ஸ்ரீ (969)🏹🚩அரங்கனை அங்கம் அங்கமாக ஒவ்வொரு பாசுரத்திலும் வர்ணித்து வந்த திருப்பாணாழ்வார் அவன் கண்களைப் பற்றிச் சொல்லுகின்றார்.
சிலருடைய கண்களைப் பார்த்தால், அவர்கள் அழைக்காமலேயே அவர்கள் கண்கள் மட்டும் நம்மை அழைக்கும்! சிலருடைய கண்களைப் பார்க்க முடியாமல், பயங்கரமாக இருக்கும்! சிலருடைய கண்கள், நம்மை வெறுப்பு கொள்ளச் செய்யும்! சிலருடைய கண்கள், நம்மை மயக்கும்! சில கண்கள், எப்போதும் சிவந்து, கோபமாகவே இருக்கும்! சில கண்கள், எப்போதும் சோகமாகவே இருக்கும்!
மனிதக் கண்களில், இப்படி பல உணர்ச்சிகள் தெரிந்தாலும், அவை ஒரே சமயத்தில் தெரிவதில்லை!
ஒரே சமயத்தில், சிலருக்குக் குளிர்ச்சியும், சிலருக்குக் அருளும், சிலருக்குக் கோபமும் - மொத்தத்தில் நவரசமும் - தரும் ஒரே கண்கள் - அந்த அதே கண்கள் - அரங்கனுடையது மட்டுமே! எனவே தான் திருப்பாணாழ்வார், அவன் கண்களை, 9 விதமாக வர்ணிக்கின்றார்! எப்படி?
முகத்தின் அழகே - முகமே - கண்கள் (அமலன் முகத்து)! கருப்பு (கரியவாகி)! விசாலம் (புடை பரந்து)! ஒளி வீசும் (மிளிர்ந்து)! நீண்ட கண்கள் (நீண்டு)! செம்மை (செவ்-)! வரி ஓடும் (வரி ஓடி)! கண்களே முகம் என்று சொல்லும்படி, பெரியது (பெரியவாய)! அந்தக் கண்களை (கண்கள்) யார் பார்த்தாலும், அவர் பாதிக்கப் படுவது நிச்சயம்
ஆண்டாள், ‘அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல், எங்கள் மேல் சாபம் இழிந்து’ என்று தானே பாடுகின்றாள்!
இந்த அரங்கனே, அன்று இரணியனின் உடல் பிளந்தவன்! பின் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த ஆதிப்பிரானான நரசிம்மன் கண்களில் கோபம்! மற்ற தேவர்கள் எல்லோரும் நெருங்க பயப்பட, பிரகலாதனுக்கு மட்டும், அந்தக் கண்களில் கோபம் தெரியவில்லை! குளிர்ச்சியும், பரிவும், அருளும் தெரிகின்றது!(பேதமை செய்தன)!
அவன் திருமுக மண்டலத்தை நாம் பார்க்கும்போது, நமக்கு அதிகமாகத் தெரிவதும், பார்க்கத் தோன்றுவதும், அந்தக் கண்கள் தான்! அவன் கண்களால் நம்மைப் பார்க்க மாட்டானா? என்று தோன்றும்!
திருமலையில், நமக்குக் கிடைக்கும் 10 வினாடிகளில், அவன் திருமுகத்தையும், அதில் அவன் கண்களையும் தானே நாம் 5-6 வினாடிகள் பார்க்கின்றோம்? பின்னர் தானே முடி, அடி எல்லாவற்றுக்கும் ஒரு வினாடி செலவிடுகின்றோம்?
இந்த அரங்கனின் கண்களைப் பார்த்துத் தானே, பிள்ளை உறங்காவில்லி தாசர், தன் மனைவியையும், குடும்பத்தையும் துறந்தார்!
’பிரகலாதனுக்கு மட்டும் குளிர்ச்சி, கடாக்ஷம், என்னை மட்டும் பைத்தியம் ஆக்குகிறாயே!’ என்று அந்தக் கண்களிடமே கேட்கின்றார்.
அதனால் தான், மேலே அவன் அழகு பற்றிப் பாசுரம் இயற்ற இயலாமல், 'அரங்கா! நீ அழகு! உன் கண்கள் அழகு! இந்த அழகு முடிவில்லாதது! 'உன்னையும், உன் கண்களையும் பார்த்த என் கண்கள், வேறு எதையும் பார்க்கக் கூடாது' எனும் நிலைக்கு வந்து விடுகிறார் திருப்பாணாழ்வார்!i #நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம்


