#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று டிசம்பர் 3
1992 - 'மெர்ரி கிறிஸ்துமஸ்' என்ற, உலகின் முதல் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ் அல்லது டெக்ஸ்ட் மெசேஜ்), இங்கிலாந்தில் ஒரு கணினியிலிருந்து, வோடஃபோன் கைப்பேசி ஒன்றுக்கு அனுப்பப்பட்ட நாள் டிசம்பர் 3.
தந்திதான் முதல் எழுத்துமூலமான (டெக்ஸ்ட்) செய்தி முறையாகும். தொலைபேசி வந்தபின், எழுத்துமூலமான செய்திகளை அனுப்ப, 1933இல் தொலைஅச்சு (டெலக்ஸ் - டெலிபிரிண்ட்டர்) சேவை உருவானது. இரண்டாம் உலகப்போரின்போது பரவலாகி, 1980களில் தொலைநகல் (ஃபேக்ஸ்) புழக்கத்துக்கு வரும்வரை டெலக்ஸ் அதிகம் பயன்படுத்தப்பட்டது. கையெழுத்துகள், படங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அனுப்ப உதவிய தொலைநகல், டெலக்சை மறையச்செய்தது. எழுத்துச் செய்திகளைப்பெற பேஜர் 1949இல் உருவாக்கப்பட்டு, பின்னர் செய்திகளைப் பெறவும் அனுப்பவும் வசதியுள்ள பேஜர்கள் உருவாயின. 1980களில் இவை பரவலாகப் புழக்கத்திலிருந்தன. 1973இல் கையில் எடுத்துச்செல்லத்தக்க தொலைபேசி அறிமுகமாகிவிட்டதைத் தொடர்ந்து, அதில் எழுத்துச் செய்திகளையும் தரும் முயற்சி 1980களில் தொடங்கியது. 1983இல் அஞ்சல், தொலைத்தொடர்பு நிர்வாகங்களின் ஐரோப்பிய மாநாடு, ஐரோப்பாவுக்கான கம்பியில்லாத் தொலைபேசித் தரநிலைகளை நிர்ணயிக்க ஜிஎஸ்எம் குழுவை அமைத்தது. இதில் குரல் அல்லாத சேவைகளுக்கான குழுவின் தலைவராக இருந்த ஃப்ரீட்ஹெல்ம் ஹில்ப்ராண்ட், ஏராளமான சிறிய செய்திகளை தட்டச்சு எந்திரத்தில் அச்சிட்டுப்பார்த்து, ஒரு சிறிய, முழுமையான தகவலை அனுப்ப 160 எழுத்துகள் தேவைப்படும் என்று வரையறுத்தார். முதல் வணிகரீதியான குறுஞ்செய்திச் சேவையை ஃபின்லாந்தின் ரேடியோலிஞ்சா நிறுவனம் 1993இல் தொடங்கியது. குறுஞ்செய்தி பிரபலமடைந்ததைத் தொடர்ந்து, பலருக்கும் ஒரே நேரத்தில் அனுப்பும் சேவையை, 2006இல் ட்விட்டர் அறிமுகப்படுத்தியது. 160 எழுத்துகளில், 20 எழுத்துகளை பயனர் பெயர் முதலான தகவல்களுக்கு ஒதுக்கியதால், 140 எழுத்துகள்கொண்ட செய்திகளை இதில் அனுப்ப முடிந்தது. குழுச் செய்திகளின் வெற்றியைத் தொடர்ந்து, 3ஜி இணையச் சேவையின் வளர்ச்சியைப் பயன்படுத்தி 2009இல் வாட்ஸ்அப் உருவானது. எழுத்துச் செய்திகளை அனுப்புவதற்காகத் தொடங்கிய முயற்சியே, எல்லாவிதமான கோப்புகளையும் செய்திச் செயலிகள்மூலம் கைப்பேசிகளுக்குள் பரிமாறிக்கொள்ளும் வளர்ச்சியைத் தொடங்கிவைத்தது!
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*


