#Ulaganayagan_Kamal update only 🎯
#flashbackmemories : --
#அபூர்வசகோதரர்கள் - ரீமேக் அச்சம்
பொதுவாகவே ஒரு மொழியில் ஹிட் அடித்த படத்தை, 'ஈ' அடிக்காமல் காப்பி அடித்து ரீமேக் செய்வது சினிமாக்காரர்களின் வாடிக்கை. ஆனால், சிலரின் படங்களைத் தொட மட்டும் யோசிப்பார்கள். அதில் முக்கியமானவர்... கமல்.
காரணம் சிம்பிள். அந்த மனிதர் தன் நடிப்பால் அந்தப் படத்தை வேறு எங்கேயோ கொண்டு சென்று வைத்திருப்பார். தொட்டால் சுடும். மணிரத்னம் - கமல் கூட்டணியின் 'நாயகன்' படத்தை, இந்தியில் 'தயாவன்' என்று எடுத்து வினோத் கன்னா பட்டபாடு ஊரறிந்தது. அப்படி எல்லோரும் தொடப் பயப்படும் ஒரு சப்ஜெக்ட்... 'அபூர்வ சகோதரர்கள்'.
படம் வெளியாகி இன்றோடு 31 வருடங்கள். நம்ப முடிகிறதா?
'நாயகன்' தந்த பிரம்மாண்ட வெற்றி, கமலுக்கு ஒரு சந்தோஷமான சுமை. அடுத்து என்ன செய்வது? சாமானியமான கதைகளைத் தொட்டால், ரசிகர்கள் விடுவார்களா? 'புஷ்பக்', 'சத்யா' பரவாயில்லை ரகம். ஆனால் இடையில் வந்த 'சூரசம்காரம்', பாலசந்தரின் 'உன்னால் முடியும் தம்பி' எல்லாம் எதிர்பார்த்த கமர்ஷியல் மேஜிக்கை நிகழ்த்தவில்லை.
அப்போதுதான் அந்த அறிவிப்பு வந்தது. 'அபூர்வ சகோதரர்கள்'.
இயக்கம் சிங்கீதம் சீனிவாசராவ் என்றதும், 'இது என்ன மாதிரியான படமாக இருக்கும்?' என்று புருவம் உயர்ந்தது. ஜெமினி சர்க்கஸ், காந்திமதி என செய்திகள் கசிந்தன. அப்பா கேரக்டரில் நடிக்க மலையாள சூப்பர் ஸ்டார் பிரேம் நசீரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர் உடல்நலம் குன்றியதும், 'நானே செய்கிறேன்' என்று கமல் களமிறங்கினார். அம்மா வேடத்திற்கு லக்ஷ்மி மறுக்க, அந்த வாய்ப்பு ஸ்ரீவித்யாவுக்கு.
ரிலீஸுக்கு முன் பெரிய பில்டப் இல்லை. "படத்தில் ஒரு ஃபாரின் கிளி இருக்கிறது" என்பதுதான் அப்போதைய ஹாட் நியூஸ். ராஜாதி ராஜாவும், வருஷம் 16-ம் ஓடிக்கொண்டிருந்த நேரம். இளையராஜாவின் இசை பற்றிச் சொல்லத் தேவையில்லை. மனிதர் அப்போது தினமும் சிக்ஸர் அடித்துக் கொண்டிருந்தார். அதனால் பாடல்கள் 'இன்னொரு ஹிட்' ரகம். அவ்வளவே.
1989, ஏப்ரல் 14. ரிலீஸ்.
உண்மையைச் சொல்லப்போனால், 1986-ல் வந்த 'விக்ரம்' படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு கூட இதற்கு இல்லை. பார்த்திபனின் 'புதிய பாதை', பிரபுவின் 'பிள்ளைக்காக' படங்களுடன் போட்டி. ஆனால், திரை விலகியதும் கதை மாறியது.
கதை என்னவோ பழையதுதான். நேர்மையான போலீஸ் கொலை செய்யப்படுகிறார். மனைவிக்கு விஷம். பிறக்கும் இரட்டையர்களில் ஒன்று குள்ளம் (அப்பு), இன்னொன்று உயரம் (ராஜா). அப்பு பழிவாங்கப் புறப்படுகிறான். பழி ராஜா மேல் விழுகிறது.
ஆனால் திரைக்கதை? பிரமாதம்.
இடைவேளை வரை சீட் நுனியில் உட்கார வைத்த வித்தை. இரண்டாம் பாதியும் அப்படியே. தர்மராஜ், நல்லசிவம், சத்தியமூர்த்தி என்று வில்லன்களுக்குப் பெயர் வைத்து விளையாடியிருந்தார்கள். இது ஒரு பழிவாங்கும் கதை என்பதே படம் முடியும் வரை நமக்குத் தோன்றாததுதான் ஹைலைட்.
எல்லாவற்றையும் விட, அந்தக் குள்ள கமல்!
எப்படி நடித்தார்? அந்தக் கேள்வியே படம் பார்க்கும்போது வரவில்லை. அதுதான் கமல். வெளியே வந்த பின்தான், 'எப்படி?' என்று மண்டையை உடைத்துக் கொண்டோம். பி.சி.ஸ்ரீராமின் கேமரா கோணங்களும், கமலின் பிரத்யேக காலணிகளும் செய்த மாயம் அது.
அதன் பிறகு எங்கு பார்த்தாலும் 'அப்பு' காய்ச்சல். காலேஜ் கல்ச்சரல்ஸில் முழங்காலில் துணி கட்டிக்கொண்டு ஆடாதவர்களே இல்லை எனலாம். 'நாட்டியா', 'நர்த்தனா' ட்ரூப்ஸ்களில் அப்பு டான்ஸ் கம்பல்சரி.
கிராபிக்ஸ் என்றால் என்னவென்று தெரியாத காலத்தில், குற்றவாளியின் ஸ்கெட்ச் அப்படியே ஆளாக மாறும் காட்சி... ஒரு டெக்னிக்கல் அற்புதம். இன்று அதை 'டைம் லேப்ஸ்' என்கிறார்கள். அன்று அது பிரமிப்பு.
க்ரேசி மோகனின் வசனங்கள் இன்னொரு பலம். ஜனகராஜ், மனோரமா காம்பினேஷன் கிளாசிக். சோகத்திற்கு 'உன்னை நெனச்சேன்', ஆட்டத்திற்கு 'அண்ணாத்தே ஆடுறார்' என ராஜா ராஜியமே நடத்தினார்.
ரிசல்ட்?
சென்னை, மதுரை, கோவை என எல்லா ஊர்களிலும் ஹவுஸ்ஃபுல். 'உலகம் சுற்றும் வாலிபன்', 'திரிசூலம்' முறியடிக்கப்பட்ட சாதனைகளை, 'சகலகலா வல்லவன்' முறியடித்தது. அந்த ஏழு வருட சாதனையைத் தூக்கிச் சாப்பிட்டது 'அபூர்வ சகோதரர்கள்'. இந்தியில் 'அப்பு ராஜா'வாகச் சென்று அங்கும் வசூல் மழை.
படம் நூறு நாள் கழிந்ததும், முதலில் வெட்டப்பட்ட சர்க்கஸ் காட்சிகளை இணைத்தார்கள். அதைப்பார்க்கவே கூட்டம் அலைமோதியது.
'எய்தவனுக்குத் தெரியும் அம்பு எங்கு பாயும் என்று' ரிலீஸுக்கு முன்பே கமல் சொன்னார். அதுதான் நடந்தது. ஒரு தமிழ்ப் படத்தை இந்தியா முழுக்க ஓடவைக்க முடியும் என்று நிரூபித்த தருணம் அது.
'அண்ணாத்தே ஆடுறார்' பாடலில் ஒரு வரி வரும்... "ஒத்தையா நின்னுதான் வித்தய காட்டுவேன்".
தமிழ் சினிமாவிற்குத் தனியாக நின்று வித்தை காட்டும் கமலுக்கு, இது மிகப்பொருத்தமான வரி!
டீக்கடையார்
#KamalHaasan #SingeetamSrinivasaRao #Ilaiyaraaja #PCSriram #PanchuArunachalam #CrazyMohan #RaajKamalFilmsInternational
#ApoorvaSagodharargal


