ஸ்ரீ (969)திருப்பாவை 10 – நோற்றுச் சுவர்க்கம்
.
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
.
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றாமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ!
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்!
.
இந்த பாட்டில் கண்ணனுக்கு மிகவும் பிடித்தமான கோபிகை ஒருத்தியை துயில் எழுப்ப பாடுகிறார்கள். இவள் முதல் நாள், நோன்பைப்பற்றியும் அதன் ப்ரயோஜனத்தைப் பற்றியும் நிறைய பேசிவிட்டு இப்போது தூங்குகிறாள். கும்பகர்ணனையே ஜெயித்தவள் போல் தூங்குகிறாள். இவர்கள் அவளை எழுப்ப குரல் கொடுத்தும், ஆற்ற அனந்தலுடன் பதில் பேசாமல் உறங்குகிறாள். அதனால் வெளியே ஆண்டாள் இவளை சிறிது கிண்டல் செய்து பாடுகிறாள். உயர்ந்த மோக்ஷ புருஷார்த்தம் இருக்க தாழ்ந்த சுவர்க்கானுபவத்துக்கு ஆசைப்படுவதுபோல், க்ருஷ்ணனை அனுபவிப்பது இருக்க இப்படி தூக்கத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறாயே! ஏ.. ஸ்வர்க்கம் போகின்ற அம்மனே! என்று கேலி செய்கிறாள்.
.
இதற்கு வேறு விதமாகவும் அர்த்தங்கள் சொல்வர். சுவர்க்கானுபவம் என்பதை க்ருஷ்ணானுபவத்தை குறிப்பதாகக் கொள்ளலாம். ஆண்டாள் அந்த கோபிகையை சுவர்க்கம் புகுந்து கொண்டிருக்கிற அம்மனே! என்கிறாள். சுவர்க்கத்தில் புகுந்துவிட்ட என்றோ, புக போகின்ற என்றோ சொல்லாமல் புகுகின்ற – புகுந்து கொண்டிருக்கிற என்று சுகத்தை நித்யமாக அனுபவித்துக் கொண்டிருக்கிற ஸ்வாமிநியாக – அம்மனாக – தலைவியாக இந்த கோபிகை இருக்கிறாள். இப்படி ஆனந்தத்தில் முழ்கி நமக்கு வாசலும் திறக்காமல், உள்ளே இருந்தபடியே பதிலும் சொல்லாமலிருக்கிறாயே! என்கிறாள் ஆண்டாள்.
.
இப்போது ஆண்டாளுக்கு சந்தேகம். “ஏன் வாசல் திறக்கவில்லை? உள்ளே கண்ணன் இருக்கிறானோ? அதனால்தான் திறக்க மறுக்கிறாயா?” என்று கேட்க, அவள் உள்ளிருந்தே “கண்ணன் இங்கு இல்லை…” என்கிறாள். ஆண்டாள் “அதுதான் அவன் சூடும் மணம் மிகுந்த திருத்துழாய் – துளசியின் மணம் காட்டிக்கொடுக்கிறதே?” என்கிறாள். அதற்கு அவள் “கண்ணன் உங்களுக்கு தெரியாமல் எப்படி என் வீட்டிற்குள் வரமுடியும்… ” என்று சொல்ல, “அவன் அந்தர்யாமியான நாராயணன் அல்லவா?.. அவன் எதனுள்ளும் இருக்கிறான். சேஷத்வத்தை நமக்கு மீட்டு கொடுக்கும் தர்ம ஸ்வரூபம் அல்லவா அவன்” என்று ஆண்டாள் சொல்கிறாள்.
.
இதற்கும் அந்த கோபிகையிடமிருந்து பதில் வராமல் போகவே, “கண்ணனைச் சொல்லவும் மறுபடியும் கனவு காண போய்விட்டாளோ” என்று பயந்து, ஆண்டாள் ராமாவதாரத்தின் போது நடந்த சில சம்பவங்களை நினைத்துப் பார்க்கிறாள். இந்த பெண் இப்படி தூங்குகிறதே! கும்பகர்ணனுக்கும் இவளுக்கும் போட்டி வைத்து கும்பகர்ணன் தோற்றுப்போய் தன் தூக்கத்தையும் இவளிடம் சமர்பித்து விட்டானோ? அவன் அந்ய தேவதாந்தரங்களிடம் ‘நித்யத்வம்’ கேட்கப்போய் நா பிறழ்ந்து ‘நித்ரத்வம்’ கேட்டு கூற்றத்தின் வாய் வீழ்ந்தவனாயிற்றே! இவளும், தர்ம ஸ்வரூபமான ஸம்ஸ்த கல்யாண குண பூர்ணனான நாராயணனிடம் ‘நித்ய சேஷத்வம்’ கேட்பதிருக்க, இங்கே நித்ரையில் இருக்கிறாளே! என்று சொல்லி புலம்புகிறாள்.
.
கிள்ளி களைந்தான், வாய் கீண்டான் என்றெல்லாம் பெருமான் அரக்கர்களை அழித்த கதையை சொல்கிற ஆண்டாள் இங்கே மட்டும் கூற்றத்தின் வாய் வீழ்ந்தான் என்று கும்பகர்ணன் தானே போய் வீழ்ந்ததாக ஏன் சொல்கிறாள்? ஏனென்றால் மற்ற அரக்கர்கள் எல்லாம் எதிர் நிற்பது பரமன் என்று அறியவில்லை. ஆனால் கும்பகர்ணன் அறிந்தே போய் வீழ்ந்தான். ராவணனே வந்து சரணடைந்தாலும், அவனுக்கு சரணாகதி அளித்து ரக்ஷிப்பேன் என்று சொன்ன கருணா சாகரத்தை – ‘தண்ணீர் குடிக்க கல்லின ஏரியிலே அமிழ்ந்து, சாவரைப் போலே’ – என்று தெரிந்தே வந்து வீழ்ந்து யமனுலகம் அடைந்தான்.
.
ஆற்ற அனந்தலுடையாய்! கண்ணனைக் கைக்கொண்ட ஒரு கர்வத்தில் இருக்கிறாயோ! நீ சாதாரணப்பட்டவள் இல்லை… அருங்கலம். பகவத் அனுக்ரஹத்துக்கு உக்தமான பாத்திரமானவள் நீ! அந்த ராமாவதாரத்தில் ராமனின் தூதனாக லக்ஷ்மணன் சுக்ரீவனுக்கு அவன் கடமையை நினைவூட்ட வந்தபோது, தாரையானவள் தன் ஆடைகள் கலைந்த நிலையிலேயே வந்து நின்றாள். நீ அப்படி செய்து விடாதே! இங்கே கோபிகைகள் ஏராளமானோர் இருக்கிறோம்.. அதனால் தேற்றமாய்-திருத்தமாய் வந்து கதவைத் திற! என்று சொல்ல அந்த பெண்ணும் இவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டாள்.
.
இதில் உள்ள முக்யமான தத்வ விசாரம் ஒன்றை பெரியோர் அருளியிருக்கிறார்கள். இங்கே இவர்கள் பகவதானுபத்திற்காக த்வரையுடன் துடிக்கிறார்கள். அங்கே அவளோ நிச்சிந்தையாக தூங்குகிறாள். இதில் இவர்கள், ‘பரமனை எப்படி அடைவது? எப்போது அடைவது?’ என்று துடிக்கிறார்கள். அவளோ, ‘மோக்ஷமெனும் வீடுபேற்றை தருவது அவன் கருணையல்லவா? நாம் என்ன செய்துவிட முடியும்?’ என்று கிடக்கிறாள். வெளியே இருப்பவர்களுக்கு அவனே ப்ராப்யம். அவனே பேறு. அவனை அடைவதே வீடுபேறு. உள்ளே இருப்பவளுக்கு அவனே ப்ராபகன். வீடுபேற்றை அளிப்பவன். தன்னையே அளிப்பதானாலும் அவனே அளிக்கவல்லவன். சுருக்கமாக வெளியே இருப்பவர்கள் ‘அவனன்றோ பேறு’ என்கிறார்கள் – அவனை அடைய துடிக்கிறார்கள். உள்ளே இருப்பவள் ‘அவனாலன்றோ பேறு’ என்று கொண்டிருக்கிறாள் – அதனால் அவன் தரும்போது தரட்டும் என்று கிடக்கிறாள். இரண்டுமே சரிதான். சிலரை துடிக்க வைப்பதும், சிலரை நிச்சிந்தையாக நிஷ்காம்யமாக இருக்க வைப்பதும் அவனது லீலை அல்லவா!
.
ஸ்ரீஆண்டாள் திருவடிகளே ஸரணம்.
.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம். #ஆண்டாள்


