ShareChat
click to see wallet page
search
திருப்பாவை 12 கனைத்தல் என்றால் குமுறுதல் என்ற பொருளில், இடைவெளி இன்றி தானம் செய்தலையே தொழிலாக உடைய தர்மவான்கள் ஒரு கணப் பொழுது தானம் செய்யாமல் இருந்தால், மனம் தளும்புமாறு போல, எம்பெருமான் அடியார் காரியங்களைச் செவ்வனே செய்யப் பெறாமல் போனால் எப்படி திருவுள்ளம் தளும்புமாறு போல, ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது (பெரிய திருமொழி 5.8.1) இரங்குவது போல, பசுக்கள் கிரமமான காலத்தில் பால் கறக்கப்படா விட்டால் முலைக் கடுப்புற்றுக் கனைத்தல் இயல்பு என்று வருகிறது. நின்று பால் சோர என்று சொல்லும் போது, முகில் மழை பொழிய நினைத்தால் கடலில் புகுந்து நீரை முகந்து கொண்டு வந்து பின்பு பொழிய வேணும்; இந்த கறவைகளுக்கு அப்படிபட்ட வருத்தம் இல்லை, நினைவே ஊற்றாகப் பால் சுரக்கும் ஆதலால், அந்த நினைவு மாறாமையால் திருமலையில் திருஅருவிகள் போன்று பால் மாறாதே பெருகும் என்கிறார். அர்ஜுனன் கேளாதே இருந்த போதும், கண்ணன் கீதையை கூறத் தொடங்கினால் போல உள்ளது கரவைகள் பால் சுரப்பது என்கிறார். “ஆழிமழைக்கண்ணா!” என்ற பாட்டில் பர்ஜந்ய தேவதைக்கு அருளிப் பாடிட்டு மழை பெய்ய நியமித்தார்கள் ஆதலால், அக்கட்டளையின்படி அவன் பெய்யும் மழை தலையிலே விழுமாறு இவளது வீட்டு வாசலை பற்றி சொல்வது, “பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி” என்பது. கீழே கரவைகள் பால் சுரந்து ஓடி கொண்டு நனைத்து இல்லம் சேறாக்கும் என்கிறார். தென் இலங்கை கோமானை, என்பதை பற்றி சொல்லும் போது, திருவடி (ஹனுமான்) மதித்த ஐஸ்வர்யம் என்றும், ஒரு அம்பாலே இராவணனின் தலை அறுக்காமல், படையை கொன்று, புத்திர, பௌத்திரர்களை கொன்று, ஆயுதங்களை முறித்து, அரக்கர் கோன் என்ற பெருமைகளை அழித்ததை சொல்கிறார். இராமன் இராவணனோடு போர் புரியும் போது அவன் ஆயுதங்களை இழந்து நிற்கும் போது, இரக்கமுற்று, “போரில் மிகவும் வருத்தமுற்றாய்; ஆதலின் இன்று இருப்பிடம் சென்று சிறிது தேறி நாளை போர்க்கு வா,” என்று அனுமதி தந்து, தானே போகவிட்டு அருளினது முதலிய பல குணங்களினால் “மனத்துக்கு இனியானை” என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. கண்ணன் பெண்களைப் படுத்தும் பாடுகளை நினைத்தால், அவன் மனத்துக்கு இனியன் அல்லன் போலும். பெண்களை விட்டு ஓடி, அவர்களை துடிக்க விட்டு, பின்பு இரக்கம் இன்றி, அவர்களின் துடிப்பு கண்டு, கண்ணீர் விடாமல் இருக்கும் கண்ணன் என்கிறார். ஆனால் எதிரிகள் படும் துன்பத்திற்கு கூட இரக்கப் படும் இராமன் என்கிறார். இனித்தாய் எழுந்திராய் என்பதற்கு எங்களுடைய ஆர்த்தியைக் கண்டு எழுந்திராவிட்டாலும், மனத்துக்கு இனியானுடைய பாட்டுக்களைக் கேட்டாகிலும் உணர்ந்து வா என்கிறார்கள். ஈதென்ன பேருறக்கம் என்பதற்கு உறக்கம் இருவகைப்படும் என்றும், அவை லௌகிகமும் வைதிகமும் என்று சொல்லி, இவை இரண்டும் இல்லாமல் இருக்கும் இன்னொரு நித்திரையை சொல்கிறார். தமோ குணத்தின் வெளிப்பாட்டினால் உறங்குவது ஸம்ஸாரிகளின் உறக்கம், லௌகிக நித்திரை. அனைத்து உலகங்களின் காவலைச் சிந்தனை செய்து கொண்டு, உறங்குவான் போல் யோகு செய்யும், எம்பெருமானுடைய நித்திரை வைதிக நித்திரை ஆகும். இவ்விரு வகையிலும் சேராதே இருப்பதொரு நித்திரையாய் இருப்பது உன் உறக்கம் என்கிறார்கள். “அனைத்து இல்லத்தாரும் அறிந்து” என்பதற்கு இரண்டு வகையாக பொருள் உரைக்கிறார். நீ மற்றவர்களுடைய வளர்ச்சியையே பலனாக உடையவன் ஆதலால், ‘இந்த ஆய்ப்பாடியிலுள்ள பெண்களில் ஒருத்தி தப்பாமல் அனைத்து இல்லத்தாரும் உணர்ந்து வரவேண்டும்’ என நினைத்துக் கிடக்கிறார். அப்படியே அனைத்து இல்லத்தாரும் அறிந்து வந்தாயிற்று; இனி நீ உணர்ந்துவா என்கிறார்கள், என்பது ஒரு கருத்து; இந்த ஆய்ப்பாடியிலுள்ள பெண்கள் எல்லாரும் திரண்டு வந்து உன் மாளிகை வாசலில் நின்று கூப்பிட, நீ சிறிது பொழுது உணராமல் கிடக்க, இதனால் உனக்கு வரும் மதிப்பை அனைவரும் அறிய வேண்டும் என்று கிடந்ததால், அதுவும் அறிந்தாயிற்று; இனி உணர்ந்துவா, என்கிறார்கள் என்பது மற்றோர் கருத்து. “நனைத் தில்லஞ் சேறாக்கும்” என்ற வார்த்தைகள். ராவண வதம் முடிந்த பிறகு, திருவயோத்திக்கு மீண்டும் எழுந்து அருள, பெருமாளை (இராமன்) நோக்கி, பரத்வாஜ மஹர்ஷி, பரதாழ்வான் சேறு பூசப் பெற்றிருப்பதாகச் சொல்லப்பட்டதன் கருத்து யாது எனில், இரவும் பகலும் எப்போதும் அழுது அழுது நினைத்தில்லம் சேறாக்கினன் என்றதாகும். நாட்டில் இருந்த நாட்களோடு, காட்டில் இருந்த நாட்களோடும் ஒரு வித்தியாசமும் இல்லாமல் எம்பெருமான் இராமனை பின்தொடர்ந்து, நோக்கிக் கொண்டு திரியும், இளையபெருமாளை (லக்ஷ்மணன்) போன்று, கண்ணனை அன்றி மற்றொருவரையும் அறியாமல் என்று மொத்தமாக அவனையே பின் தொடர்ந்து, அவன் பக்கம் மிகவும் பரிவு பூண்டிருப்பான் ஓருவனுடைய, தங்கையாய்ச் சீர்மை பெற்றிருப்பாள், ஓரு ஆய்ப்பெண்ணை உணர்த்தும் பாசுரம், இது. நெடுநாட்களாக நின் வாசற் கடையை நாங்கள் பற்றிக் கொண்டு, முன் பொலாவி இராவணன் தன் முதுமதிள் இலங்கை (திருகுருந்தாண்டகம்) செற்று, சீரிய சேவகத்தை எடுத்துப் பாடினாலும், நீ வாய் திறவாதே கிடந்து உறங்குகின்றாய், இப்படி உறங்கக்கூடுமோ, உன்னைக் காணாதே நாங்கள் அலமந்து தளர்ந்து இருக்கிறதை நீ அறிந்து வைத்தும் இப்படி உறங்குவது உரியதன்று, இதை உணர்ந்து வருவாய் என்கிறார்கள். இவள் தமையனுடைய செல்வத்தின் சிறப்பு முதலில் கூறப்படுகின்றது. அவன் கண்ணனுடன் கூடித் திரிபவன் ஆதலால், கறவைகளைக் காலந் தவறாது கறப்பதில்லை ; அக்கறவைகள் வகுத்த காலத்தில் கறக்கப் படாததால், வாசலிலே நின்று குமுறி, தூரத்தில் கட்டப்பட்டு நின்றுள்ள கன்றின் மீது தனது பாசத்தை செலுத்தி அதனால், கன்று பால் குடிப்பதாக நினைத்துக்கொண்டு, முலை வழியே பால் சொரிந்து கொண்டே இருக்கும். அந்தப் பால் பெருக்கால் வீடு முழுவதும் வெள்ளம் ஆனாலும் அதனைச் செல்வம் என்று சொல்லி, இப்படி செல்வம் உடையானுக்குத் தங்கையாகப் பிறந்தவளே! என்று அவளை அழைக்கின்றனர். இப்பாசுரத்தில் பொய்கையாழ்வார் எழுப்பப்படுகிறார். ஆழ்வார்களில் முதலாழ்வாராகக் கருதப்படும் பொய்கையாழ்வார் எழுப்பப்படுகிறார். ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்திற்கு முதல் பாசுரம் பொய்கையாழ்வார் அருளிச் செய்த பாசுரமே ஆகும். ‘கனைத்து’ என்ற சொல்லின் மூலம் இங்கு பொய்கையாழ்வார் காட்டப்படுகிறார். முதலில் பேசத்தொடங்கும் முன்னர் தொண்டையைக் கனைப்பது வழக்கமன்றோ? பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்தில் திருவெஃகா எனும் திவ்யதேசத்தில் உள்ள பொய்கையில் தாமரை மலரில் அவதரித்தவர். “வாசமலர்க்கருவதனில் வந்த மைந்தா வாழியே” என்பது இவரின் வாழித் திருநாமங்களில் ஒன்றாகும். தாயார் மகாலட்சுமி தோன்றியதும் தாமரை மலரில்தானே? எனவே மகாலட்சுமி ஆழ்வாருக்குத் தங்கை முறையாகிறார். எனவேதான் நற்செல்வன் தங்காய் என்று அழைப்பதன் மூலம் பொய்கையாழ்வார் காட்டப்படுகிறார். இவர் பொய்கையில் அவதரித்தார். பனி போன்று குளிர்ச்சியானது பொய்கை. ‘பனித்தலை வீழ’ என்று காட்டிப் பொய்கையாழ்வார் எழுப்பப்படுகிறார். ‘இளங்கற்றெருமை’ என்று இப்பாசுரத்தில் பேசப்படுகிறது. இளமையான கன்று என இதற்குப் பொருள் ஆகும். இந்த ஆழ்வார் ஆழ்வார்களுக்குள் முதல்வர், இளையவர் என்பது இங்கு இந்தச் சொல் மூலம் கூறப்படுகிறது. இவ்வாறு பன்னிரண்டாவது பாசுரத்தில் பொய்கையாழ்வார் எழுப்பப் படுகிறார். ஏகாந்தியே எழுந்திரும் ! #🙏பெருமாள் #💫விஷ்ணு புராணக் கதைகள்🙏🏻 #🙏கிருஷ்ணா #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🔍ஜோதிட உலகம் 🌍
🙏பெருமாள் - 1 shnu Vish Vishnu vishnuprabhanc Wduఎ Vishnu Aurts Ovishnuprabhanc 1 shnu Vish Vishnu vishnuprabhanc Wduఎ Vishnu Aurts Ovishnuprabhanc - ShareChat