#💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை நான்காம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 27.12.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
=========
கலைமுனி ஞானமுனி தவசு
============================
ஞான முனியினொடு நல்ல கலைமுனிவன்
தானமுள்ள மாமுனிவர் தலைகவிழ்ந் தேதவசு
சடைத்து முகம்வாடித் தானிருக்கு மப்போது
திடத்தமுடன் நல்ல திருமா லருகேகி
நன்றியுள்ள மாமுனியே நல்லகயி லாசமதில்
கண்டதுண் டுங்களையும் காட்டில்வந்த வாறேது
.
விளக்கம்
==========
மகாவிஷ்ணு ஸ்ரீரெங்கம் நோக்கி வந்து கொண்டிருக்கும் வழியிலுள்ள ஒரு வனாந்திரத்தில் ஞானமுனி, கலைமுனி என்னும் பெயருள்ள இரண்டு முனிவர்களும் உடல் சோர்ந்து வாடிய முகத்தோடு தலைகவிழ்ந்த வண்ணமாகத் தவமிருந்தனர்.
.
தீடீரென்று அவர்களைக் கண்ட மகாவிஷ்ணு, அவர்களின் அருகில் சென்று, நன்றி மறவாத நல்ல மாமுனிவர்களே ! உங்களை நான் கைலாசத்தில் பார்த்திருக்கிறேன். கைலாச வாசிகளான நீங்கள் இந்த காட்டிற்கு ஏன் வந்தீர்கள்? அதற்கான காரணம் யாது? என்று வினவினார்.
.
.
அகிலம்
========
அப்போது மாமுனிவர் ஆதி பதம்பணிந்து
செப்போடு வொத்தத் திருமாலே நாங்களுந்தான்
கயிலாச மீதில் கறைக்கண்டர் பாதமதை
ஒயிலாகப் போற்றி ஒழுங்கா யிருந்தவர்காண்
இருக்குமந்த நாளையிலே எங்களிரு பேர்களையும்
தருக்குகந்த ஈசர் தன்னையவர் வருத்தி
மாயன் மேல்பிறக்க மண்ணுலோ கந்தனிலே
காய மிழந்து காணா துருவெடுத்து
மறைந்திருக் கிறாரெனவே வானோர்கள் சொல்வதினால்
சிறந்தபுகழ் மாயவனுக்குத் தேருஞ் சிங்காசனமும்
மண்டபங்கள் மேடை வாய்த்தநீ ராவிகளும்
பண்டையுள்ள நல்ல பைம்பொன்னிறப் பொற்பதியும்
உண்டுகாண் துவாரகா யுகத்திலே யென்றுசொல்லி
கண்டுகொண்டா னானால் கலியனதை யாண்டுகொள்வான்
முன்போய்த் தானீங்கள் உவரிதனை வருத்தி
இன்பமுள் ளவகைகள் எல்லாமதி னுள்ளேவைத்து
வைகுண்ட ரங்கே வந்தா லிதைக்காட்டி
மெய்கொண்ட வுங்கள் இடத்திலே போவுமென்று
அல்லாதே போனால் அக்கினியா லுங்களையும்
இல்லாதே செய்வார் என்றுசொல்லி வாருமென்று
அனுப்பினா ரெங்களையும் அதற்காக இங்குவந்தோம்
துனுப்பாக வாரிதனைச் சொல்லியே சட்டம்வைத்து
ஏகினோங் கயிலை இடைவழியில் மாநீசன்
தாவி வரக்கண்டு தவலோக மேமறைந்து
கர்ம விதிப்பயனால் கலக்க மிகவடைந்து
தர்மச்சிறப் பில்லாது தலைகவிழ்ந் திருந்தோமென்றார்
.
விளக்கம்
==========
அப்போது அந்த இருமுனிவர்களும் மகாவிஷ்ணுவின் பாதத்தைத் தொட்டு வணங்கியவாறு, சுவாமி ! நாங்கள் இருவரும் கைலாசத்தில் சிவபெருமானின் பாதார விந்தங்களை உவகைசேர் ஒய்யாரமாகப் போற்றி வணங்கிக் கொண்டு ஒழுங்காக இருந்தவர்கள் தான்.
.
அப்படி அங்கிருந்த எங்களை ஒரு நாள் ஈகைக் கரத்தானாகிய சிவபெருமான் அழைத்து, மாயனாகிய மகாவிஷ்ணு, இன்னுமோர் பிறவி எடுப்பதற்காக, பூலோகத்தில் தம் உடலை உகுத்து வைத்து விட்டு, யாருடைய கண்களிலும் தென்படாத அரூப உடலோடு மறைந்திருக்கிறார் என்று வானுலகோர் எல்லாரும் சொல்லுகிறார்கள்.
.
ஆகவே, எவரொருவராலும் பெற்றிட முடியாத நிலையான புகழுக்குச் சொந்தக்காரராகிய மகாவிஷ்ணுவுக்குரிய தேரும், சிங்காசனமும், மண்டபங்களும், மேடைகளும், குளங்களும் அழகு மிகுந்த பைம்பொன் நிறத்தில் மிளிருகின்ற கோட்டை கொத்தளங்களும் அவருக்கு துவாபர யுகத்திலே உண்டு.
.
அவற்றையெல்லாம் கலிநீசன் கண்டு கொண்டானேயானால் அவன் அவற்றைக் கைப்பற்றிவிடுவான். ஆகவே நீங்கள் இருவரும் உடனே பூலோகத்திற்குச் சென்று, நான் இங்கே குறிப்பிட்ட இன்பமுறு வகைகள் எல்லாவற்றையும் கடலை இழுத்து மறைத்து வைத்துவிட்டு, கடலே வைகுண்டர் இங்கே வருவார். அவர் வந்தால் மட்டும் உன்னுள்ளே நாங்கள் மறைத்து வைத்துள்ள இவற்றையெல்லாம் அவருக்குக் காட்டுவதற்காக நீ உன்னுடைய நிலையான இடத்திற்கு திரும்பிப்போ, அதுவரைக்கும் இவற்றை கலிநீசர்களின் கண்ணிற்படாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கட்டுப்பாடும் உன்னுடையதேயாகும். அதுவல்லாமல் அசாக்கிரதையாக இருந்தால் உன்னையும், உன்னால் எழுந்துவரும் அலைகளையும் சிவபெருமான் அக்கினியால் அழித்து விடுவார் என்று சொல்லிவிட்டு வாருங்கள் என்று எங்கள் இருவரையும் சிவபெருமான் இங்கே அனுப்பி வைத்தார்.
.
சிவபெருமானின் உத்தரவுப்படி இங்கே வந்த நாங்கள் இருவரும், சிவபெருமான் சொன்னபடி கடலை இழுத்து அவற்றையெல்லாம் கடலுக்குள் மறைத்து வைத்துவிட்டு கடலிடம் சிவபெருமான் சொல்லச் சொன்னவற்றையும் சொல்லி, கடலுக்கு சட்டம்வைத்துவிட்டு, கயிலைக்குச் செல்லலாம் என்று புறப்பட்டு செல்லும் வழியில் கலிநீசனானவன் பூமிநோக்கி வருவதை எதேச்சையாகப் பார்த்து விட்டோம்.
.
அந்த கபடக் கலிநீசனைக் கண்ணுற்ற காரணத்தால், உங்களுக்குத் தவலோகம் செல்லும் பாதை தடுமாறிவிட்டதய்யா, முன்வினை விதிப்பயனோ என்னமோ என்ற ஏக்கத்தால் கதிகலங்கி, தர்மநீதம் எங்களை விட்டுவிட்டதே என்ற தாகத்தோடு தலைதாழ்ந்து இங்கே தவமிருக்கிறோம் சுவாமி என்றனர்.
.
.
அகிலம்
========
அப்போது அச்சுதரும் அந்தமுனி தங்களையும்
இப்போது கூட்டி ஏகின்ற அப்பொழுது
கருங்குரங்கு காரானை கரியகடு வாய்புலியும்
இருங்கருட னூர்வனமும் எறும்புஈ மூட்டைகளும்
கள்ளக் கசடுள்ள கரிய மிருகமதும்
கொள்ளைகொண்ட ஊர்வனமும் குசலான பட்சிகளும்
தரந்தரமாய்க் கூடித் தாமே திரளாக
வரவேகண் டெம்பெருமாள் மாமுனியைத் தான்பார்த்து
ஏதேது மாமுனியே இந்த வழிதனிலே
ஈதே தெனவே எனக்கேட்க மாமுனிவர்
.
விளக்கம்
==========
முனிவர்களின் இந்தக் குமுறலைக் கேட்ட மகாவிஷ்ணு, அவர்கள் இருவரையும் தன்னோடு அழைத்துக்கொண்டு அங்கிருந்து புற்பட்டார். அப்போது அவர்களின் எதிரே கருங்குரங்குகளும், கறுப்பான யானைகளும், கரிய நிறங்கொண்ட கடுவாய், புலி, இருளையொயத்த கருடன், எறும்பு, ஈ, மூட்டைப்பூச்சி இன்னும் பல்வேறு ஊர்வனவும், வாது சூதுள்ள வலிய மிருகங்களும். அந்நியப்பொருளைத் தன்பொருள்போல் கொள்ளையடிக்கும் குறுகிய குணமுள்ள ஊர்வனவும், வஞ்சகக் குணங்கொண்ட பறவைகளும் வந்து கொண்டிருந்தன.
.
ஈனப் பிறவிகளான அந்த ஜீவஜந்துக்களை ஏறிட்டுப் பார்த்த மகாவிஷ்ணு, தன்னுடம் பயணித்துக் கொண்டிருக்கும் ஞான முனிவரையும், கலை முனிவரையும் பார்த்து, முனிவர்களே ! இந்த ஜீவஜந்துக்களெல்லாம் ஏது எனக் கேட்டார்.
.
.
அகிலம்
========
நீச னுதிரம் நீதிகெட்ட இம்மிருகம்
வாசமுள்ள பட்சிகளும் மானிலத்தி லூர்வனமும்
பிறந்துதித்து வந்து பேருலகி லம்மானை
சிறந்தறிந்து எம்பெருமாள் செவியிலே கையறைந்து
விலகியே போக வேணுமென் றெம்பெருமாள்
மலகிய மாமுனிவர் மாயனடி போற்றி
எங்களுக் கெங்கே இருக்கவே சொல்வீரென்று
அங்கந்த மாயவரின் அடிதொழுதா ரம்மானை
.
விளக்கம்
==========
உடனே, அந்த முனிவர்கள், சுவாமி, அரக்கத்தனமான இந்த மிருகங்களும், அவகபடமான இந்த பறவைகளும், அபாயகரமான இந்த ஊர்வனவும் கலிநீசனின் பிறப்பிற்கு ஆதாரமான முன்னாள் குறோணியின் உடலிலுள்ள ஆறாவது துண்டத்தோடு புதைக்கப்பட்ட இரத்தமேயாகும். குறோணியாகிய அந்தக் கொடியவனின் இரத்தமே இந்தக் கலியுகத்தில் கொடூரமான ஜீவஜந்துக்களாகப் பிறப்பெடுத்துள்ளன என்றனர்.
.
ஞானத்தின் திறவுகோலான ஞானமுனிவரும், கலைகளின் கருவுலமான கலைமுனிவரும் நிதானித்து உரைத்த நிஜமான வார்த்தைகளைச் சிந்தித்து உணர்ந்த மகாவிஷ்ணு, தம் செவிகளை இருகைகளாலும் பொத்திக்கொண்டு, இவைகளுக்கு எதிரே நாம் சென்றால் அவைகளிடம் உறைந்துள்ள அனைத்துத் தன்மைகளும் நம்மையும் தொற்றிக் கொள்ளும் எனவே சற்று விலகியே போவோம் என்றார்.
.
மகாவிஷ்ணுவின் இச்செயல்கண்டு அதிர்ச்சியுற்ற மாமுனிவர்கள், மகாவிஷ்ணுவின் பாதங்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டு சுவாமி, தாங்களே இப்படிக் கூறினால் எங்கள் கதி என்ன? நாங்கள் இந்தக் கபடக்கலியில் மூழ்காதபடி இருக்க அடைக்கலமான ஓரிடத்தை அருளுங்கள் அய்யா என்று அடிதொழு நின்றார்கள்.
.
.
தொடரும்….. அய்யா உண்டு.


