#வரலாற்றில் இன்று
*டிசம்பர் 14, 1911*
நார்வேயைச் சேர்ந்த ரோல்ட் அமுண்ட்சென் என்பவர் தென்துருவத்தை அடைந்ததன்மூலம், அங்கு சென்ற முதல் மனிதர் என்ற பெருமையைப் பெற்ற நாள்.
1910 ஜூன் 03 அன்று நார்வே தலைநகர் ஆஸ்லோவிலிருந்து கிளம்பிய இவர்களது குழு, திமிங்கலங்களின் குடா என்ற இடத்திலிருக்கும் ராஸ் பனி அடுக்கின் கிழக்கு முனையை 1911 ஜனவரி 14 அன்று அடைந்தனர். தென்துருவத்தை அடைவதில் இந்தப் பனி அடுக்கு கடும்சிரமத்தைக் கொடுத்ததால், இதற்கு மாபெரும் பனித் தடை என்றும் பெயர் இருந்தது.
தங்கும் முகாமினை இங்கு அமைத்துக்கொண்டு, நால்வர் மட்டும் நாய் இழுக்கும் வண்டிகள், பனிச் சறுக்கு ஆகியவற்றில் தென்துருவத்தை நோக்கிய பயணத்தை மேற்கொண்டனர்.
பனியின் கடுமை தாள முடியாமல், 1911 செப்டம்பர் 08 அன்று பயணத்தைக் கைவிட்டு முகாமிற்குத் திரும்பினர். பின்னர், 1911 அக்டோபர் 19 அன்று 52 நாய்கள் இழுக்க, 4 வண்டிகளில் கிளம்பிய இவர்கள் 1911 டிசம்பர் 14 அன்று தென்துருவத்தை அடைந்தபோது 16 நாய்கள் மட்டுமே உயிருடனிருந்தன. மீண்டும் தங்கும் முகாமை 1912 ஜனவரி 25 அன்று அடைந்தபோது 11 நாய்கள் மட்டுமே உயிருடனிருந்தன.
அட்லாண்ட்டிக் கடலையும், பசிஃபிக் கடலையும், ஆர்க்டிக் கடலிலுள்ள கனடிய ஆர்க்டிக் தீவுக்கூட்டங்கள் வழியே இணைக்கும் வடமேற்குப் பெருவழியையும் முதலில் கடந்தவர் அமுண்ட்சென்தான். இந்தப் பயணத்தை 1903-1906 காலத்தில் இவர் மேற்கொண்டார். 1926ல் வடதுருவத்தை விமானம் மூலம் அடைந்த முதல் மனிதரும் அமுண்ட்சென்தான்.
1928 ஜூன் 28 அன்று ஆர்க்டிக் பெருங்கடலில் ஒரு காப்பாற்றும் பணிக்காக, மேலும் 5 பேருடன் அமுண்ட்சென் சென்ற விமானம் காணாமல் போனது. விமானம் கடலில் விழுந்து, இறந்திருப்பார்கள் என்று முடிவு செய்யப்பட்டது.


