சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளை நோக்கி நகர்ந்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், "தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் (நவ. 22) ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதுவும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழகம் நோக்கி வரக்கூடும் என்பதால், மழையின் தீவிரம் அதிகரிக்கும்" என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, அடுத்தடுத்த நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நாளை நவம்பர் 21 அன்று தமிழகத்தின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் நவம்பர் 22 கனமழையின் தாக்கம் மேலும் சில மாவட்டங்களுக்கு விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவை கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி
நவம்பர் 23 தொடர்ந்து மூன்றாவது நாளாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி கனமழை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் வானிலை தொடர்பான அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனித்து, பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். #☔🌦️தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு ☔ #இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு #🔴இன்றைய முக்கிய செய்திகள்


