கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை நான்காம் நாள் வாசிப்பு தொடர்ச்சி- நாள் 24.12.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
=========
பணமாகிக் கீழே பறந்து குதித்திடவே
இணமான நீசன் எட்டி யவன்பிடித்துக்
கண்ணில்மிக வொற்றிக் காரிகையாள் கைகொடுப்பான்
பெண்ணே நமக்குப் பெலங்கள்வந்து வாய்த்துதடி
என்று பிரியமுற்று ஈசுரரைத் தான்வணங்கி
மன்று தனில்போக வரந்தாரு மென்றுரைத்தான்
அப்போது தன்னில் ஆண்டியவ ரங்குசென்று
இப்போது இங்கேவைத்து இவன்தான் மொழிந்ததெல்லாம்
தப்பாம லாகமத்தில் தானெழுதி வையுமென்றார்
முப்போது வுள்ள முறைபோலே மாயவரும்
ஆகமத்திற் பதித்து ஆண்டார் துரிதமுடன்
நாகரீக நாதன் நடந்தார்ஸ்ரீ ரங்கமதில்
நீசனையு மூரேபோ என்று நிமலனுந்தான்
ஈயுகிற போது ஏதுரைப்பாள் சத்தியுமே
.
விளக்கம்
==========
சக்கராயுதம் பணமாக மாறி பறந்து கீழே விழுந்ததுமே, அதை எட்டிப் பிடித்த கலிநீசன் அந்தப் பணத்தைத் தன்னுடைய கண்களில் ஒற்றிக்கொண்டே அவனுடனிருக்கும் கலிச்சியாகிய தன் மனைவியைப் பார்த்து, பெண்ணே ! நாம் இந்த உலகத்தில் வாழ்வதற்கு வகையான அத்தனை பலங்களும் இந்த பணத்திலே அடங்கியிருக்கிறது என்று சொல்லிக்கொண்டே சிவபெருமானை நினைத்து வணங்கி மண்ணுலகில் செல்வதற்கான சக்தியைத் தாரும் என்று வேண்டினான்.
.
அப்போது மகாவிஷ்ணு தேவலோம் சென்று அங்கிருந்த தேவர்களையெல்லாம் அழைத்து, தேவர்களே ! இப்போது என்னிடம் இந்தக் கலிநீசன் செய்து தந்த சத்தியத்தையும் இந்த சத்தியத்தில் அவன் சொன்ன வாக்குறுதிகளையும் எதுவுமே விடுபட்டுப் போகாதபடி ஆகமத்தில் எழுதி வையுங்கள் என்று ஆணையிட்டார். மகாவிஷ்ணுவின் கட்டளைப்படி தேவர்கள் அங்கே அப்போது நடைபெற்ற நிகழ்வுகளோடு சேர்த்து கலிநீசனின் வாக்குறுதிகளையும் சத்தியத்தையும் ஆகமத்திலே எழுதிப் பதிவு செய்தார்கள்.
.
உடனே மகாவிஷ்ணு ஸ்ரீரங்க மாபதிக்கு ஏகினார். மகாவிஷ்ணு ஸ்ரீரங்கமாபதிக்குப் புறப்பட்டதையுணர்ந்த சிவபெருமான், மண்ணுலகிற்குச் செல்ல மாவிருப்பத்தோடு தம்மை நினைத்து விடைவேண்டி நிற்கும் கலிநீசனுக்கு மண்ணுலகத்திற்குச் செல்வதற்கான மனதைக் கொடுத்தார். எனவே கலிநீசன் தன் மனைவியோடும், கையில் பணத்தோடும் மண்ணுலகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறான். இந்நேரம் அன்னை உமையவள் கலிநீசனைப் பற்றி சிவபெருமானிடம் விசாரிக்கிறார்.
.
.
அகிலம்
=========
கலியுகம்
==========
வன்னச் சிவனாரே மாபாவி கேட்டவரம்
என்னென்ன வாயமதாய் இருக்குதுகா ணுத்தமரே
வலியான மாதே மாநீசன் கேட்டதுதான்
கலியுகம் போலிருக்கு கண்ணமுதே யென்றுரைத்தார்
சிவம்வாய் திறந்து செப்பக் கலியுகமாய்
இதமான தேவர் எழுதினா ரகமத்தில்
.
விருத்தம்
==========
கலியுக மெனச்சிவம் கருதிடத் தேவர்கள்
பொலிவுடன் சேர்த்தனர் புராண மீதினில்
சலிவுடன் நீசனும் தரணியில் போந்திட
வலியுள்ள மாயன் ஸ்ரீரங்க மேவினார்
.
விளக்கம்
==========
சர்வேஸ்வரா ! இப்போது தங்களிடம் எண்ணவொண்ணா வரங்களைக் கேட்டு வாங்கிவிட்டு வையகத்திற்குச் செல்லும் இந்த மாநீசன் யார்? இவன் இத்தனை வரங்களைக் கேட்பதற்கும், அதை நீங்கள் கொடுப்பதற்கும் என்ன காரணம்? இவன் வாங்கிச் செல்லும் இத்தனை வரங்களையும் வைத்து இவன் என்ன செய்யப் போகிறான்? இதைப்பற்றி தாங்கள் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அந்த உபாயங்களைப் பற்றி எனக்கு சற்று எடுத்துரையுங்கள் என்று சிவபெருமானிடம் அம்மை உமையவள் கேட்கிறாள்.
.
அதை கேட்ட சிவபெருமான் உமையவளைப் பார்த்துச் சொல்லுகிறார். வல்லமைகளுக்கெல்லாம் வல்லமையாகிய வனிதையே ! இந்த மாநீசன் பெற்றுச் செல்லும் வரங்களையெல்லாம் உற்றுப் பார்க்கும்போது, நிகழ்ந்து நிறைவேறிய மகாயுகங்களில் நடைபெற்ற கலியுகம்போல் இருகிறது கண்ணமுதே என்று சொன்னார்.
.
சிவபெருமான் தன்னுடைய திருவாய் மலர்ந்து கலியுகம் என்று சொன்ன உடனே தேவர்களெல்லாம் சேர்ந்து இது கலியுகம் என்று ஆகமத்தில் எழுதிப் பதிவு செய்தார்கள்.
.
கலியுகம் என்று சிவபெருமான் நினைத்துரைத்ததுமே, அதை புராதன ஆகமத்தில் தேவர்கள் பதிவு செய்தார்கள். அக்கணத்தில்தான், தான்பெற்ற வரங்களில் பலவற்றை இழந்து விட்டோமே என்ற விரக்தியோடு கலிநீசன் மண்ணகத்தில் கால் ஊன்றினான். அதே வேளையில் மகாவிஷ்ணுவும் ஸ்ரீரங்கமாபதில் சென்றுறைந்தார்.
.
.
தொடரும்….. அய்யா உண்டு. #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008}


