கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை நான்காம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 30.12.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
=========
தண்ணீராய் நின்ற தார்குழலா ளேதுரைப்பாள்
அய்யாவே நானும் அதிகயி லாசமதில்
மெய்யாக ஈசுரர்க்கு வேலையது செய்திருந்து
வருகின்ற வேளையிலே மனங்குழறி நானடியாள்
அரையில் கலைபூணா(து) ஆவியிலே சென்றிறங்கிக்
குளித்தே னதையும் கொன்றையணி வோனறிந்து
அழித்தே யெனையும் ஆவிபோலே படைத்தார்
படைக்கும் பொழுதில் பரமனோ டிச்சாபம்
கடருவதெப் போதெனவே கறைக்கண்ட ரோடுரைத்தேன்
ஆவியாய் நீகிடந்தால் அச்சுதனா ரங்குவந்து
தாவிக் குளிக்க சாபமது மாறுமென்றார்
.
விளக்கம்
==========
குளத்திலுள்ள தண்ணீர் தேவதை போன்று ஒரு பெண்ணாக உருவெடுத்து மகாவிஷ்ணுவின் திருவடியைத் தொட்டு வணங்கினாள்.
இப்போது பெண்ணாக மாறியிருப்பததையும் பற்றிய விவரத்தை விளக்கமாகக் கூறு என்றார் மகாவிஷ்ணு.
.
அந்தச் சலமடந்தை கூறுகிறாள். அய்யா நான், கைலாசத்தில் சிவபெருமானுக்கு நல்ல முறையில் பணிவிடைகள் செய்துகொண்டிருந்தேன். பணிவிடைப் பெண்ணாக இருந்தும் ஒருநாள் இயல்பான பண்பை மறந்து, ஆடை அணியாமல் நிர்வாணமாகக் குளத்தில் இறங்கி குளித்துவிட்டேன்.
.
அந்த அவலமான என் செயலை அறிந்த சிவபெருமான் பணிவிடைப் பெண்ணான என்னை அழித்து, குளமாகப் படைத்து விட்டார். அப்போது, நான் சுவாமி எனக்கு ஏற்பட்ட இந்த சாபம் எப்போது அகலுமென்று சிவபெருமானிடம் மான்றாடிக் கேட்டேன்.
.
நீ குளமாகக் கிடக்கும் போது, மாயவனாகிய மகாவிஷ்ணு அங்கே வருவார். வந்து அந்தக் குளத்தில் இறங்கி அவர் குளிக்கும்போது உன்னுடைய இந்தச் சாபம் அகலும் என்றார். அதன்படியே நடைபெற்றுவிட்டது சுவாமி என்று சொல்லி முடித்தாள்.
.
.
அகிலம்
=========
என்றுரைக்கப் பெண்ணாள் எம்பெருமா ளேதுரைப்பார்
அன்றந்தப் பெண்ணதையும் ஆகமப் போகனையும்
நானாண் டிருந்த நல்லதுவா பரத்தில்
தானாக ஆண்டு தானிருக்கு மப்பொழுதில்
சூரிய வொளிகாந்தம் துலங்கும்வை டூரியத்தில்
வீரிய மான வெற்றிவிரு துக்குடையும்
தங்கப்பொன் னாயுதமும் தளிருநிறச் சக்கரமும்
பங்கமில்லா முத்துப் பவள நிறக்குடையும்
கட்டான வைரக் கற்கோட்டை வாவிகளும்
மட்டான செம்பவள வைரக்கால் மண்டபமும்
உண்டுகா ணத்தனையும் உடனேபோய் நீங்களுந்தான்
என்றுநான் வருவேன் இதுவரைக்குங் காத்திருங்கோ
நான்வந்த போது நல்லகதி யுங்களுக்குத்
தான்தருவேன் போகுமெனத் தங்களிரு பேர்களுக்கும்
விடைகொடுத்து ஸ்ரீரங்கம் மேவி யவரிருக்கத்
திடமுடனே போகமுனி தேவி சலமடவும்
வந்தந்த மாயவரின் வாழ்வெல்லாங் காத்திருந்தார்
.
விளக்கம்
==========
இதைக் கேட்ட மகாவிஷ்ணு, அந்தச் சலமாதுவையும், மாமுனிவரையும் பார்த்து, நான் துவாபர யுகத்தில் கிருஷ்ண அவதாரம் புரிந்து கொண்டிருந்தபோது, அங்கே சூரியவொளிக் காந்தம் போல் பிரகாசிக்கின்ற வைடூரியத்தால் செய்யப்பட்ட பிரபையுடன் கூடிய வெற்றியின் அடையாளமான குடையும், பொன்னால் புனையப்பெற்ற ஆயுதங்களும், பசுமையாக மிளிரும் சக்கரம், நிறைவான பவளம் மற்றும் முத்துக்களாலான பளபளக்கும் பற்பல குடைகளும், வைரக்கற்களால் வரைமுறை செய்யப்பட்ட வலிமையான கோட்டைகளும், அதனுள்ளே அழகிய பல குளங்களும், செம்பவளத்தினாலும், வைரக்கற்களாலும் அமையப்பெற்ற சின்னச் சின்ன மண்டபங்களும், எனக்கு அங்கே இருந்தன.
.
ஆகவே நீங்கள் இருவரும் அங்குச் சென்று என்றைக்கு நான் அங்கு வருகிறேனோ அதுநாள் வரைக்கும் அவற்றையெல்லாம் பாதுகாத்துக் கொண்டிருங்கள். நான் அங்கே வந்ததும் உங்களுக்கு நற்கதியருள்வேன் என்று சொல்லி சல மாதுவையும், ஆகமபோக மாமுனிவரையும் துவரயம்பதிக்கு அனுப்பிவைத்தார். மகாவிஷ்ணுவின் கட்டளைப்படி அவர்கள் இருவரும் துவரயம் பதியில் சென்று அப்பொருட்களையெல்லாம் பாதுகாத்துக் கொண்டிருந்தார்கள்.
.
.
அகிலம்
========
கலியினால் ஏற்பட்ட மாற்றங்கள்.
=====================================
சென்றந்த மாயவனார் ஸ்ரீரங்கமே யிருந்தார்
மாயன் ஸ்ரீரங்கம் வாழ்ந்திருக்கு மப்போது
மாயக்கலி செய்த மாயங்கே ளன்போரே
சாத்திரத்தை யாறாய்த் தான்வகுத்து வேதமதை
மாத்திரமே நாலாய் வகுத்தனன்கா ணம்மானை
நட்சேத் திரத்தை நல்லிருபத் தேழாகப்
பொய்ச்சேத் திரமாய்ப் பிரித்தான்கா ணம்மானை
கோளொன் பதுக்குக் கூடுபன்னி ரண்டாக
நாளேழு வாரம் நாட்டிவைத்தா னம்மானை
பக்கமது பத்தஞ்சு ஆகப் பவம்பிரித்து
தக்கமது லோகம் தானாண் டிருக்கையிலே
மாந்திரத்தால் செய்த வறுமைகே ளன்போரே
.
விளக்கம்
==========
ஆகம போக மாமுனிவரையும், சல மாதுவையும் துவரையம் பதிக்கு அனுப்பிவைத்து விட்டு, மகாவிஷ்ணு ஸ்ரீரங்கமாபதியில் வீற்றிருந்தார். அப்போது, மாயக்கலி இந்த மண்ணுலக மாந்தர்களை எல்லாம் மருளச்செய்தது. அதுநாள் வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த வாழ்வியல் நெறிகளையெல்லாம் கலிநீசர்கள் மாற்றத் துணிந்தார்கள்.
.
வகுத்து வைக்கப்பட்டிருந்த சாஸ்திர சம்பிரதாயங்களெல்லாம் அவரவர் விரும்பிய வண்ணம் அலைக்கழிக்கப்பட்டன. வேத நெறிகள் விபரீதமாகக் கையாளப்பட்டன. நட்சத்திரங்கள் கிரகங்கள், நாட்கள் அனைத்திற்கும் புதிய புதிய பெயர்களையும் குணாதிசயக் கூறுகளையும் வகுத்து வைத்தனர். அதுமட்டுமின்றி மாந்திரீகத்தால் பற்பல கேடுகளையும் ஏற்படுத்தினர்.
.
.
தொடரும்….. அய்யா உண்டு. #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008}


