பைபிள் வாசகங்கள்:
சனவரி 24 : முதல் வாசகம்
போர் முனையில் வீரர் எங்ஙனம் வீழ்ந்துபட்டனர்?
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 1: 1-4, 11-12, 19, 23-27
அந்நாள்களில்
சவுல் இறந்தபின், அமலேக்கியரைத் தோற்கடித்துத் திரும்புகையில் தாவீது சிக்லாகில் இரண்டு நாள்கள் தங்கினார். மூன்றாம் நாள், சவுலின் பாசறையினின்று கிழிந்த ஆடைகளோடும், புழுதிபடிந்த தலையோடும் ஒருவன் வந்தான். அவன் தாவீதிடம் வந்ததும், தரையில் வீழ்ந்து வணங்கினான். “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று தாவீது அவனை வினவ, “நான் இஸ்ரயேல் பாசறையினின்று தப்பி வந்துவிட்டேன்” என்று அவன் பதில் கூறினான். “என்ன நடந்தது? என்னிடம் சொல்” என்று தாவீது கேட்க, அவன், “வீரர்கள் போரினின்று ஓடிவிட்டனர்; அவர்களுள் பலர் வீழ்ந்து மடிந்துவிட்டனர்; சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்துவிட்டனர்” என்று கூறினான்.
தாவீது தம் ஆடைகளைப் பற்றிக் கிழித்தார். அவரோடு இருந்தவர்களும் அவ்வாறே செய்தனர். சவுலுக்காகவும், அவருடைய மகன் யோனத் தானுக்காகவும், ஆண்டவரின் மக்களுக்காகவும் இஸ்ரயேல் வீட்டாருக்காகவும் அவர்கள் அழுது புலம்பி மாலைவரை நோன்பு இருந்தார்கள். ஏனெனில் அவர்கள் வாளால் மடிந்துவிட்டார்கள். ‘இஸ்ரயேலே! உனது மாட்சி உன் மலைகளிலே மாண்டு கிடக்கின்றது! மாவீரர் எவ்வாறு மடிந்தனர்! சவுல்! யோனத்தான்! அன்புடையார், அருளுடையார்! வாழ்விலும் சாவிலும் இணைபிரியார்! கழுகினும் அவர்கள் விரைந்து செல்வர்! அரியினும் அவர்கள் வலிமைமிக்கோர்!
இஸ்ரயேல் புதல்வியரே! சவுலுக்காக அழுங்கள்! செந்நிற மென்துகிலால் உங்களை உடுத்தியவர் அவரே! பொன்னின் நகைகளினால் உம் உடைகளை ஒளிரச் செய்தாரே! போர் முனையில் வீரர் எங்ஙனம் வீழ்ந்துபட்டனர்! உன் மலைகளிலே யோனத்தான் மாண்டு கிடக்கின்றான்! சகோதரன் யோனத்தான்! உனக்காக என் உளம் உடைந்து போனது! எனக்கு உவகை அளித்தவன் நீ! என்மீது நீ பொழிந்த பேரன்பை என்னென்பேன்! அது மகளிரின் காதலையும் மிஞ்சியது அன்றோ! மாவீரர் எவ்வாறு மடிந்தனர்! போர்க்கலன்கள் எங்ஙனம் அழிந்தன!
ஆண்டவரின் அருள்வாக்கு.
சனவரி 24 : பதிலுரைப் பாடல்
திபா 80: 1-2. 4-6 (பல்லவி: 3b)
பல்லவி: ஆண்டவரே, எம்மை மீட்குமாறு உம் முக ஒளியைக் காட்டியருளும்!
1
இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! யோசேப்பை மந்தையென நடத்திச் செல்கின்றவரே! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்!
2
எப்ராயிம், பென்யமின், மனாசேயின் முன்னிலையில் உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! - பல்லவி
4
படைகளின் கடவுளாம் ஆண்டவரே! உம் மக்களின் வேண்டுதலுக்கு எதிராக எத்தனை நாள் நீர் சினம் கொண்டிருப்பீர்?
5
கண்ணீராம் உணவை அவர்கள் உண்ணச் செய்தீர்; கண்ணீரை அவர்கள் பெருமளவு பருகச் செய்தீர்;
6
எங்கள் அண்டை நாட்டாருக்கு எங்களைச் சர்ச்சைப் பொருள் ஆக்கினீர்; எங்கள் எதிரிகள் எம்மை ஏளனம் செய்தார்கள். - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திப 16: 14b காண்க
அல்லேலூயா, அல்லேலூயா!
உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி ஆண்டவரே, எங்கள் இதயத்தை திறந்தருளும். அல்லேலூயா.
சனவரி 24 : நற்செய்தி வாசகம்
இயேசு மதிமயங்கி இருக்கிறார் என்று இயேசுவின் உறவினர் பேசிக்கொண்டனர்.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 20-21
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களுடன் வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை. அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக்கொண்டனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
-----------------------------------------------------------------------------
“அவர் மதிமயங்கி இருக்கிறார்”
பொதுக்காலத்தின் இரண்டாம் வாரம் சனிக்கிழமை
I 2சாமுவேல் 1:1-4, 11-12, 19, 23-27
II மாற்கு 3:20-21
“அவர் மதிமயங்கி இருக்கிறார்”
சர்ச்சிலின் மேசையை அலங்கரித்த வார்த்தைகள்:
இங்கிலாந்தின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஆபிரகாம் லிங்கன்மீது தனி மரியாதை வைத்திருந்தார். எந்தளவுக்கு என்றால், ஆபிரகாமின் லிங்கனின் வார்த்தைகளை அவர் வேத வாக்கைப் போன்று கடைப்பிடித்து வந்தார். இது தவிர, ஆபிரகாம் லிங்கன் சொன்ன ஒரு வாக்கியத்தையும் தன் மேசையில் அவர் பொறித்து வைத்து, அதைத் தன் வாழ்நாளின் இறுதிவரை கடைப்பிடித்து வந்தார். வின்ஸ்டன் சர்ச்சிலின் மேசையை அலங்கரித்த அந்த வாக்கியம் இதுதான்:
“என்னால் முடிந்த வரைக்கும் ஒரு செயலைச் சிறப்பாகச் செய்வேன். ஒருவேளை நான் செய்த செயலின் பலன், நான் எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்காமல் போய், அதற்காக மக்கள் என்னைத் தவறாக விமர்சித்தாலும், நான் வருத்தப்பட மாட்டேன். அதே நேரத்தில் நான் ஒரு செயலைச் சிறப்பாகச் செய்யாமல், அதற்காகப் பத்து வானதூதர் வந்து, என்னைப் பற்றி உயர்வாகப் பேசினாலும், நான் சிறிதும் மகிழ்ச்சி அடைய மாட்டேன்.”
ஆபிரகாம் லிங்கன் சொன்னதாக, வின்ஸ்டன் சர்ச்சிலின் மேசை அலங்கரித்த இந்த வார்த்தைகள், நாம் ஒன்றைச் சிறப்பாகச் செய்து முடித்துவிட்டோம் எனில், அதன்பிறகு வரக்கூடிய விமர்சனத்தைக் கண்டுகொள்ளத் தேவையில்லை என்கிற செய்தியை நமக்கு எடுத்துரைக்கின்றது. நற்செய்தியில் மக்கள், இயேசுவை மதிமயங்கி விட்டார் என்று பேசிக்கொள்கிறார்கள். இதனை இயேசு எப்படி எதிர்கொண்டார் என்பது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
‘பொதுவாழ்விற்கு வந்துவிட்டால் விமர்சனங்களுக்குப் பஞ்சம் இருக்காது’. இக்கூற்று இயேசுவுக்கும் பொருந்தும். தூய ஆவியாரால் நிரப்பப்பட்ட இயேசு, கடவுளுடைய வார்த்தையை மக்களுக்கு அறிவித்து, அவர்களிடமிருந்த பல்வேறு விதமான நோயாளர்களை நலமாக்கி, எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார் (திப 10:38). இத்தகைய பணியினை அவர் ஓய்வில்லாமல் செய்து வந்தார். இதைப் பார்த்துவிட்டு, அவர் மதிமயங்கி விட்டார் என்று மக்கள் பேசிக்கொள்கின்றார்கள்.
மக்கள் ஆயிரம் பேசியிருக்கலாம். அதைப் பற்றிக் கவலைப்படாமலும், கண்டுகொள்ளாமலும் இயேசுவின் உறவினர்கள் இருந்திருக்கலாம். ஏனெனில், இயேசுவே அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அப்படியிருக்கையில் இயேசுவின் உறவினர் அதைப் பெரிதென நினைத்து, அவரைப் பிடித்துக்கொண்டு போக அவரிடம் வருகின்றனர். ‘பிடித்துக்கொண்டுபோக’ என்ற வார்த்தை, ‘கைது செய்தல்’ என்ற பொருளில் மாற்கு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார் (6:17, 12:12, 14:1, 44, 46, 51).
இயேசு மதிமயங்கி விட்டார் என்று மக்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு, அவரைப் பிடித்துக்கொண்டு போக, அவரது உறவினர்கள் வருவது அவர்மீது அவர்களுக்கு நம்பிக்கையும் அன்பும் இல்லாததையே காட்டுகின்றது. இதன்மூலம் அவர்கள் இயேசுவுக்கு யாரோபோல் ஆகின்றார்கள். ஏனெனில், இயேசுவின் ‘உறவினர்’ அவர்மீது உண்மையான நம்பிக்கை கொண்டிருக்கவேண்டும். அது இயேசுவின் உறவினர்களுக்கு இல்லை. அதனால்தான் அவர்கள் இயேசுவுக்கு யாரோ போல் ஆகின்றார்கள்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கையில், இன்னொரு பக்கம், மக்கள் தன்னைப் பற்றிப் பேசியது அவதூறு என நினைத்துக்கொண்டு, இயேசு அதைக் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து இறைப்பணி செய்கின்றார். ஆதலால், நாம் நம்மீது சுமத்தப்படும் விமர்சனங்கள் உண்மையில்லாத பட்சத்தில், அவற்றைக் கண்டுகொள்ளாமல், இயேசுவைப் போன்று தொடர்ந்து இறைப்பணியைச் சிறப்பாகச் செய்வோம்.
சிந்தனைக்கு:
கடைசி மனிதன் இருக்கும் வரையில் விமர்சனம் இருந்துகொண்டுதான் இருக்கும்
வளர்ச்சிக்குரிய விமர்சனங்கள் வருகின்றபோது, அவற்றைக் கவனத்தில் எடுத்துக்கொள்வது உத்தமம்.
விமர்சிப்பவர்களுக்கு எங்கேயும் சிலை இல்லை; கலைஞர்களுக்கே சிலைகள் உள்ளன. நாம் விமர்சகர்களா? கலைஞர்களா?
ஆன்றோர் வாக்கு:
‘மற்றவர்களுடைய விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளாத யாருக்கும் மற்றவரை விமர்சிக்க எந்த உரிமையையும் இல்லை’ என்பார் மார்க் டுவைன். எனவே, நாம் நல்லவற்றை எடுத்துக்கொண்டு, நல்லவராம் இயேசுவின் வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். #பைபிள் வசனங்கள்

