#தோழர் திருமுருகன் காந்தி பதிவிலிருந்து
விவசாய சங்கத்தின் தலைவர் தோழர் ஈசன் மற்றும் ஒன்பது விவசாயிகள் பொங்கல் விழா நாளிலிருந்து திமுக அரசால் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். திமுக ஆட்சியில் விவசாயிகள் அமைப்பினர் மீது கடுமையான நெருக்கடியை உருவாக்க காரணமென்ன. கடந்த மாதம் விவசாயிகள் கோரிக்கைகளை முன்னிறுத்தி திருவண்ணாமலையில் திமுக அரசின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்த தோழர் அருள் ஆறுமுகம் உள்ளிட்ட விவ்சாயிகளை கைது செய்து சிறையில் அடைத்தது திமுக அரசு. திமுக ஆட்சியில் இரண்டுமுறை அருள் ஆறுமுகம் சிறைப்பட்டார். ஒருமுறை குண்டர் சட்டம் ஏவப்பட்டது. மாஞ்சோலை தோட்ட விவசாய தொழிலாளர்கள் கோரிக்கையையும் திமுக அரசு கைகழுவியது.
அதிமுக காலத்தில் காவிரி டெல்டா பகுதியில் ஓ.என்.ஜி.சி எதிர்த்து போராடியோர் மீது அதிமுக அரசு போட்ட பொய் வழக்குகளை கடமையாக திமுக அரசு நடத்தி தண்டனை பெற்றுத் தருகிறது. விவசாய சங்கத்தின் தோழர் பி.ஆர்.பாண்டியன் கடுமையான தண்டனையை சில மாதங்களுக்கு முன் பெறவேண்டிய நிலை ஏற்பட்டது. டெல்டாவில் அதிமுக அரசால் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக சொன்ன திமுக, கடந்த 5 ஆண்டுகளாக வழக்குகளை தீவிரமாக நடத்தி வருகிறது. பேரா.ஜெயராமன் உள்ளிட்ட பல திராவிடர், தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள், பெரியாரிய தோழர்கள் இன்றளவும் வழக்குகளுக்காக வாரம் தோறும் நீதிமன்ற படியேறிக் கொண்டிருக்கின்றனர்.
கொங்குப் பகுதியில்
பலவேறு உழவர் கோரிக்கைக்காக போராடி வருபவர் தோழர் ஈசன். உழவர்களுக்கான மின்சார கட்டணம் குறித்தான கடந்த அதிமுக காலத்தின் குழப்பமான நிலையின் பொழுது என் தந்தை திரு.காந்தி அவர்களின் ஆலோசனையில் கோரிக்கைகளை அவர் வடிவமைத்த சமயத்திலும், பின்னர் ஐ.டி.பி.எல் குழாய் பதிப்பிற்கு எதிரான போராட்டம் வழியாகவும் மே17 இயக்கத்திற்கு அறிமுகமான தோழர்.
கடந்த ஆண்டில் 'இந்து அறநிலையத்துறை' இனாம் நில உரிமை எனும் அடிப்படையில் வெகுமக்களின் நிலங்களை கையகப்படுத்தும் அராஜக நிலையை எதிர்த்த போராட்டத்தை குறித்து விளக்கப்படுத்தி, இதுகுறித்து மே17 இயக்கமும் தனது குரலை உழவர்கள், சாமானிய மக்களின் கோரிக்கைகளுக்காக எழுப்பியது.
இந்நிலையில், கொங்குப்பகுதியில் கறிக்கோழி வளர்ப்பவர்களிடத்தில் மிகக்குறைந்த விலைக்கு கோழிகளை வாங்கி பெருத்த லாபம் சேர்க்கும் நிறுவனங்களிடம் கோழிக்கான விலையை உயர்த்தக் கோரிக்கை வைத்து போராட்டம் தொடங்கப்பட்டது.
2013ம் ஆண்டில் நிர்ணயம் செய்யப்பட்ட கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ6.50 எனும் நிலையிலிருந்து கிலோவிற்கு ரூ20 ஆக உயர்த்த கறிக்கோழி வளர்ப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர். இரை, நில வாடகை, மின்சாரம், கூலி உயர்வு உட்பட பலவேறு செலவினம் அதிகரிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு மிக நியாயமான கோரிக்கையை முன்னெடுத்தனர்.
இக்கோரிக்கையை முன்னெடுத்து கறிக்கோழி நிறுவனங்கள் கொள்முதல் விலையை கூட்டித்தரக் கோரி போராட்டத்தை தோழர் ஈசன் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டது.
கறிக்கோழி உற்பத்தியாளர்கள் என்போர் சிறு விவசாயிகள், சிறுகுறு முதலீடு செய்தவர்கள். இவர்களுடைய கோரிக்கையை பெருநிறுவனங்களிடம் பேசி முத்தரப்பு ஒப்பந்தத்தை செய்ய திமுக அரசு முன்வந்திருக்க வேண்டும். 2022ல் ஃபோர்டு நிறுவனத்தில் தொழிலாளர்களுடைய போராட்டத்தின் பொழுது ஃபோர்டு நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுக்கும் சூழல் உருவானதையடுத்து திமுக அமைச்சர்கள் தலையிட்டு தொழிலாளர் கோரிக்கையை நிறைவேற்ற அழுத்தம் கொடுத்து போராட்ட வெற்றியை சாத்தியப்படுத்தினர். இதேபோல கோழி இறைச்சி பெருநிறுவனங்களிடம் பேசி இச்சிக்கலை தீர்த்திருக்க இயலும். ஆனால், போராடிய விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைத்தது திமுக அரசு.
தோழர் ஈசன் உள்ளிட்ட உழவர்களை விடுதலை செய்து, வழக்குகளை திரும்பப்பெற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை திமுக அரசிற்கு உண்டு. நீதிமன்றத்திற்கு கொண்டு வரும் போது, கைதான தோழர்களை கடுமையான பாதுகாப்பை ஆயுதப்பிரிவு காவலர்களைக் கொண்டு தீவிரவாதிகளைப் போல ஏன் நடத்துகிறது திமுக அரசு?
விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாமலும், தோழர் ஈசன் உள்ளிட்டோரை விடுதலை செய்யாமலும் திமுக அரசு அடக்குமுறையை தொடருமெனில், விவசாயிகளுக்கும், போராடுகின்ற சமானிய கறிக்கோழி உற்பத்தியாளர்களுக்கும் ஆதரவாக மே பதினேழு இயக்கம் போராட்டத்தை தொடங்கும். சனநாயக இயக்கங்கள் நியாயமான கோரிக்கைக்கும், தோழர் ஈசன் உள்ளிட்ட 9 பேரின் விடுதலைக்காக குரல் கொடுக்க முன்வர வேண்டும். #💪 மே17 இயக்கம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #தமிழ்த்தேசியம் #📰தமிழக அப்டேட்🗞️
01:22

