லிவ்-இன் உறவுகளில் இருக்கும் பெண்களுக்கு மனைவி அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்திருக்கிறது.
லிவ்-இன் உறவுகளில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இந்த உறவுகள் இந்திய சமூகத்திற்கு கலாச்சார அதிர்ச்சியாக இருந்தாலும், பரவலாக நடைபெறுகின்றன என நீதிபதி எஸ். ஸ்ரீமதி குறிப்பிட்டார். திருமணப் பாதுகாப்பு இல்லாததால் பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்திய சமூகத்திற்கு கலாச்சார அதிர்ச்சி
"உண்மையில் லிவ்-இன் உறவுகள் இந்தியச் சமூகத்திற்கு கலாச்சார அதிர்ச்சிதான், ஆனால் அவை எல்லா இடங்களிலும் நடக்கின்றன. நவீனப் பெண்கள் இந்த உறவைத் தேர்வு செய்கிறார்கள். ஆனால் திருமணப் பாதுகாப்பு இல்லை என்பதை உணரும்போது, யதார்த்தம் நெருப்பாய் அவர்களைச் சுட்டெரிக்கத் துவங்குகிறது. நவீன கலாச்சாரத்தில் சிக்கும் பெண்களைக் காக்க வேண்டும். பண்டைய இந்தியாவின் காதல் திருமணம் போலவே, லிவ்-இன் உறவுகளையும் அங்கீகரிப்பதன் மூலம் அப்பெண்களுக்கு மனைவி அந்தஸ்தை வழங்கிப் பாதுகாக்கலாம்.
மனைவி அந்தஸ்து
லிவ்-இன் உறவில் பெண்களுக்கு, காதல் திருமணத்தின் கீழ் 'மனைவி' அந்தஸ்தை வழங்க வேண்டும். இதன்மூலம், உறவில் சிக்கல் ஏற்பட்டாலும், அவர்களுக்கு 'மனைவி' என்ற வகையில் உரிமைகள் வழங்கப்படும்" என நீதிமன்ற அமர்வு தெளிவுபடுத்தியது. இந்த கருத்துகள், திருமண வாக்குறுதி வழக்கில் முன்ஜாமீன் கோரிய மனுவை விசாரிக்கும்போது வெளியாகியுள்ளது.
வழக்கின் பின்னணி
வழக்குத் தரப்பின்படி, மனுதாரர் திருமண வாக்குறுதி அளித்து ஒரு பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டார். பெற்றோர்கள் மறுத்ததால், காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய திருச்சிக்கு சென்று ஒன்றாகத் தங்கினர். காணாமல் போனதாக புகார் அளித்தபோது, காவல் நிலையத்தில் மனுதாரர் பெண்ணை மணப்பதாக ஒப்புக்கொண்டார். ஆனால், குடும்பத்தினர் கலப்புத் திருமணம் என்பதால் எதிர்த்து, இருவரையும் கொலை செய்ய மிரட்டினர் என்று சொல்லப்படுகிறது.
ஆனால், உறவை முறித்துவிட்ட பின்னரே அப்பெண் புகாரளித்ததாகவும், வேலையோ வருமானமோ இல்லாததால் பெற்றோரைச் சார்ந்தே வாழ்வதாகவும், அப்பெண்ணை மணக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறி முன்ஜாமீன் கோரினார்.
நீதிமன்றம் உத்தரவு
மோசடியான பாலியல் உறவைக் குற்றமாக்கும் BNS பிரிவு 69, மனுதாரருக்கு எதிராகச் சேர்க்கப்படவில்லை. அப்பிரிவை உடனடியாகச் சேர்க்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மனுதாரருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் இடையிலான உறவு மறுக்கப்படவில்லை; பாலியல் உறவுக்குப் பிறகு திருமணம் செய்ய முடியாது என மனுதாரர் கூறியதையும் நீதிபதி குறிப்பிட்டார்.
நீதிமன்றம் வருத்தம்
சிறுவர் சீரமைப்புச் சட்டம் (POCSO) சிறுமிகளையும், திருமணமான அல்லது விவாகரத்து பெற்ற பெண்களையும் காக்கிறது. ஆனால், லிவ்-இன் உறவுகளில் சிக்கும் பெண்கள் சட்டப் பாதுகாப்பு இல்லாமல் மன உளைச்சல் அனுபவிப்பதாக நீதிமன்றம் வருத்தம் தெரிவித்தது. பாலியல் உறவு நடந்திருப்பதால், பாதிக்கப்பட்ட பெண்ணை மனைவியாக அங்கீகரிக்க வேண்டும். அல்லது திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்த குற்றத்திற்காக மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மனுதாரர் திருமணம் செய்ய மறுத்ததால், BNS சட்டத்தின் பிரிவு 69 இன் கீழ் வழக்குப் பதிவு செய்வதுடன் நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றத்தின் தீவிரத்தையும், முதல்நிலை ஆதாரம் இருப்பதையும் கருதி, நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்து, மனுவைத் தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. #📢ஜனவரி 19 முக்கிய தகவல் 😃 #அன்பான கணவன் மனைவி # # நல்ல புரிதல் கொண்ட உறவு# #♥️😍# #கணவன் மனைவி உறவு 🫂♥️


