ஸ்ரீ (969)கண்ணபுரம் செல்வேன்..
கவலையெல்லாம் மறப்பேன்..
கண்ணனின் சன்னதியில்
எந்நேரமும் இருப்பேன்
திருக்கண்ணபுரம் செல்வேன்..
கவலையெல்லாம் மறப்பேன்..
வண்ண வடிவழகை
கண்குளிரக் காண்பேன்..
எண்ணமெல்லாம் அவனின்
இணையடியே என்பேன்..
நித்தியபுஷ்கரணி
நீரினிலே குளிப்பேன்..
நிமிர்ந்த கோபுரத்தை கண்டு
கைகள் குவிப்பேன்..
உத்பலாவதக
விமானத்தையே நினைப்பேன்..
உள்ளத்தில் அள்ளி வைத்தே
உவகையிலே திளைப்பேன்..
கருடமண்டபத்தை
கடந்து தொடர்ந்திடுவேன்..
கண்ணாடி சேவை கண்டு
கண்கள் கசிந்திடுவேன்..
பெருமான் சன்னதி முன்
பித்தாகி நின்றிடுவேன்..
பிறவிப்பிணி அறுத்து
உலகை வென்றிடுவேன்..
எட்டெழுத்தைச் சொல்லி
கிட்ட நெருங்கிடுவேன்..
ஓம் நமோ நாராயணா!
ஓம் நமோ நாராயணா!! என்ற
எட்டெழுத்தைச் சொல்லி
கிட்ட நெருங்கிடுவேன்..
என்னைத் தெரிகிறதா
என்றே கேட்டிடுவேன்..
கட்டி அணைத்தெனக்கு கை
கொடுப்பான் கண்ணன்..
கற்பூரம் மணக்கின்ற
கால் பிடித்தே உய்வேன்..
திருக்கண்ணபுரம் செல்வேன்..
கவலையெல்லாம் மறப்பேன்..
கண்ணனின் சன்னதியில்
எந்நேரமும் இருப்பேன்.. #பெருமாள்


