#🗞அரசியல் தகவல்கள் #📽சினிமா தகவல்கள் #🎬 சினிமா #🧐நாட்டு நடப்பு
சவுந்தர்யா அழுகை!
விஜயகாந்த் அறிவுரை!
நான் எவ்வளவு பெரிய 'சேடிஸ்ட்' ஆக இருந்தால், மலரைப் போன்ற மெல்லிய மனம் கொண்ட சவுந்தர்யாவை அழ வைத்திருப்பேன். இப்போது அந்த சம்பவத்தை நினைத்துப் பார்க்கும்போது, என்மீது பயங்கர வெறுப்பு வருகிறது.
சவுந்தர்யா நடித்த பல படங்களைப் பார்த்து ரசித்திருக்கிறேன். அவரை 'காதலா காதலா', 'படையப்பா' போன்ற படங்களின் படப்பிடிப்பில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். பொள்ளாச்சியில் நடந்த 'சொக்கத்தங்கம்' படப்பிடிப்பில் நடந்த சம்பவம் இது. கே.பாக்யராஜ் இயக்கத்தில் விஜயகாந்த், சவுந்தர்யா, பிரகாஷ்ராஜ், உமா நடித்திருந்தனர்.
அன்று சேத்துமடை பங்களாவில் படப்பிடிப்பு. முதலில் விஜயகாந்திடம் பேசினேன். பிறகு உமாவிடம். அதற்குப் பிறகு சவுந்தர்யாவிடம். சுவாரஸ்யமாக பேச்சு நடந்து கொண்டிருந்தது. திடீரென்று சவுந்தர்யாவிடம், 'உங்களுக்கும், தெலுங்கு நடிகர் ஒருத்தருக்கும் காதலாமே? நீங்க அவரோட கட்டுப்பாட்டுல இருக்கிறதா சொல்றாங்களே...' என்று நான் சாதாரணமாக கேட்டபோது, உணர்ச்சிவசப்பட்ட சவுந்தர்யா கண்கலங்கி விட்டார்.
'வதந்திகளுக்கு நான் என்ன பதில் சொல்றது? எனக்கு ஏன் மீடியாக்காரங்க மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டீங்க...' என்று கேட்டார். நான் அமைதியாக இருந்தேன்.
பிறகு உமாவிடம் சவுந்தர்யா, 'ஏன் இவரு இப்படி கேள்வி கேட்கறாரு?' என்றார். சில பத்திரிகைகளில் வெளியான கிசுகிசுக்களைப் படித்துவிட்டு, அது உண்மையாக இருக்குமா என்று விசாரிப்பதற்காகத்தான் அப்படி கேட்டேன் என்று சவுந்தர்யாவிடம் சொன்னேன். பிறகு அவர் சமாதானமானார்.
என்றாலும், மதிய உணவு இடைவேளையில் என்னைப் பற்றி விஜயகாந்திடம் சவுந்தர்யா ஏதோ சொல்ல, என்னிடம் தனியாகப் பேசிய விஜயகாந்த், 'அது ரொம்ப நல்ல பொண்ணு தேவராஜ். ஏதாவது கேட்டு மனசை நோகடிக்காதே' என்றார். உடனே நான் சவுந்தர்யாவிடம், 'உங்க மனசு புண்படுற மாதிரி கேட்டிருந்தா, என்னை மன்னிச்சிடுங்க மேடம்' என்றேன். இதை சற்றும் எதிர்பார்க்காத சவுந்தர்யா, என் கையைப் பிடித்து குலுக்கி, 'வெரிகுட்' என்றார்.
அதற்குப் பிறகு சவுந்தர்யாவை 'மதுமதி' படப்பிடிப்பில் சந்தித்தேன். பாண்டிச்சேரிக்கு அருகிலுள்ள ரெட்ஹில்ஸ் பகுதியில் இரவு நேரம் நடந்த படப்பிடிப்பில், கறுப்பு நிற புடவையில் இருந்தார். அப்போது அவருக்கு திருமணமாகி இருந்தது. சினிமாவுக்கு சம்பந்தமில்லாத ஒருவரை திருமணம் செய்திருந்த அவர், 'இப்ப தெரிஞ்சுகிட்டீங்களா தேவராஜ்... அன்னிக்கு என்கிட்ட நீங்க கேட்ட கேள்வி எவ்வளவு பெரிய வதந்தின்னு?' என்றார். தலையாட்டினேன். பிறகு நீண்ட நேரம் மனம்விட்டு பேசிக் கொண்டிருந்தார். அப்போது எடுத்த போட்டோ இது.
இது நடந்து சில மாதங்களானது. அன்று ஏப்ரல் 17ம் தேதி. விக்ரம் பிறந்தநாள். அவரது செல்போனில் வாழ்த்து சொல்லிவிட்டு அலுவலகம் சென்றேன். அப்போது ஒரு தகவல் வந்தது. பெங்களூர் விமான விபத்தில் சவுந்தர்யா அகால மரணம் அடைந்த ஒரு சோகச் செய்தியை அறிந்து, சவுந்தர்யாவின் போட்டோவை எடுத்து பத்திரிகை அலுவலகத்தில் கொடுத்தேன்.
இதுதான் கொடுமையிலும் கொடுமை. நமக்கு அறிமுகம் இல்லாதவர்களின் மரணம் ஏற்படுத்தும் வலியை விட, நன்கு அறிமுகமானவர்களின் பிரிவு தரும் வலி, மனதில் என்றும் மறையாத வடுவாகி விடுகிறது. திறமையான நடிகையை பலி வாங்கிய காலனே, யார் உன்னை தண்டிப்பது?
#Soundarya #RIPVijayakanth
#RIPCaptainVijayakanth
#Vijayakanth #RIPCaptain


