வரலாற்றில் இன்று செப்டம்பர் 28
1889 - ஃபிரான்சில் நடைபெற்ற, எடைகளுக்கும், அளவீடுகளுக்குமான பொது மாநாட்டில், மீட்டர், கிலோகிராம் ஆகியவற்றின் அளவுகளும், இவற்றை நிர்ணயிக்கப் பயன்படுத்தப்பட்ட சமன்பாடுகளுக்காக, ஹைட்ரஜன் வெப்பமானி செண்ட்டிகிரேட் அளவையும் உருவாக்கப்பட்ட நாள்
இவற்றிற்கான மூல முன்மாதிரிகள் (ப்ரோட்டோடைப்), பிளாட்டினம்-இரிடியத்தால் உருவாக்கப்பட்டதுடன், அவற்றின் நகல்கள் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
1668இலேயே ஜான் வில்க்கின்ஸ் என்ற ஆங்கிலேயே மெய்யிலாளர், பதின்ம அடிப்படையிலான நீள அளவையை முன்மொழிந்திருந்தார். ஃப்ரெஞ்சுப் புரட்சிக்குப்பின், அறிவியல் முன்னேற்றங்களின் கணக்கீடுகளுக்கு உதவியாக இல்லாத பழைய அளவீடுகளை மாறற விரும்பிய ஃப்ரெஞ்சு அறிவியல் கழகம் ஓர் ஆணையத்தை அமைத்தது.
இந்த ஆணையமே 1791இல் பதின்ம அடிப்படையிலான நீள அளவையையும், மீட்டர் என்ற சொல்லையும் கொண்டுவந்தது. கிரேக்க மொழியில் அளவிடுதல், எண்ணுதல், ஒப்பிடுதல் என்ற பொருள்தரும் வினைச் சொல்லான மீட்ரியோ, அளவீடு என்ற பொருள்தரும் பெயர்ச்சொல்லான மீட்ரான் ஆகியவற்றிலிருந்து இந்த மீட்டர் வந்தது.
இதற்கான அளவு பலவாறு நிர்ணயிக்கப்பட்டு, பொதுத்தன்மை இல்லாமலிருந்த நிலையில்தான், 1875 மே 20 அன்று 17 நாடுகள் கையெழுத்திட்ட மீட்டர் ஒப்பந்தத்தின்படி, இந்த முதல் மாநாடு இவற்றுக்கான பொது அளவை நிர்ணயித்தது.
இந்த மாநாடு நான்காண்டுகளுக்கு ஒருமுறை கூடி பல்வேறு அளவைகளையும் நிர்ணயம் செய்கிறது. எடைகளுக்கும், அளவீடுகளுக்குமான பன்னாட்டு அமைப்பு, இதற்கான குழுவின்மூலம் இதனை நடைமுறைப்படுத்துகிறது. மூன்றாவது (1901) மாநாட்டில் லிட்டர், நான்காவது (1907) மாநாட்டில் காரட், ஒன்பதாவது (1948) மாநாட்டில் ஆம்பியர், வாட் முதலான அளவைகள் வரையறுக்கப்பட்டன.
1948 மாநாட்டில்தான் வெப்ப அளவைக்கு பாகை செல்சியஸ் என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. மீட்டர், கிலோகிராம், நொடி ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட இது எம்கேஎஸ் முறை என்றழைக்கப்படுகிறது.
இதை அடிப்படையாகக் கொண்டு, 1960இல் நடைபெற்ற 11ஆவது மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அலகுகளுக்கான பன்னாட்டு (எஸ்ஐ) முறையை, அமெரிக்கா, லைபீரியா, மியான்மர் தவிர மற்ற அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டு பின்பற்றுகின்றன.
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்