ShareChat
click to see wallet page
search
கர்த்தாதி கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை நான்காம் நாள் வாசிப்பு தொடர்ச்சி- நாள் 17.12.2025. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ========= பூமிதனில் வெடித்த பொல்லாத நீசனையும் சுவாமிமுன் பானதிலே சுரண்டியத னாலிழுத்து கொண்டுவந்து விட்டார் குருநாதர் முன்பதிலே கண்டுஅந்த ஈசர் கனமாய் விசேசமுற்று உன்றனக்கு வேணுமென்று உகந்ததெல்லா மிப்போது என்றனிடங் கேளென்று ஈசுரனார் தானுரைக்க உடனே யவனும் உள்ள மிகக்களித்து விடமேதான் பூண்டு விரிகந்தைத் தானுடுத்து மேலெல்லாங் குப்பை மிகப்பூசி யானையுடத் தோலி லிருப்பவனோ சொன்னதெல்லாந் தாறதுதான் என்று களிப்பாய் ஈசுரரை யந்நீசன் அன்று மொழிய அமர ரதையறிந்து பொல்லாத நீசா பொருளறிய மாட்டாமல் எல்லாரைப் போலே ஏசாதே ஈசுரரை லோகம் படைத்தவர்காண் உறுபொருளாய் நிற்பவர்காண் ஏகம் நிறைந்தவர்காண் இறவா திருப்பவர்காண் பட்சிப் பறவை பலசீவ செந்துகட்கும் நிச்சயமாய்ப் பொசிப்பு நிதமு மளிப்பவர்காண் மாயவனும் நான்முகனும் மறையு மிகக்காணாமல் தேயவா றுங்காணாத் திட்டிக்க வல்லவர்காண் . விளக்கம் ========== இரு கவளியாகிய கவை ஆயுதத்தால் கோரி எடுக்கப் பெற்ற அந்தக் கலிநீசனை, இன்னொரு ஆயுதமான கரண்டியால் இழுத்துக்கொண்டு வந்து, சிவபெருமானின் முன்னிலையில் நிறுத்தினார்கள். அந்தக் கலிநீசனைக் கண்ட சிவபெருமான், மிகவும் ஆச்சிரியத்தோடு அவனைப் பார்த்து உனக்கு என்னென்ன வேண்டுமென்று தோன்றுகிறதோ அவற்றையெல்லாம் என்னிடம் கேள் தருகிறேன் என்றார். . அதனால் அகமகிழ்ந்த நீசனோ, நல்லபாம்பின் விஷத்தை உண்டதுமல்லாமல், மிகக் கிழிந்த ஆடையை அணிந்து கொண்டு அங்கமெல்லாம் சாம்பலைப் பூசியபடி யானையின் தோலிலே அமர்ந்திருக்கும் நீ நான் கேட்பதையெல்லாம் தரப்போகிறாயா? என்று சிவபெருமானை மிக ஏளனமாகப் பார்த்துப் பரிகசித்தான். . இதைக் கவனித்த வானவர்களோ, நிலை குலைந்தவர்களாகி, நீசனைப் பார்த்து, பொல்லாதவனே, சிவபெருமானின் வல்லமைகளை அறியாமல் வாய்க்கு வந்தபடி உளறாதே. அவர் இந்த உலகத்தைப் படைத்தவர். தாம் படைத்தவைகளுக்குள்ளும் அவற்றைக் கடந்தும் இருப்பவர். இந்த உலகில் அவர் இல்லாத இடமே இல்லை. எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருப்பவர். என்றென்றும் இறவாதிருப்பவர். . பச்சி பறவை முதல் உலகிலுள்ள எண்பத்து நான்கு லட்சம் விதமான உயிரினங்களுக்கெல்லாம் அவ்வப்போது தேவையான உணவை கொடுத்து வாழ்வளிப்பவர். . மகாவிஷ்ணு, பிரம்மதேவன், மற்றும் நான்கு வேதங்களாலும் தேவர்களாலும் கண்டுகொள்ளமுடியாதவர். எல்லாவற்றையும் படைக்கும் இறைவனே இவர்தான் என்று வானவர்களெல்லாம் அந்தக் கலிநீசனுக்குச் சிவபெருமானின் பெருமையைப் புகட்டினார்கள். . . அகிலம் ======== இத்தனையும் நீசனுக்கு இயம்ப அமரர்களும் புத்திக்கு நட்புப் போதாமல் பின்சொல்லுவான் கலிச்சி தோற்றம் ஆனால்தான் தேவர்களே அப்படிநீ ரொப்பினீரே தானா யிருந்து சர்வமதுமுண் டாக்கிவைத்த ஆனா லெனதுடைய அளவி லளவாக மானா ரொருகுழலை வகுக்கச்சொல் பார்ப்போங்காண் என்றந்த நீசன் இழிவாகச் சொல்லிடவே அன்றந்த ஈசர் அவரறிந்து ஏதுரைப்பார் நல்லதுநீ கேட்டதுதான் நாம்படைத்துத் தாறோமென்று வல்லபர மேசுரனார் வகையே தெனப்பார்த்து உந்தனக்கு நேரே ஒத்த பலம்போலே அந்தமுடன் பிறந்தால் ஆகுமோ வென்றுரைத்தார் . விளக்கம் ========== சிவபெருமானை ஏளனமாக நினைத்து, எள்ளி நகைத்த கலிநீசனுக்கு, வானவர்களெல்லாம் சேர்ந்து, சிவபெருமானின் வானளாவிய பெருமைகளையெல்லாம் புகட்டினார்கள். ஆனால் அந்தக் கலிநீசனின் புத்திக்கு வானவர்கள் போதித்த நல்லுபதேசங்கள் எட்டவில்லை. . எனவே, அந்தக் கலிநீசன் தேவர்களைப் பார்த்துச் சொல்லுகிறான். தேவர்களே ! இந்த சிவபெருமானின் பெருமைகளைச் சிறப்பாகச்சொன்னீர்கள். நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாக இருந்தால், அதாவது இவரே சர்வதையும் படைத்தது உண்மையானால், எனக்குப் பொருத்தமான அளவும் அழகும் உடையதோர் பெண்ணை உருவாக்கித் தரச்சொல்லுங்கள் பார்ப்போம் என்று அந்தக் கலிநீசன், சிவபெருமானை மிகவும் இழிவாக நினைத்துச் சொன்னான். . கலிநீசன் தம்மை மிகவும் தரக்குறைவாக நினைக்கிறான் என்பதை உணர்ந்த சிவபெருமான், கலிநீசனைப் பார்த்துச் சொல்லுகிறார். நீ கேட்டது மிக நல்லது. உன் விருப்பப்படியான ஒரு பெண்ணை யாம் படைத்துத் தருகிறோம் என்று சொல்லிவிட்டு, அதற்கான உபாயத்தை ஒரு கணம் சிந்தித்த சிவபெருமான், மீண்டும் கலிநீசனைப் பார்த்து உனக்கு உண்டான பலத்திற்கு ஈடான ஒரு பெண்ணைப் பிறவி செய்து தந்தால் போதுமா என்று கலிநீசனிடம் சிவபெருமான் கேட்டார். . . அகிலம் ======== அப்போது நீசன் அரனார் தனைநோக்கி ஒப்பமாகா தென்பலத்தில் ஒன்றி லரைப்பலமாய் அழகி லதிகமுமாய் ஆங்காரம் பாதியுமாய் குழகிய வாயழகாய்க் குரும்பத் தனத்தழகாய் மேனி யழகாய் விழியழகாய் வீச்சழகாய் யோனி யழகாய் ஒடுங்கு மிடையழகாய் கரமழகாய்க் காலழகாய்க் கண்ணழகாய்ப் பல்லழகாய் சரக்கூடு முன்னழகாய்த் தலைகண்டம் பின்னழகாய் தொடையழகாய் விரலழகாய்ச் சொல்லழகாய்ப் பல்லழகாய் நடையழகாய் வீச்சழகாய் நல்ல குழலழகாய் இடையழகாய் மேனி இறுக்கத் துடனழகாய் உடையழகாய்த் தேகம் ஓங்காரத் தொங்கலுமாய் அழகுக்கு ஏற்ற அஸ்தர் மணத்தோடு கழப கஸ்தூரி கம்மென்ற வாசனைபோல் மூவர்தே வர்களையும் மோக மாய்மயக்கச் சீவ னதுகொடுத்துத் திட்டித்துத் தாருமென்றான் . விளக்கம் ========== சிவபெருமான் அப்படிக் கேட்டதுமே, கலிநீசன் சிவபெருமானை நோக்கி சொல்லுகிறான், என்னுடைய பலத்திற்குச் சமமான பலத்தோடு பெண்ணைப் பிறவி செய்ய வேண்டாம். என்னுடைய பலத்தில் பாதி அளவு பலமும், அழகில் என்னைவிட அதிகமானவளாகவும், ஆங்காரத்தில் என்னைவிட பாதியுடையவளாகவும், மலரின் இதழ்களையொத்த உதடுகளையுடைய வாய் அழகும், தேங்காயக் குரும்பல் போன் அழகான மார்புகளையுடையவளாய், வாழிப்பான உடல் வாகும், கவர்ச்சியான கண்களும் வசீகரமான வார்வையும், வயப்படுத்தும் அக்குல் உடையவளாகவும், ஒடுங்கிய இடையும், அதற்கிசைந்த கைகளும், கால்களும், கண்களும், பற்களும் அமைந்தவளாய், மலர்ச்சரங்களைச் சூடுகின்ற கூந்தல், பின்னழகைவிட முதன்மை வாய்நததாகவும் இருக்க வேண்டும். மொத்தத்தில் அவளுடைய விரல்களும், சொற்களும், பற்களும், தொடையழகும், நடையழகும், இடையழகும், கூந்தல் சடையழகும் உடையழகும், இறுக்கமான உடலமைப்பில் ஓர் மென்மையும், அந்த அழகுக்கு ஏற்ற அத்தம் களபம், கஸ்தூரி ஆகியவற்றைப் போன்ற வாசனையுடையவளாய், மூவர் முதலான தேவர்களுக்கெல்லாம் மோக மயக்கத்தை ஏற்படுத்தத் தக்கதோர் பெண்ணைப் பிறவி செய்து உயிர் கொடுத்து தாரும் என்றான். . . அகிலம் ========= அப்போது ஈசுரனார் அகமகிழ்ந்து கொண்டாடி இப்போது கேட்டதற்கு என்செய்வோ மென்றுசொல்லி அருகில் சிவனார் அகமதிலே வீற்றிருக்கும் திருவுக்கு நன்றாய்த் தெரிவித்தா ரம்மானை கேட்டமா நீசனுக்குக் கீர்த்தியென்ன மாமயிலே தேட்டமுட னிப்போ செப்பென் றெனவுரைத்தார் அப்போது சத்தி ஆதி யடிவணங்கி ஒப்பொன் றில்லாத உடைய பெருமானே பாதியாய் நீசனையும் பகுந்தே யவனுடம்பில் விதியாயிடது விலாவி லொருயெலும்பைத் தட்டிக் கழற்றி சச்சுவருந் தானாக்கி திட்டித்து நீசனுக்குச் சிணங்கொடுவு மீசுரரே . விளக்கம் ========== கலிநீசனின் அவ்வுரையால் அகமகிழ்ந்த சிவபெருமான், இப்பொது இந்தக் கலிநீசன் கேட்டபடியான பெண்ணை எப்படி பிளவி செய்வது என்று சிந்தித்தவாறு, தம் அருகில் அமர்ந்திருக்கும் லோகமாதாவாகிய உமாதேவியைப் பார்த்து, உமையவளே ! கலிநீசன் கேட்டபடியான பெருமைமிகு பெண்ணை எவ்வாறு படைத்துக் கொடுக்கலாம்? அதற்கான ஓர் உபாயத்தை உடனே சொல் என்றார். . உடனே உமையவள் சிவபெருமானை வணங்கியவாறு, ஒப்பு உவமைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஆதிப் பரம்பொருளே ! என்னுடைய பெருமானே ! இந்தக் கலிநீசனை பாதியாக பகிர்ந்து, அதை வலது, இடது எனப் பிரித்து, அவனுடைய இடது பக்கத்து விலா எலும்பைக் கழற்றி எடுத்து, அந்த எலும்பை ஒரு பெண்ணாகப் படைத்து, உடனடியாக அந்தப் பெண்ணை இந்தக் கலிநீசனுக்குக் கொடுத்துவிடுங்கள் சுவாமி என்றாள். . . தொடரும்….. அய்யா உண்டு. #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar
🚩அய்யா வைகுண்டர் 🚩 - ShareChat