ShareChat
click to see wallet page
search
அருளானந்தர் நவநாள் செபம்!* நாள் -2 செந்தமிழ் நாட்டிலே இயேசுமறையைப் போதிக்க வந்த மகிமை நிறைந்த அப்போஸ்தலரே! சொல்லிலும், செயலிலும் வல்லமை மிகுந்த புனித அருளானந்தரே, எங்களைக் கருணையுடன் நோக்கியருளும். எங்கள் குடும்பங்கள், உற்றார் உறவினர் மீதும், மாந்தர் அனைவர் மீதும் இரங்கியருளும். இறைவனின் ஏவுதலுக்கு இடைவிடாது செவிசாய்த்த உமது வியப்புக்குரிய பிரமாணிக்கத்தையும், கடின பயணங்களை மேற்கொண்டு. வேதனைகள், துன்பங்களைத் தாங்க உம்மைத் தூண்டின தளராத ஊக்கத்தையும் எண்ணி உம்மைப் புகழுகிறோம். உமது இதயத்தில் பற்றியெரிந்த அன்புத் தீ எங்கள் இதயத்திலும் பற்றியெரியச் செய்தருளும். மீட்புப் பணியினை நாங்களும் மனமுவந்து நிறைவேற்ற எங்களைத் தூண்டியருளும் மகிமை நிறைந்த பாதுகாவலரே! மறவ நாட்டின் நல்ல ஆயரே! உம்முடைய உழைப்புகளையும், செப தவங்களையும், வீரத் தியாகத்தையும் முன்னிட்டு இறைவனிடமிருந்து நாங்கள் கேட்கும் மன்றாட்டைப் பெற்றுத் தந்தருளும். – ஆமென். (தேவையான மன்றாட்டை மௌனமாகக் கூறவும்) இறைவா, உம்மிடம் நாங்கள் சமர்ப்பித்த இவ்வேண்டுதல்களுக்கு கனிவுடன் செவிகொடுத்து, புனித அருளானந்தர் அடிகளாரின் வேண்டுதலால் அவற்றை நாங்கள் பெற்றுக்கொள்ள எங்களுக்கு அருள் தாரும். இதைத் தூய ஆவியுடன், ஒரே இறைவனாக என்றும் வீற்றிருப்பவரும், ஆட்சி புரிபவருமான, உம் திருமகன், எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம். ஆமென். *சிந்தனை:* *உயிர் பிழைக்க வாய்ப்பிருந்தும், சாவைத் துணிவோடு ஏற்ற ஜான் தெ பிரிட்டோ!* தாகத்தோடு இருந்த ஜான் தெ பிரிட்டோவிற்கு நெல்லூரில் இருந்த பெண்மணி மோர் தந்ததால் அவ்வூருக்கு ஆசி வழங்கிய அவர் அங்கிருந்து ஓரியூருக்குப் படைவீரர்களால் இழுத்துச் செல்லப்பட்டார். அவர் ஓரியூரை அடைந்த நாள் பிப்ரவரி 03. அப்போது ஓரியூரில் ஆளுநராக இருந்தவன் சேதுபதி மன்னனின் சகோதரரனான உதயன் என்பவன். இவன் ஒற்றைக் கண்ணன். தொழுநோயால் பாதிக்கப்பட்டவன். இவன் ஜான் தெ பிரிட்டோவைப் பற்றிக் கேள்விப்பட்டு, தனது தொழுநோயைப் போக்கி, தனக்குப் பார்வையளிக்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டான். அவ்வாறு செய்தால் அவரை அவன் சிறையிலிருந்து விட்டுவிப்பதாகவும் உறுதியளித்தான். ஜான் தெ பிரிட்டோவோ அதெல்லாம் முடியாது என்று மறுத்துவிட்டார். உதயனின் வார்த்தைக்கு ஜான் தெ பிரிட்டோ மறுப்புத் தெரிவித்ததையடுத்து, உதயனின் மனைவி ஜான் தெ பிரிட்டோவிடம், அவன் சொன்ன அதை வார்த்தைகளைச் சொல்லி, தன் கணவருக்கு நலமளிக்குமாறு கேட்டுக்கொண்டாள். அதற்கு ஜான் தெ பிரிட்டோ அவளிடம், "மறைச்சாட்சியாக உயிர் துறப்பதற்குத்தான் இத்தனை நாள்களும் நான் காத்துக் கொண்டிருந்தேன். இப்போது அந்த நாள் நெருங்கி வந்துவிட்டது. இனி நான் அதை வேண்டாம் என்று சொல்வேனா?" என்றார். இச்செய்தியை இராணிதேவி தன் கணவன் உதயனிடம் சொன்னபோது, அவன் வெகுண்டெழுந்து, ஜான் தெ பிரிட்டோவை அருகில் இருந்த பெருமாள் கோயிலின் உள்ளே தள்ளினான். ஆம், ஜான் தெ பிரிட்டோ பிழைத்துக் கொள்வதற்குத் தனக்கு வாய்ப்பு கிடைத்தபோதும், அதை மறுத்துவிட்டு, சாவை ஏற்கத் தயாரானார். இவ்வாறு நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்காக நம் உயிரை இழக்கத் தயாராக வேண்டும் என்ற செய்தியை அவர் நமக்குத் தருகின்றார். யோவான் நற்செய்தியில் இயேசு கூறுவார்: "கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்" (யோவா 12:24). எனவே, நாம் புனித ஜான் தெ பிரிட்டோவைப் போன்று இயேசுவுக்காக நம் உயிரையும் இழந்து, இறையாசியைப் பெறுவோம். *இறுதி செபம்:* கிறிஸ்துவின் அன்பினால் நிறைந்த புனித அருளானந்தரே, அரண்மனை வாழ்வையும், உலக இன்பங்களையும், உற்றார் உறவினரையும், சொந்த நாட்டையும் துறந்து, தொலை நாடாகிய இந்தியாவுக்கு வந்து, மறவ நாட்டிலே கிறிஸ்துவின் அரசை நிறுவ, எண்ணில்லாத் துன்ப துயரங்களையும் இன்னல் இடைஞ்சல்களையும் பொருட்படுத்தாது, பத்தொன்பது ஆண்டுகளாய் உழைத்து, கணக்கற்ற ஆன்மாக்களை திருமந்தையில் சேர்த்த ஒப்பற்ற வீரரே! உமது குருதியால் புனிதமாக்கப்பட்ட தமிழ்நாட்டின் மக்களாகிய எங்கள் மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். புனித சவேரியாரைப் பின்பற்றி மெய்மறையைப் பரப்ப வந்த உத்தம போதகரே! மறவ நாட்டு மாணிக்கமே! எல்லார்க்கும் எல்லாமாக விளங்கி, எங்கள் முன்னோர்க்கு வாழ்வுதரும் நற்செய்தியை அறிவித்தீர். சோர்வின்றி நல்லன செய்யவும், அஞ்சா நெஞ்சத்தோடு ஆபத்துக்களை எதிர்கொள்ளவும், சோதனைகளையும், சாவையும் உறுதியுடன் ஏற்றுக் கொண்டீர். ஓ வீரம் மிகுந்த தியாகியே! இயேசு சபையின் ஒப்பற்ற மறைச்சாட்சியே! உம் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இந்த நாட்டில் உழைத்து வரும் குருக்களுக்கும் திருத்தொண்டர், துறவியர், வேதியர் அனைவருக்கும் உமக்கிருந்த இறையன்பும், ஆன்ம தாகமும், உயிரையும் பொருட்படுத்தாத தீரமும் உண்டாகச் செய்தருளும். கிறிஸ்துவின் மந்தையைச் சேராத எத்தனையோ இலட்சம் ஆடுகள் இந்நாட்டில் உண்டு. அவர்களுக்கெல்லாம் வழிகாட்டி ஒளியேற்ற இன்னும் பல குருக்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளராகிய ஆண்டவரை மன்றாடியருளும். தவிர, துன்பத்தாலும் நோயாலும் வறுமையாலும் நலிந்து வாழும் ஏழை மக்கள் மீதும்; இரக்கமாயிரும். அனைவர் நடுவிலும் கிறிஸ்துவின் அன்பும் அமைதியும் நிலைத்து நிற்பனவாக! இறுதியாக, புனித அருளானந்தரே, எங்கள் ஆயர்கள், குருக்கள், துறவியர், மக்கள் அனைவரையும் உமது பாதுகாவலில் வைக்கிறோம். அவர்கள் எல்லாரும் நம் ஆண்டவர் கிறிஸ்துவின் அன்பில் எல்லா நலன்களையும் பெற்று, பரம தந்தையின் திருவுளத்துக்கு அமைந்து, புனிதர்களாய் வாழ்ந்து, என்றும் மாறாத பேரின்ப வாழ்வுக்கு வந்து சேரச் செய்தருளும். *– ஆமென்.* #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசுவே ஜீவன் - ShareChat