கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை 2ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 10.11.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
துவாபர யுகம் தொடர்ச்சி
===========================
வானமது பூமியிலே மடமடென வீழாமல்
தானவனே உன்விரலால் தாங்கிவைத்த பெம்மானே
வாரி வரம்பைவிட்டு வையகத்திற் செல்லாமல்
காரியமாய்ப் பள்ளி கடலில் துயின்றோனே
மானம் வரம்பு மகிமைகெட்டுப் போகாமல்
ஊன மில்லாதே உறும்பொருளாய் நின்றோனே
சீவனுள்ள செந்துகட்குத் தினந்தோறு மேபொசிப்புத்
தாவமுட னீயுகின்ற தர்மத் திறவோனே
.
விளக்கம்
=========
வானத்தில் மேக மோதல்களால் உண்டாகும் இடி, மின்னல் மற்றும் கிரக மாற்றத்தால் ஏற்படும் இயற்கைச் சீற்றங்களால் மண்ணுலகம் மாய்ந்து போகாமல் இருப்பதற்காக ஆகாயத்தை உன் ஓர் விரலால் தாங்கிக் கொண்டிருக்கும் தயாபரனே ! கடல் தன்னுடைய எல்லையைத் தாண்டி நாட்டுக்குள் புகுந்துவிடாமல் தடுப்பதற்காகக் கடலிலேயே பள்ளிக் கொண்டு உலகப் பரிபாலனம் செய்யும் பரம்பொருளே !
.
மான வரம்பு மகிமை கெட்டுப் போகாமல் எவ்வித குறைபாடுமின்றி மேன்மைக்கு மேன்மை அருளுகின்ற மேலோனே! உயிரினங்களுக்கெல்லாம் அன்றாடம் ஆவலோடு உணவளிக்கும் தர்மத்திறவோனே !
.
.
அகிலம்
========
வலியோ ரெளியோர்க்கும் மண்ணூருஞ் செந்துகட்கும்
கலிதீர ஞாயம் கண்டுரைக்கும் பெம்மானே
சிவசெந்துக் கெல்லாம் சீவனுமாய் நின்றோனே
பாவமும் புண்ணியமாய்ப் பாராகி நின்றோனே
கண்ணாகி மூக்குக் கருணா கரராகி
மண்ணாகி வேத மறையாகி நின்றோனே
சாத்திரமும் நீயாய் சந்திரனும் நீயாகிச்
சூத்திரமும் நீயாய் சுழியாகி நின்றோனே
நட்சேத்தி ரமாகி நாட்கிரகம் நீயாகி
இச்சேத்தி ரமாய் இருக்குகின்ற பெம்மானே
மெய்யனுக்கு மெய்யாய் மேவி யிருப்போனே
பொய்யனுக்குப் பொய்யாய்ப் பொருந்தி யிருப்போனே
இமசூட் சமாகி ஏகம் நிறைந்தோனே
நமசூட் சமான நாரா யணப்பொருளே
.
விளக்கம்
=========
வலியோர்க்கும், எளியோர்க்கும் மண்ணிலே உர்ந்து திரியும் அனைத்து உயிரினங்களுக்கும், கலிமாயையை விட்டகலுவதற்கான வழிமுறைகளை வகுத்து வைத்துள்ள வள்ளலே ! உயிரினங்களுக்கு எல்லாம் உயிரானவனே, பாவ புண்ணியங்களாகவும் பரந்த உலகமாகவும் மிளிர்வோனே, உலகிலுள்ள ஒவ்வொரு சீவனுக்கும் உலகைப் பார்க்கின்ற ஒளியாகவும், சுவாசிக்கின்ற காற்றாகவும், கொடுக்கின்ற கரமாகவும், வாழுகின்ற பூமியாகவும், வரையறுத்த வேதங்களாகவும் விளங்குகின்ற நாயகனே !
.
சகல சாஸ்திரங்களும் நீயாகி, சந்திரனும் நீயாகி, சூத்திரமான இரகசியமும் நீயாகி அந்த இரகசியத்தினுள்ளே கபடமும் நீயாகி நட்சத்திரம் முதலான நாட்களும் நீயாகி, எந்த இடமானாலும் ஏகுகின்ற பெம்மானே ! மெய்யனுக்கு மெய்ப்பொருளாய் அவனோடு சேர்ந்தே இருப்போனே ! பொய்யுரைப்போனிடமும் பொய்யாகப் பொருந்தி இருக்கும் பொற்பதமே ! கண்ணிமைக்கும் காலத்துள் கனகோடி நுணுக்கச் செயல்களை ஏகமெங்கும் செய்து கொண்டிருக்கும் இறையோனே ! வணக்கத்திற்குரிய நுண்ணியனான பராபரப் பரம் பொருளே !!
.
.
அகிலம்
=======
கல்வித் தமிழாய் கனகப் பொருளாகிச்
செல்வித் திதுவாய்ச் செவ்வாகி நின்றோனே
அண்ட பிண்டமாகி அநேகமாய் நின்றோனே
கண்ட இடமும் கண்ணுக்குள் ளானோனே
ஈசர் கொடுத்த ஏதுவர மானாலும்
வேசமிட்டு வெல்ல மிகுபொருளாய் நின்றோனே
நடக்க இருக்க நடத்துவதும் நீயல்லவோ
திடக்க மயக்கம் செய்வதும் நீயல்லவோ
ஆரு மொருவர் அளவிடக் கூடாமல்
மேரு போலாகி விண்வளர்ந்து நிற்போனே
எண்ணத் தொலையாத ஏது சொரூபமதும்
கண்ணிமைக்கு முன்னே கனகோடி செய்வோனே
மூவரா லுன்சொரூபம் உள்ளறியக் கூடாது
தேவரா லுந்தெரியாத் திருவுருவங் கொள்வோனே
ஆயனே யெங்கள் ஆதிநா ராயணரே
மாயனே கஞ்சன் வலிமைதனை மாற்றுமையா
.
விளக்கம்
=========
செல்வச் செழிப்பும் எல்லாவகைச் சிறப்புமாகி செம்மையின் நாயகமாய் சீர்பெற்ற பெம்மானே ! கற்போர்க்கு கல்வியும் நீயாகி கருத்துக்கினிய கன்னித் தமிழாக உலகிற்கே உன்னதமாய் உயர்ந்து நிற்கும் உடையோனே ! ஆகாயம் முதல் அனைத்துப் பொருளாகி அனேகமாய் இருக்கின்ற ஆதிப்பொருளே ! கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம் கண்ணாகயிருந்து காட்சி தருவோனே !
.
அரனாகிய ஈசன், அரக்கர்களாகிய நீசர்களுக்கு எத்தகைய வலிமை பொருந்திய வரத்தைக் கொடுத்தாலும், அந்த வரம் பெற்ற அரக்கர்களுக்கு நிகரான பலத்தில் அவதாரமெடுத்து துஷ்ட நிக்கிரகம் செய்து தொல்லுலகின் துன்பம் துடைப்போனே ! இந்த உலகத்தை இயங்கச் செய்வதும் இயங்காமல் ஆக்குவதும் உன் செயலாயிற்றே !
.
அச்சத்தால் அதிர்ச்சியுறச் செய்வதும், அறிவை மயக்குவதும் நீயல்லவா ! எவர் ஒருவராலும் அளவிடமுடியாத பெரியதோர் மலைபோல் வானளாவி நின்றோனே ! கண்ணிமைக்கும் நேரத்துள் எண்ணிலடங்காத சொரூபங்களாகக் காட்சியளிப்போனே ! சிவன், விஷ்ணு, பிரம்மாவாகிய மும்மூர்த்திகளாலும் இயல்பான உன் சொரூப சூட்சுமத்தை அறிய முடியாத அளவிலான பரம்பிரம்மமே ! முப்பது முக்கோடி தேவர்களாலும் இது தான் உன் திருஉருவம் என்று தெரிந்துணர முடியாத நிலையிலான திருஉள்ளமே ! உலகத்திற்கெல்லாம் மேய்ப்பானாகிய எங்கள் மெய்ப்பொருளே ! மகிமைக்கு மகிமையான மாயாதி சூட்சனே ! எங்களுடைய சஞ்சலத்தைப் போக்க கம்சனால் ஏற்படும் இம்சைகளை மாற்றும் அய்யா சரணம் !
.
.
தொடரும்… அய்யா உண்டு. #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008}


