ShareChat
click to see wallet page
search
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை நான்காம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 28.12.2025. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ========= அப்பொழு தெம்பெருமாள் அந்தமுனிக் கேதுரைப்பார் இப்பொழுது நீங்கள் ஏகுங்கோ செந்தூரில் செந்தூர்ப் பதியில் சிறந்தவா ரிக்கரையில் நந்த கோபால நாராய ணாவெனவே மாயநீ சக்கலியை வதைசெய்து தர்மமதாய் ஞாயமுடன் வைந்தர் நாட்டையொரு சொல்லதுக்குள் ஆளவர வேணுமென்று அருந்தவசு பண்ணுமென வேழமொத்த மாமுனிக்கு விடைகொடுத்தார் மாயவரும் விடைவேண்டி மாமுனிவர் வேல னுறைந்திருக்கும் கடலான தற்கரையில் கடுந்தவசு பண்ணினரே . விளக்கம் ========== மாமுனிவர்களின் மனக்குமுறல் மகாவிஷ்ணுவின் மனதைக் கரைத்தது. எனவே ஞான முனிவரையும், கலைமுனிவரையும் பார்த்து, மகாவிஷ்ணு சொல்கிறார், முனிவர்களே, நீங்கள் இருவரும் இப்போதே திருச்செந்தூருக்குச் செல்லுங்கள். அங்கே, செந்தூர்ப் பதியருகிலுள்ள சிறப்புமிகுந்த கடற்கரையில் நின்று கொண்டு மாயையாகிய நீசக் கலியை தர்மத்தால் வதை செய்து, உலகையெல்லாம் ஒரு சொல்லுக்குள்ளாக்கி, நீதியுடன் ஆட்சி புரிவதற்கு வைகுண்டர் வர வேண்டுமென்று நினைவிலே நிறுத்திய வண்ணம் நந்தகோபாலா நாராயணா எனச் சொல்லியவாறு அருந்தவசு பண்ணுங்கோ என்று விடை கொடுத்தார். , மகாவிஷ்ணுவிடம் விடைபெற்ற ஞானமுனிவரும், கலை முனிவரும் முருகப்பெருமான் உறைந்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் திருச்செந்தூர் கடற்கரையில் அரூப நிலையில் நின்று, வைகுண்ட அவதார வரவை வேண்டியபடியே அருந்தவம் செய்யலானார்கள். . . அகிலம் ========= மகாவிஷ்ணு போக முனிவரைச் சந்தித்தல். =============================================== போகமுனி தவசு ================== அப்படியே மாமுனிவர் அங்கே தவசிருக்க இப்படியே மாயன் இசைந்தஸ்ரீ ரங்கமதில் போகின்ற வேளையிலே போகனென்ற மாமுனிவன் தாவு மொருமலையில் தலைசிதறிச் சாகவென்று வேகித்து மாமுனிவன் விசையாக முட்டுகையில் ஆகமுற்று எம்பெருமாள் அவனோடங் கேதுரைப்பார் மலைதனிலே முட்டி மாளவென்று மாமுனிநீ குலைகுலைந்து நின்றவிதம் கூறுநீ யென்றனராம் அப்போது மாயவனார் அடிபோற்றி யேதுரைப்பான் செப்பமுள்ள மாயவரே சீமைதனை யளந்த மாயவரேநானுமினி மாள்வதல்லா லிங்கிருக்க ஞாயமில்லை அய்யா நாரா யணப்பொருளே என்றுரைக்க மாமுனியும் ஏதுரைப்பா ரெம்பெருமாள் உன்று வசனம் உரையென்றார் மாமுனியை என்றெம் பெருமாள் இவையுரைக்க மாமுனியும் அன்று முனிசொன்ன வசனங்கே ளன்போரே . விளக்கம் ========== ஞானமுனிவரையும், கலைமுனிவரையும் தவம் செய்யும்படியாக அருள்பாலித்த மகாவிஷ்ணு, அங்கிருந்து ஸ்ரீரங்கமாபதி நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்தார். அவர் சென்றுகொண்டிருந்த பாதையோரத்தில் இருந்த ஓர் மலையின் மீது போகன் என்ற பெயர்கொண்ட மாமுனிவர் ஒருவர் தற்கொலை செய்ய முயற்சித்து, தம் தலையை தாமே வேகமாக முட்டி மோதிக் கொண்டிருந்தார். . அதைக் கண்ட மகாவிஷ்ணு, போக மாமுனிவரின் அச்செயலைத் தடுத்து நிறுத்தி, மாமுனிவரே, நீங்கள் நிலை குலைந்த வண்ணம் உங்கள் தலையை இந்த மலையிலே மோதி மாண்டு போகவேண்டுமெனத் துணிந்திருக்கிறீரே, அதற்கு எது காரணம்? என்று வினவினார். . அப்போது, மகாவிஷ்ணுவின் பாதார விந்தத்தைப் பணிந்து போற்றிய அந்த போகமாமுனிவர் சொல்லுகிறார். செப்புதல் வித்தைக்கு செவ்வை சேர்க்கும் மாயவரே, உலகு ஈரேழையும் ஓரடியாய் அளந்த மாயவா, நான் இறப்பதைத் தவிர இந்த உலகில் இனி இருப்பதில் எவ்வகை நியாயமும் இல்லை என்று பதிலுரைத்தார். . போக மாமுனிவர் இப்படிச் சொன்னதுமே, அந்த மாமுனிவரைப் பார்த்து அதற்கான உண்மையான காரண காரியத்தை விளக்கமாகச் சொல்லும் என்று மகாவிஷ்ணு வேண்டினார். அதற்கு போக மாமுனிவர் சொல்லுகிறார்.. . . அகிலம் ========= தர்மநீ தமதுவும் தரணிதனில் மானுபமும் கர்மக் கலியால் கட்டழிந்து போச்சுதையா நன்மையெல்லாம் நாடுவிட்டு நடந்து மறைந்ததினால் வன்மம்வந்து வையகத்தில் வளர்ந்த படியாலும் நானிருந்த நிட்டை நாலிரண் டாகையிலே மானிபங்கள் தர்மம் மறையத்தான் போனதினால் என்தவந்தான் வம்பில் இழந்தேனே யென்றுசொல்லித் தன்தலையைத் தான்சிதறிச் சாகவே ணுமெனவே மலைதனிலே முட்டி மாண்டுவிட வேணுமென்று அலைமேல் துயின்ற ஆண்டியோ டேயுரைத்தான் . விளக்கம் =========== சுவாமி, நிலவுலகில் இது காலம்வரை நிலவிக்கொண்டிருந்த தர்ம நீதங்களும், வெட்கம், மானம், ஈவு, இரக்கம், தயவு. தாட்சண்ணியம் போன்ற மனித நேயங்களும். இந்த உலகத்தைவிட்டுக் கடந்து காணாமல் போய்விட்டன. அதனால் வறுமையும், கேடும், வஞ்சகமும், சூழ்ச்சியும், பொய்யும், புரட்டும், திருட்டும், பேராசையும். புகழாசையும் பூவுலகில் மிகவும் பெருத்து விட்டன. ஆகவே, நான் ஆறு வருடங்களாகப் புரிந்து கொண்டிருந்த அருந்தவத்தை வீணாக இழந்து விட்டேன். தவத்தை இழந்த நான் இனி இருந்து பயனில்லை. எனவேதான், இந்த மலையில் என் தலையை மோதிச் சாகவேண்டுமென முடிவு செய்தேன் என்று அலையிலே துயிலுகின்ற ஆதிபரனாகிய மகாவிஷ்ணுவிடம் போக மாமுனிவர் தெரிவித்தார். . . தொடரும்….. அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚
அய்யா வைகுண்டர் - ShareChat