தென்மேற்கு வங்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று புயலாக மாறி உள்ளது. இந்த புயலுக்கு " டிட்வா" என்று பெயரிடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த டிட்வா புயல் தென்மேற்கு வங்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதி வழியாக வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நவம்பர் 30ம் தேதி அன்று அதிகாலைக்குள் வட தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கரையை வழியாக கடக்கும் என கூறப்பட்டுள்ளது.
'டிட்வா' புயல் இலங்கையை புரட்டிப்போட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக இலங்கையில் உள்ள பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. திடீரென பெய்த கனமழையால் தீவு தேசமான இலங்கை வெள்ளத்தில் மிதக்கிறது. இன்ற காலை நிலவரப்படி மொத்தம் 56 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பல ஆயிரம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடி வருகின்றனர்.
குறிப்பாக இல்ஙகையில் இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் 20 மாவட்டங்கள் மழை வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 43 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மறைமுகமாக இன்னும் பல ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு கடற்கரை பகுதிகளாக உள்ள அம்பாறை, மட்டக்களப்பு (Batticaloa), திரிகோணமலை, மத்திய மாகாணமத்தின் சுற்றுலா தலங்களாக உள்ள கண்டி, நுவரெலியா, மாத்தறை, ஊவா மாகாணத்தின் பதுளை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மலையக தமிழர்கள் வசிக்கும் டீ மற்றும் ரப்பர் எஸ்டேட் பகுதிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு பல இடங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பலரும் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். தற்போது மீட்கப்படும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் இலங்கை அரசு நம் நாட்டிடம் உதவி கோரியுள்ளது. மீட்பு மற்றும் நிவாரண பணிக்கு உதவி செய்யும்படி கூறி கோரிக்கை வைத்துள்ளது. இதனை ஏற்றுள்ள மத்திய அரசு இலங்கைக்கு நம் நாட்டின் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கும் போர்க்கப்பலை அனுப்பி உள்ளது. அந்த போர்க்கப்பலில் நிவாரண பணிகளுக்கு தேவையான ஹெலிகாப்டர்களும் சென்றுள்ளன. இந்த ஹெலிகாப்டர்களை இலங்கையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதுதொடர்பாக இலங்கையின் பாதுகாப்பு துறையின் விமானப்படையின் துணை மார்ஷல் சம்பத் துயகோந்தா கூறுகையில, ''டிட்வா புயல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் மீட்பு பணி மற்றும் நிவாரண பணிகளை விரைவுப்படுத்துவதற்கு உதவி செய்யும்படி இந்தியாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி இந்தியாவின் விமானம் தாங்கும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் உதவி செய்ய உள்ளது'' என்றார்.
முன்னதாக இலங்கையில் கடற்படையின் 75 வது ஆண்டு விழாவின் ஒருபகுதியாக கடற்படையின் மதிப்பாய்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பல நாடுகளின் போர்க்கப்பல்கள் பங்கேற்றுள்ளன. நம் நாட்டில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கும் பேர்க்கப்பல் மற்றும் ஐஎன்எஸ் உதயகிரி போர்க்கப்பல் உள்ளிட்டவை இலங்கைக்கு கடந்த 26ம் தேதி சென்றன. இந்நிலையில் தான் தற்போது ஐஎன்எஸ் விக்ராந்த் இலங்கையில் மழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணியை தொடங்கி உள்ளது. #📢 நவம்பர் 28 முக்கிய தகவல்🤗 #இலங்கை செய்திகள்


