#திருவள்ளூர்
வள்ளுவருக்கு உயிர் கொடுத்தவர்!
ஒவ்வொரு படைப்பின்போதும் நான் புதிதாகப் பிறக்கிறேன். ஒவ்வொரு நொடியும் நான் படைப்புச் சிந்தனையிலேயே இருக்கிறேன்.
இறக்கும்போதும் நான் ஒரு சிசுவாகத்தான் இறப்பேன்’ - இப்படித் தன் படைப்புகள் குறித்து தீர்க்கமாகச் சொன்னவர் ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா.
பள்ளிப் பாடப் புத்தகங்களில், அரசுப் பேருந்துகளில், அரசு அலுவலகங்களில், நீதிமன்றங்களில்...
என பல இடங்களிலும், நாம் பார்த்துப் பழகிய மார்பு வரை நீண்ட வெண்தாடியோடு, ஒரு கையில் எழுத்தாணியையும், மறு கையில் பனை ஓலையையும் பிடித்தபடி அமர்ந்திருக்கும் திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்தவர் இவர்தான்.
அதுவரை உருவம் இல்லாத திருவள்ளுவருக்கு 1959-ம் ஆண்டு தன் தூரிகையால் உயிர் கொடுத்தவர்.
அந்தத் திருவள்ளுவர் ஓவியம், தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பிரமாண்ட விழா நடத்தி 1964-ம் ஆண்டு அப்போதைய இந்திய ஜனாதிபதி ஜாகீர் உசேனால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் திறந்துவைக்கப்பட்டது.
அந்த ஓவியம் மட்டும் அல்ல... நின்ற நிலையில் திருவள்ளுவர், தமிழ்த்தாய், அறிஞர் அண்ணா... என இவர் தீட்டியிருக்கும் சில அரிய ஓவியங்கள் மீது இதுவரை ஒரு புகைப்பட வெளிச்சம்கூட விழுந்தது இல்லை.
அந்த ஓவியங்களை, தன் வாழ்நாள் பொக்கிஷங்களாகப் பாதுகாத்துவருகிறார் வேணுகோபால் சர்மாவின் மகன் ஸ்ரீராம் சர்மா. அவற்றை விகடனுக்காக மட்டும் பிரத்யேகமாக, முதல்முறையாக வெளி உலகுக்குக் காட்டினார்.
இவர் யுனெஸ்கோ விருது பெற்ற குறும்பட இயக்குநர்.


