#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் சிந்தனை*
*“உள்ளவருக்குக் கொடுக்கப்படும்”*
துறவி ஒருவர் இருந்தார். ஒருநாள் அவரிடம் கடவுள்மீது நம்பிக்கை இல்லாத இளைஞன் ஒருவன் வந்தான்.
“சுவாமி! நான் கடவுள்மீது நம்பிக்கை இல்லாதவன். எனக்கு ஒரு சிறிய ஐயம். என்மீது ஒளிரக்கூடிய அதே கதிரவன்தானே கடவுள்மீது நம்பிக்கைகொண்ட ஒருவர்மீதும் ஒளிர்கின்றது. அப்படியிருக்கையில் ஒருவர் கடவுள்மீது நம்பிக்கை கொள்வதால் என்ன பயனை அடைகின்றார்? இதற்கு நீங்கள்தான் பதில் கூற வேண்டும்” என்று பணிவோடு கேட்டான் அந்த இளைஞன்.
துறவி அவனைக் கூர்ந்து பார்த்தார். பின்னர் அவர் அவனிடம், “உன்மீது ஒளிரக்கூடிய கதிரவன்தான் கடவுள்மீது நம்பிக்கைகொண்ட ஒருவர்மீதும் ஒளிர்கிறது என்றாலும், அவர்மீது இன்னொரு கதிரவன் ஒளிர்கின்றது. அந்தக் கதிரவன் அவருடைய உடல்மீது அல்ல, மாறாக, ஆன்மாவின் மீது” என்றார்.
ஆம், கடவுள்மீது நம்பிக்கை கொண்டு வாழும் ஒருவர்மீது அவரது ஆசியும் அருளும் ஒளியும் அபரிமிதமாக இருக்கும்! நற்செய்தியில் இயேசு, “உள்ளவருக்குக் கொடுக்கப்படும்” என்கிறார். இயேசு கூறும் இவ்வார்த்தைகளின் பொருள் என்ன என்பது குறித்து நாம் சிந்திப்போம்.
*திருவிவிலியப் பின்னணி:*
தொடக்க காலகட்டத்தில் கிறிஸ்துவின் நம்பிக்கை கொண்டதற்காக பலரும் பலவிதமாகச் சித்தரவதை செய்யப்பட்டர்கள். இதற்கு அஞ்சியே ஒருசிலர் தங்கள் கிறிஸ்தவ அடையாளத்தை மறைத்து வாழ்ந்து வந்தார்கள். இத்தகையோருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் மாற்கு நற்செய்தியாளர், “விளக்கைக் கொண்டு வருவது எதற்காக, விளக்குத் தண்டின்மீது வைப்பதற்காக அல்லவா?” என்கிறார்.
இயேசு கூறுவதாய் மாற்கு நற்செய்தியாளர் கூறும் இவ்வார்த்தைகள் யாரும் எக்காரணத்தைக் கொண்டும் தங்கள் கிறிஸ்தவ அடையாளத்தை மறைத்து வாழ வேண்டாம். அவர்கள் விளக்குத் தண்டின்மீது ஏற்றி வைக்கப்பட்ட விளக்கைப் போன்று ஒளிமயமாக இயேசுவுக்குச் சான்று பகர்ந்து வாழட்டும் என்கிறார். இவ்வாறு எவர் ஒருவர் யாருக்கும் அஞ்சாமல், கிறிஸ்துவுக்குச் சான்று பகர்ந்து வாழ்கின்றாரோ, அவருக்கு இறைவன் தமது ஆசியை அபரிமிதமாக் கொடுப்பார் என்கிறார் மாற்கு.
முதல் வாசகத்தில் தாவீது மன்னர், ஆண்டவருக்கு முன்பு தன்னை ஓர் ஊழியனாகக் கருதி, அவரது ஆசி தனக்குத் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று மன்றாடுகின்றார். அவர் மன்றாடியதுபோன்று ஆண்டவரது ஆசி அவருக்கு அபரிமிதமாகக் கிடைக்கின்றது. எனவே, நாம் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தவர்களாய், விளக்கைப் போன்று பிரகாசமாக எழுந்து நின்று ஒளிதந்து, இயேசுவுக்குச் சான்று பகர்வோம்.
*சிந்தனைக்கு:*
கிறிஸ்துவுக்காக மறைச்சாட்சியாக வேண்டுமே ஒழிய, மறைந்து வாழக் கூடாது.
நம்பிக்கை என்பது ஒளிபோன்றது. அதை மற்றவருக்குக் கொடுக்கக் கொடுக்க வளர்ந்து கொண்டே இருக்கும்.
நாம் குன்றின்மீது ஏற்றி வைக்கப்பட்ட விளக்குகள். அதனால் குன்றாமல் ஒளிவீசுவோம்.
*இறைவாக்கு:*
‘எழு, ஒளிவீசு’ (எசா 60:1) என்பார் ஆண்டவர். எனவே, நாம் எழுந்து ஒளிவீசுவோம். இயேசுவுக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
*- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.*


