செங்கம் அருகே பரபரப்பு: காவல் நிலையம் முன்பு காதலியை கடத்த முயன்ற பெற்றோர் - போலீசாரின் துரித நடவடிக்கையால் மீட்பு
செங்கம்: 23
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த உச்சிமலைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் மதன்குமார் (24). இவரும், பக்கத்து கிராமமான இறையூர் அண்ணா நகரைச் சேர்ந்த சேட்டு என்பவரது மகள் ஆனந்தியும் (21) கடந்த நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.
திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் கடந்த 21.01.2026 அன்று இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். மகளைக் காணவில்லை என ஆனந்தியின் தந்தை சேட்டு, பாச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், காதலர்களைத் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தைக்காக காவல் நிலையம் வருமாறு அழைத்துள்ளனர்.
போலீசாரின் அழைப்பை ஏற்று, நள்ளிரவு நேரத்தில் காதலர்கள் இருவரும் காரில் பாச்சல் காவல் நிலையம் வந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த பெண்ணின் உறவினர்கள், காதலர்கள் வந்த காரை வழிமறித்துச் சேதப்படுத்தினர். மேலும், காரில் இருந்த ஆனந்தியை வலுக்கட்டாயமாக இழுத்துச் தூக்கிச் சென்று மற்றொரு காரில் ஏற்றி கடத்த முயன்றனர்.
காவல் நிலையத்திற்கு முன்னே நடந்த இந்தச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் கடத்தல் காரை மடக்கிப் பிடித்தனர். கடத்தப்பட்ட பெண்ணை மீட்டு மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் இருதரப்பு பெற்றோர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆனந்தியின் பெற்றோர் அவர் காலில் விழுந்து கெஞ்சியதால், மனம் மாறிய ஆனந்தி காதலனைப் பிரிந்து பெற்றோருடனேயே செல்வதாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, போலீசார் ஆனந்தியைப் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மேலும், மதன்குமாரிடம் "இனி பெண்ணிற்கும் உனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை" என எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி வாங்கிக்கொண்டு அவரையும் அனுப்பி வைத்தனர். நள்ளிரவில் அரங்கேறிய இந்த நாடகத்தால் பாச்சல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩
00:55

