#🗞அரசியல் தகவல்கள் #📽சினிமா தகவல்கள் #🎬 சினிமா #🧐நாட்டு நடப்பு
பாரதிராஜாவுக்கு பாடம் நடத்திய பாக்யராஜ்
இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்து, பிறகு 'புதிய வார்ப்புகள்' படத்தில் ஹீரோவாக அறிமுகமாக இருந்த இசை அமைப்பாளர் கங்கை அமரன் நீக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக பாரதிராஜா மூலம் அறிமுகம் செய்யப்பட்டவர் கே.பாக்யராஜ் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
இப்போது கூட பாரதிராஜாவிடம் இருந்து போன் வந்தால், உட்கார்ந்த இடத்தில் இருந்து அப்படியே எழுந்து நின்று மரியாதை கொடுத்து பேசுபவர் பாக்யராஜ் என்பது நிறைய பேருக்கு தெரிந்திருக்கு வாய்ப்பில்லை. இதை நான் பலமுறை நேரில் பார்த்து வியந்திருக்கிறேன்.
அப்படிப்பட்ட பாக்யராஜ், தன் குருநாதருக்கே பாடம் நடத்தியிருக்கிறார் என்பது சுவாரஸ்யமான விஷயம்தானே? இதை பாரதிராஜாவே சொல்கிறார், படித்துப் பாருங்கள்.
''நான் போவேன்... சினிமா படம் எடுப்பேன். அதுக்கு பிறகு ஒண்ணும் தெரியாது. ஏன்னா, சினிமா பிசினஸ் பற்றி எதுவும் தெரியாது. தோட்டத்துல இருந்து யாராவது வந்து பணம் கொடுத்துட்டு போவாங்க. எதுக்கு கொடுக்கறீங்கன்னு கேட்பேன். ஏன்னா, நமக்கு இந்த கணக்கு வழக்கு எல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது. விஷயத்துக்கு வர்றேன்.
'16 வயதினிலே' எனக்கு முதல் படம். சம்பளம் இல்லாம ஒர்க் பண்ணேன். அதுக்கு பிறகு 'கிழக்கே போகும் ரயில்'. ரெண்டு படமும் பெரிய ஹிட். மூணாவதா 'நிறம் மாறாத பூக்கள்' பண்ண ஒப்பந்தமாகறப்ப, என்ன சம்பளம் எதிர்பார்க்கறீங்கன்னு கேட்டாங்க. நான் ரொம்ப தயங்கி தயங்கி, 'ஒரு பத்து... இல்ல இல்ல... ஒரு பதினஞ்சாயிரம் ரூபா கொடுத்தா நல்லா இருக்கும்'னு சொன்னேன். எங்கே நான் அதிகமா சம்பளம் கேட்டு, கிடைச்ச வாய்ப்பும் கைநழுவி போயிடுமோன்னு பயம். அதனால, பதினஞ்சாயிரம் போதும்னு சொன்னேன். உடனே அந்த தொகையை கொடுக்க புரொடியூசர் சம்மதிச்சார்.
அதுக்கு பிறகு நான் தங்கியிருந்த லாட்ஜுக்கு வந்தேன். என் அசிஸ்டெண்டுகளை எல்லாம் கூப்பிட்டு, வாங்குன சம்பளத்தை பற்றி பெருமையா சொன்னேன். அப்ப பாக்யராஜ் தலையில அடிச்சிகிட்டான். 'என்ன சார் நீங்க... சுத்த விவரம் இல்லாத ஆளா இருக்கீங்க. ரெண்டு படம் ஹிட்டு கொடுத்திருக்கீங்க. உங்க ரேஞ்ச் என்னன்னு உங்களுக்கே தெரியல. கொஞ்சம் இருங்க, நானே புரொடியூசர் கிட்ட போய் பேசிட்டு வர்றேன்'னு, என் பதிலுக்கு கூட காத்திருக்காம, விடுவிடுன்னு கிளம்பிட்டான். எனக்கு பயம்னா அப்படியரு பயம். எங்கே வாய்ப்பு பறிபோயிடுமோன்னு கதிகலங்கி உட்கார்ந்துட்டேன்.
கொஞ்சநேரம் கழிச்சி பாக்யராஜ் வந்தான். என்னடான்னு கேட்டேன். முப்பதாயிரம் ரூபா சம்பளம் வாங்கிட்டு வந்ததா சொன்னான். எப்படிடா இது சாத்தியமாச்சின்னு கேட்டேன். 'சார்... உங்களுக்கு அங்க ஒரு படம் கமிட்டாயிடுச்சி-. இங்க ஒரு படம் கமிட்டாயிடுச்சின்னு பொய் சொல்லி பில்டப் கொடுத்தேன். 'நிறம் மாறாத பூக்கள்' படத்தை இப்ப பண்றது சாத்தியமில்லைங்கற மாதிரி பேசினேன். உடனே புரொடியூசர், முதல்ல தன் படத்தை முடிச்சி கொடுத்துட சொல்லி, நான் கேட்ட முப்பதாயிரம் ரூபா சம்பளத்துக்கு ஒத்துகிட்டார்'னு சொன்னான். அவன் மகா புத்திசாலி. இப்படித்தான் என் சம்பளம் கொஞ்சம் கொஞ்சமா உயர்ந்தது'' என்று சொன்ன பாரதிராஜா,
தன் சிஷ்யன் பாக்யராஜ் இயக்கத்தில் 'தாவணி கனவுகள்' படத்தில், சினிமா பட டைரக்டர் வேடத்திலேயே நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
#Bharathiraja #KBhagyaraj


