கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை மூன்றாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 08.12.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
நாரத மாமுனிவர் நிருபதிராஜரைனச் சந்தித்தல்
==============================================
சாற்று மொழியிசையத் தானுரைக்கு மாமுனிவன்
நீதமுள்ள நல்ல நிருபதி ராசனுந்தான்
பெற்ற மதலைதனைப் பெண்கேட்கப் போயினனே
மாமுனிவன் கேட்க மன்ன னதிசயித்துத்
தாமுனிந் தேது தானுரைப்பா னம்மானை
நல்ல முனியே நானுரைக்க நீர்கேளும்
செல்ல மகவு தேவிக்கு மென்றனக்கும்
இல்லாம லனேகநாள் இருந்தோந் தவசாக
நல்லான ஈசர் நாட்டமுட னிரங்கி
ஆண்பிள்ளை யுன்றனக்கு ஆகமத்தி லில்லையென்று
பெண்பிள்ளை யேழு பிறக்குமென்று சொன்னார்காண்
அப்போது ஈசுரரை அடியேன் மிகப்பார்த்து
இப்போது என்றனக்கு இரணமுடி வாகுகையில்
கொள்ளிவைக்கப் பிள்ளை ஒன்று கொடுவுமென்றேன்
தெள்ளிமை யாயீசர் சொன்ன மொழிகேளும்
.
விளக்கம்
==========
பத்திரகாளியிடம் விடைபெற்று புறப்பட்ட நாரத மாமுனிவர், காளிதேவியின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டவண்ணம் நன்னெறிகளோடு நாடாண்டுகொண்டிருக்கும் நிருபதிராஜனைச் சந்தித்து, நிருபதி மகாராஜனே ! உம்முடைய பெண் மக்கள் ஏழு பேருக்கும் திருமணம் செய்ய வேண்டாமா என்று பேச்சை தொடங்கினார்.
.
அதைக் கேட்டு அகமகிழ்ந்த நிருபதிராஜன், நாரதமாமுனிவரைப் பார்த்து, மாமுனிவரே ! நான் இப்போது சொல்லவரும் செய்தியைக் கவனமாகக் கேளுங்கள். நீண்ட நெடுங்காலமாக எனக்குக் குழந்தை பிறக்கவில்லை. ஆகவே நானும் என் மனைவியும் சிவபெருமானை நோக்கிப் பல ஆண்டுகளாகத் தவமிருந்தோம்.
.
எங்கள் இருவரின் தவத்திற்கு இரக்கமுற்ற சிவபெருமான், என் முன்னே எழுந்தருளி, நிருபதனே ! உனக்கு நிச்சயமாக ஏழு பெண் குழந்தைகள் பிறக்கும் என்று சொன்னார். அப்போது நான் சிவபெருமானின் திருவடிகளை வணங்கி சுவாமி என்றுடைய இறுதிகாலச் சடங்குகளைச் செய்வதற்காவது ஒரே ஒரு ஆண்பிள்ளையாவது அருளுமென்று வேண்டினேன். அதற்கு சிவபெருமான் தெளிவாகச் சொன்ன பதிலைச் சொல்லுகிறேன் அதையும் கேளுங்கள்.
.
.
அகிலம்
========
தெய்வச் சான்றோராய்த் திருவான மாகாளி
கையதுக்குள் வாழ்ந்துன் கன்னியேழு பேர்களையும்
மாலையிட் டுன்றனக்கு வருமாபத் தையெல்லாம்
மேலவராய்க் காத்து மேதினியோர் தாமறிய
உன்றனக்கு நல்ல உதவிமிகச் செய்வதற்கும்
வந்தங் கிருப்பாரென வகுத்தாரே ஈசுரரும்
ஆனதால் பெண்ணேழும் அவர்க்கேதா னல்லாது
மான முனியே மற்றெவர்க்கு மாகாதே
என்று நிருபதனும் ஏற்றமுனி யோடுரைக்க
நன்று நன்றென்று நாரதருஞ் சம்மதித்து
மன்னவனே கேளு மாகாளி தன்னிடத்தில்
சொன்னபிள்ளை யேழும் சிறந்திருக்கி றாரெனவே
அந்தமன்ன ரான ஆண்பிள்ளைக ளானோர்க்கு
இந்த முகூர்த்தம் யான்கேட்க வந்தேனென்று
சொல்லமுனி மன்னவனும் சோபித மாய்மகிழ்ந்து
நல்ல முகூர்த்தம் நாளிட்டா னம்மானை
.
விளக்கம்
==========
சிறப்புகளுக்கே சிகரமாகத் திகழும் பத்திர மாகாளியின் பாதுகாப்பில் தெய்வகுலச் சான்றோர் ஏழுபேர் வளர்வார்கள், அவர்கள் ஏழுபேரும், உன்னுடைய பெண் மக்கள் ஏழுபேரையும் திருமணம் செய்வார்கள். அத்துடன் உனக்கு எவ்விதமான ஆபத்தும் நேர்ந்துவிடாதபடி அரணாக இருந்து உலகோர் மெச்சும்படி உன்னைப் பாதுகாத்து, உனக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுகின்றனவோ அவற்றையெல்லாம் அவர்கள் நிறைவேற்றி வைப்பார்கள். அவரகளைக் காலம் கைகூடும்போது உனக்கு அடையாளங் காட்டுகிறேன் என்று, அன்று எனக்கு சிவபெருமான் வாக்குரைத்தார்.
.
அந்த கருணாகரனிட்ட கனிவான கட்டளைப்படியே எனக்கு ஏழு பெண் மக்கள் பிறந்துள்ளார்கள். ஆகவே, என்னுடைய பெண் மக்கள் ஏழுபேரும், ஈசன் வகுத்துரைத்த தெய்வகுலச் சான்றோர்கள் ஏழுபேருக்குத்தான் திருமணம் செய்து வைக்க முடியுமே தவிர, வேறு எவருக்கும் சம்மந்தம் பேசுவது ஏற்புடையதல்ல என்று நாரத மாமுனிவரிடம் நிருபதிராஜன் தெரிவித்தார்.
.
நிருபதிராஜன் சொன்ன இந்தச் செய்தி நாரத மாமுனிவருக்குச் சர்க்கரைப் பந்திலிலே தேன் விருந்து படைப்பது போல் இருந்தது. எனவே, நிருபதிராஜனைப் பார்த்து நாரத மாமுனிவர் சொல்லுகிறார், நல்லது மன்னா ! நான் சொல்ல வந்த செய்தியைக் கேளு. அன்று உன்னிடம் சிவபெருமாள் சொன்ன வார்த்தை இன்று செயல் வடிவம் பெறப்போகிறது. பத்திரமாகாளியின் பாதுகாப்பில் சீரோடும் சிறப்போடும் வளர்ந்து வருகின்ற அந்தத் தெய்வகுலச் சான்றோர்கள் ஏழுபேருக்குமே உன்னுடைய ஏழு பெண் மக்களையும் பெண் கேட்க நான் வந்துள்ளேன் என்றார்.
.
நாரத மாமுனிவரின் நளின உரை கேட்ட நிருபதிராஜனின் நெஞ்சம் குளிர்ந்தது. அன்று, தஞ்சம் புகுந்த தமக்கு அஞ்கேல் என்று அருள்புரிந்த நஞ்சுண்ட நாயகனை நினைத்து வஞ்சகமின்றி நெஞ்சினுள் ஒரு கணம் கொஞ்சினார். மறுகணமே அவர்களின் திருமணத்திற்கு உவகையோடு ஒப்புதல் அளித்தார். முகூர்த்தத்திற்கான நாளையும் குறித்தார்.
.
.
தொடரும்… அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚


