர்கள் முன்பொருகால், பிரம்மதேவன் வாசம் செய்கின்ற சத்திய லோகத்தில் புகுந்து, பிரம்ம தேவர் பிறப்பு, இறப்புக் கணக்குகளைக் குறித்து வைத்திருந்த புத்தகத்தைத் திருட்டுத்தனமாக எடுத்துத் தவறான் முறையில் அதைப் பயன்படுத்தினார்கள்.
.
இதை அறிந்த பிரம்மதேவன், இந்த ஐம்பத்து ஐந்து ரிஷிகளையும் அழைத்து, அவர்களின் இந்த மாறாட்டச் செயலைக் கண்டித்ததோடு, அவர்கள் ஐம்பத்து ஐந்து பேரையும் கற்சிலையாகும்படி சாபமிட்டார்.
.
உடனே, இந்த ரிஷிகளெல்லாம் பிரம்மதேவரின் திருவடியில் வீழ்ந்து, சுவாமி, எங்களுக்கு இந்தச் சாபம் எப்போது தீரும் என்பதையும் சொல்லுங்கள் என்று மன்றாடினர்.
.
பிரம்மதேவனோ, ரிஷிகளைப் பார்த்து, ரிஷிகளே, மகாவிஷ்ணு ஸ்ரீரங்க மாபதியிலிருந்து புறப்பட்டு கலிநீசன் ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் திருவனந்தபுரம் நோக்கி வருகின்றபோது, அங்கே கற்சிலைகளாக நின்று கொணடிருக்கும் உங்கள் மீது தொடுவார். புனித தீர்த்தமாகிய அவருடைய திருக்கரங்கள் உங்கள் மீது பட்டதுமே, உங்களுக்கு உண்டான இந்தச் சாபம் தீரும் என்று சொல்லி அந்த ரிஷிகளை அனுப்பிவைத்தார். அன்று முதல் இந்த ஐம்பத்து ஐந்துபேரும் இப்படி கற்சிலைகளாக இங்கே நின்று கொண்டிருக்கிறார்கள் என்று அந்தச் சிலைகளைப் பற்றிய செய்தியை மாமுனிவர் மகாவிஷ்ணுவிடம் தெரிவித்தார். அதனால் மகிழ்ச்சியுற்ற மகாவிஷ்ணு, அந்த கற்சிலைகளையெல்லாம் தம் திருக்கரத்தால் தழுவினார்.
.
.
அகிலம்
========
உடனே இருஷிகளாய் உருவெடுத்து மாலடியைத்
தடமேலே வீழ்ந்து தானாவி யேகுவித்து
அன்று பிரமா அடியார்க்கு இட்டசாபம்
இன்றகல வைத்து இரட்சிக்க வந்தவரே
எங்களுக்கு நல்லகதி ஈந்துதா ருமெனவே
திங்கள்முக மாயருட திருப்பாதம் போற்றிநின்றார்
.
விளக்கம்
==========
மகாவிஷ்ணுவின் திவ்விய திருக்கரங்கள் பட்டதுமே கற்சிலைகளெல்லாம் ரிஷ்களாய் உருமாறி உயிர் பெற்றன. தன்நிலை பெற்ற ரிஷிகளெல்லாம் மகாவிஷ்ணுவின் பாதார விந்தத்தில் வீழ்ந்து வணங்கி எழுந்து, கை குவித்து கும்பிட்டபடியே நின்று, அன்றொருகால் எங்களுக்கு பிரம்மதேவன் கொடுத்த சாபத்தை இன்று அகலும்படி செய்து எங்களையெல்லாம் இரட்சிக்க வந்த மாதவமே, எங்களுக்கு நற்கதி அருளுங்கள் என்று, அந்த சந்திரவதன மாயவரின் திருப்பாதத்தைப் போற்றி பணிந்து வணங்கி நின்றார்கள்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩


