ShareChat
click to see wallet page
search
விஜய் என்ற வாலி! இந்தப் பதிவிற்கு முதலில் வைக்கப்பட்ட தலைப்பு "சீமான் தனி ஆவர்த்தனம் செய்வதால் யாருக்கு இலாபம்?" என்பதே. இந்த இரண்டு தலைப்புக்களையும் ஒன்றாக இணைத்துப் பார்ப்பவர்களுக்கு ஒரு முக்காலரைக்கால் வாசி உண்மை புரிய வரலாம். முக்காலரைக்கால் என்றால் 3/4 + 1/8 (அதாவது முக்கால் + அரைக்கால்) என்ற அளவையைக் குறிக்கும். இது பேசப்படும் சூழலைப் பொறுத்து மாறுபடுவதும் உண்டு. இன்றும் சிலர் கவைக்குதவாத பழைய சதவீதக் கணக்குகளில் மூழ்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பெரிய அடி காத்திருக்கிறது. அது, 'கவையாகிக் கொம்பாகி காட்டகத்தே' என்ற மூதுரை பாடலை நினைவூட்டுகிறது. பொருள்: கிளைகளையும், நீண்ட கொம்புகளையும் உடைய, காட்டில் செழித்து வளர்ந்து இருக்கும் மரங்கள் எல்லாம் நல்ல மரங்கள் அல்ல. சரி, விஷயத்துக்கு வருவோம். விஜய் அரசியலில் இறங்குமுன் கணிசமான இளைஞர் பட்டாளம் சீமானைத் தொடர்ந்தது. அரசியலில் இறங்கிய விஜயை சீமான் எதிர்த்தபோது, சீமானுடைய பலத்தில் பாதி தானாகவே வாலியான விஜயிடம் சேர்ந்தது. அதுதான் சீமானை கடுப்பாக்கியது. சீமான் திமுகவை தொங்கவிட்டு தோலுரிந்துக் கொண்டு இருந்தார். இப்போது, விஜய் இடையில் வந்து நோகாமல் நுங்கு சாப்பிடுவதை நினைத்து சீமானுக்கு ஆத்திரம். சொல்லப் போனால், மற்ற எல்லோரையும் விட சீமான் தெரிந்தோ தெரியாமலோ தவெக கட்சிக்கு ஒரு பிரச்சார பீரங்கியாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறார் என்றால் அது மிகையில்லை. தமிழக மக்களைப் பொறுத்த அளவில் சீமான் செய்த உழைப்பு விழலுக்கிறைத்த நீராகப் போகவில்லை. அது, அவரைப் போலவே இருபெரும் திராவிடக் கட்சிகளையும் எதிர்க்கும் தவெகவின் வளர்ச்சிக்கு உரமாகிப் போனது. ஊழலை எதிர்த்து திமுக, அதிமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் பேசுவதை விட பேசாமல் இருப்பதே நலம் என்ற சூழ்நிலை. பாஜக அதிமுகவை பிடித்தது நாயர் புலிவாலை பிடித்ததற்கு ஒப்பானது. இப்போது விடுவது சாத்தியம் இல்லை. அதிமுகவை BJP வழி நடத்துகிறது என்று சொல்வதை தவிர அதை விமர்சனம் செய்ய திமுகவிற்கு வேறு வழியில்லை. சாராயம், லஞ்சஊழல், மணல் கொள்ளை ஆகிய பல்வேறு தளங்களில் திமுகவை எதிர்க்கும் யோக்கியதை எதிர்க்கட்சியான அதிமுகவிற்கும் இல்லை. இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். 'திராவிடம்' என்ற கொள்கையை சித்தாந்த ரீதியாக எதிர்க்கும் வழியும் அதிமுகவிற்கு இல்லை. இந்த பின்புலத்தில் திமுகவை திறம்பட எதிர்த்து கட்சியை வளர்த்துவந்த சீமானுடைய உழைப்பின் பலன் தானாகவே தவெகவிற்கு இன்று மடைமாறிவிட்டது. இந்த மாற்றம் தவிர்க்க முடியாதது. ஏனென்றால் திமுகவை எதிர்ப்பதற்கு விஜய்க்கு இருக்கும் அளவிற்கு சீமானுக்கு இளைஞர்கள், மகளிர் மற்றும் மாணவர்களுடைய பலம் இல்லை என்பது வெள்ளிடை மலை. ஒரே உறையில் (கூட்டணியில்) தவெக மற்றும் நாதக ஆகிய இரண்டு கத்திகள் இருப்பது சரியாக வராது. மேலும், சீமான் தனது கூட்டணியில் இருப்பதை விட தனி ஆவர்த்தனம் செய்வதே விஜய்க்கு பலம். ஏனென்றால், நடுநிலை மக்களை எல்லாம் விஜய் பக்கம் சீமானே தனது "நாவன்மை"யினால் நிச்சயம் திருப்பி விடுவார் என நம்பலாம். நாளை ஒருவேளை திருமாவளவன் கூட விஜய் பக்கம் வந்தாலும் வரலாம். ஆனால், சீமான் வருவதற்கு வாய்ப்பில்லை ராசா! இன்று திமுகவின் தலையாய பிரச்சினை என்ன? எந்தக் கட்சி திமுகவை விமர்சனம் செய்து பேசினாலும், அது தவெகவுக்கு ஓட்டுக்களாக மாறும் சூழ்நிலை உருவாகிவிடுமோ என்ற பயம் ஒருபுறம் என்றால், இளைஞர்கள் மத்தியில் தேர்தல் பிரச்சாரங்கள் விஜய் Vs உதயநிதி என்று ஆகிவிடுமோ என்ற திகில் மறுபுறம். பிகு: வாலியை எதிர்த்து நேருக்கு நேர் நின்று போர்புரிபவனுடை பாதி பலம் வாலியைச் சேரும் என்பதால், இராமன் வாலியை மறைந்து நின்றே வீழ்த்தினான் என்பது இராமகாதை! #அரசியல்
அரசியல் - ShareChat
00:05