கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை மூன்றாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 20.11.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
துரியா தனாதி செலுத்துமஸ்தி னாபுரத்தில்
பரியொட் டகமும் பலிமிருக மானதுவும்
பசியால் தகையால் பட்சி பறவைகளும்
விசியாய்க் குருநகரில் மேவித்தகை யாறிவரும்
அத்தினா புரத்தில் அரதேசி யாவரெல்லாம்
பத்தியா யுள்ள பஞ்சவர்க ளாண்டிருக்கும்
குருநாடு தன்னில் குழாங்கொண் டிருந்தனராம்
திருநாட்டுக் கொவ்வும் சிறந்த குருநாடு
ஒருநாடு மந்தக் குருநாட்டுக் கொவ்வாது
.
விளக்கம்
=========
துரியோதனின் ஆட்சி செலுத்திக்கொண்டிருக்கும் அஸ்தினாபுரியிலுள்ள குதிரைகளும், ஒட்டகங்களும், ஏனைய மிருகங்களும் தனக்குப் பசியோ, தாகமோ ஏற்பட்டால் பஞ்சபாண்டவர்கள் ஆண்டுகொண்டிருக்கும் குருநாட்டை நோக்கி விரைந்து சென்று தம் பசியையும், தாகத்தையும் தணித்துக்கொள்ளும். அதுபோல் பறவை இனமும், தம் பசியையும் தாகத்தையும் தீர்க்கக் குரு நாட்டையே உறைவிடமாகக் கொண்டது.
.
அதுமட்டுமல்ல, அஸ்தினாபுரத்தையே தம் பூர்வீக தேசமாகக் கொண்ட மக்களெல்லாம் அங்கு வாழ வழியற்றவர்களாய் பரிதவிக்கும் அளவில் அஸ்தினாபுரம் பஞ்சத்தாலும் இயற்கையின் சீற்றத்தாலும் ஈடழிந்து போய்விட்டது. அதே நேரம் பக்தியுள்ள பஞ்சபாண்டவர்கள் உருவாக்கி உவகையோடு ஆட்சிபுரிந்து கொண்டிருக்கும் இந்திர பிரஸ்தம் எனப்படும் குருநாடோ, வற்றாத வளத்தோடும் குன்றாத செல்வத்தோடும் குறுநகைபுரிந்து குதூகுலமாய் மிளிர்ந்தது.
.
எனவே அஸ்தினாபுரவாசிகளெல்லாம் குருநாட்டிற்குக் கூட்டங் கூட்டமாக குடிபெயர்ந்தனர். ஆகவே, சில நாளில் குருநாடு லட்சுமி கடாட்சம் பொருந்திய திருநாடாகத் திக்கெட்டும் போற்றத் தக்கதாயிற்று. ஒரு நாடும் இந்தக் குருநாட்டிற்கு இணையாகாது என்று நல்லோர்களெல்லாம் நவின்றனர்.
.
.
அகிலம்
=======
குருநாட்டின் பெருமை
======================
பருநாடு பத்தியுள்ள பஞ்சவர்கள் தந்நாடு
தேவரும் வானவரும் தெய்வத் திருமாலும்
மூவரும் நன்றாய் உகந்த குருநாடு
ஆளியொடு சிங்கம் ஆனையிறாஞ் சிப்புள்ளும்
வேளிசமா யுள்ள வெகுவைந் தலையரவும்
வெள்ளானை வெள்ளை மிகுசாரை யானதுவும்
துள்ளாடி நித்தம் துலங்கிவரும் நன்னாடு
அந்நாடு நாடு அரன்நாட்டுக் கீடாகும்
.
விளக்கம்
=========
பெருமையும், உயர்வும் பொருந்திய பெரியதோர் தேசமாக விளங்கும் பஞ்சபாண்டவர்களின் இத்தேசம் வானுலகத் தேவர்களுக்கும் சிவன், விஷ்ணு, பிரம்மாவாகிய மும்மூர்த்திகளுக்கும் மனமகிழ்ச்சியைக் கொடுக்கும் மகிமை பொருந்திய தேசம்.
.
சிறப்பிற்கே சிறப்பூட்டும் இந்தச் செம்மை மிகு குருநாட்டில் ஆளியும், சிங்கமும், யானையும், இறாஞ்சி முதலான பறவைகளும் ஐந்து தலை நாகமும், வெள்ளை நிறமுடைய சாரைப்பாம்பும் மற்றும் வெண்ணிறமுடைய யானை முதலான மிருகங்களும், ஒன்றை ஒன்று அரவணைத்து துள்ளிக் குதித்துத் தினந்தோறும் விளையாடும். இத்தகைய உயிரினங்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கும் இந்தக் குருநாடு ஈசனின் இருப்பிடமான கைலயங்கிரிக்குச் சமமாகச் சமைந்திருந்தது.
.
.
அகிலம்
=======
பொன்னாடு நாடு புத்தியுள்ளோர் தந்நாடு
அரனருளைப் பெற்றிருக்கும் ஐவருட நன்னாடு
இரவலர்க்கு ஈயும் ஏற்றதர்மர் தன்னாடு
மாயனருள் பெற்ற மன்னவர்கள் தந்நாடு
தாய்நாடு ஆனத் தமிழ்க்குரு நன்னாட்டில்
மெய்யில்லா மன்னனுக்கு மேதினியில் பேர்பாதி
பொய்யில்லாத் தர்மருக்குப் பேர்பாதி யாகவேதான்
ஆண்டார் சிலநாள் ஆளுக்கோர் பங்காகத்
தாண்டவ ராயர் தண்மையா லம்மானை
.
விளக்கம்
=========
பொன்னகரமோ என்று எண்ணுகின்ற அளவில் பொலிவோடு, காட்சியளிக்கும் அந்த அற்புதமான குருநாடு, புத்தி வலிமையுள்ளோரால் புனைந்தெடுத்த நன்னாடு.
.
பஞ்சமுகமுடைய பரமனருள் பெற்றுப் பஞ்சவர்கள் ஆளுகின்ற பழுதில்லாப் பொன்னாடு.
.
இரப்போர்க்குத் தர்மம் இல்லையென்று சொல்லாமல் எப்போதும் இன்முகமாய் ஈயுகின்ற நன்னாடு.
.
மாயன் மகாவிஷ்ணுவின் மனதுக்கு மகிழ்ச்சியூட்டும் மன்னர்களான மாண்புடையவர்களின் மனதிற்கினிய நாடு.
.
உலகத்தில் உயிரினங்கள் முதன் முதலாய் உற்பத்தியாவதற்கு உடலான தாய்போல் உருவெடுத்த தாய் நாடாம் தமிழ் நாட்டு மக்கள் பலர் தம் நாடாய்ப் பாவித்த தங்கத் திருநாடு.
.
பஞ்சபாண்டவர்களின் நெஞ்சுறுதியாலும், பஞ்சகமற்ற உழைப்பாலும் உருவான இந்தக் குருநாடு கூட விதியின் சதியால் இரு கூறாக்கப்பட்டது.
.
அதில் ஒரு பாதியை படுபாதகனான துரியோதனனும், மறுபாதியைப் பஞ்சபாண்டவர்களும் தாண்டவ சம்காரனாகிய சிவபெருமானின் கருணையினால் சில காலம் ஆண்டனர்.
.
.
அகிலம்
========
பாண்டவர் வனவாசம்
=======================
துரியோதனின் துரோகச் செயல்
================================
இப்படியே ஆண்டு இருக்குமந்த நாளையிலே
முப்படியே விட்டகுறை முடிவாகும் நாளையிலே
வணங்கா முடியுடைய மன்னன்துரி யோதனனும்
இணங்காமல் பிணங்கி ஏதுசெய்தா னம்மானை
தலைவீதம் பங்கு தான்வையா வண்ணமுந்ததான்
நிலைபகிர்ந்து விட்டோமே நினைவுசற்று மில்லாமல்
இனியவன் பூமிதனை யாம்பறித்து ஐவரையும்
தனியே வனத்தில் தானனுப்பி இராச்சயத்தை
அடக்கி யரசாள அவன்நினைத்து மாபாபி
உடக்கிச் சூதுபொருத்தி ஒட்டிவைத்தான் ஐவரையும்
பாவிதுரி யோதனனும் பஞ்சவரைத் தான்விரட்டி
சோவிதமாய் நாட்டைச் சுற்றியர சாண்டிருந்தான்
வனவாசந் தன்னில் வந்திருந் தைபேரும்
இனமா னதுபோல் இருந்தார் குகையதிலே
.
விளக்கம்
=========
இப்படிக் காடாகக் கிடந்த பகுதியை நாடாகப் பெற்ற பாண்டவர்கள். தம்முடைய புத்திக் கூர்மையாலும், கடின உழைப்பாலும், விண்ணவர்களே வியக்கும் வகையில் பொன் விளையும் பூமியாக்கிப் புனிதமாக ஆண்டு கொண்டிருப்பதைக் கண்ணுற்ற கயவனாகிய துரியோதனன் அதிலும் பாதியை அபகரித்துக் கொண்டான்.
.
பங்காளிதானே பகை வேண்டாமென்று பாண்டவர்களும் கொடுத்துவிட்டார்கள். என்றாலும், இரக்கமற்ற துரியோதனன், யாருடைய உபதேசத்தையும் உட்கொள்ளாத அந்த கொடுங்கோல் அரசன் முன்விதிப் பயனால் முடிவு காலம் அடுத்துவிட்டதை அறியாமல் பாண்டவர்கள் மீது பகை கொண்டான்.
.
அஸ்தினாபுரியையும், இந்திர பிரஸ்தம் எனப்படும் குருநாட்டையும் ஒன்றாகச் சேர்த்து அவன் ஒருவனே ஆளவேண்டுமென ஆசை கொண்டான். அனைத்தையும் சம பாகமாகக் கொடுத்தது தவறு எனக் கொக்கரித்தான். தமக்கும் தன்னுடன் பிறந்தோருக்கும் நூற்றி ஒரு பங்கும், பாண்டவர்கள் ஐந்துபேர் ஆகையால் அவர்களுக்கு ஐந்து பங்கும் அதாவது மொத்த நாட்டையும் நூற்றி ஆறு பங்கு வைத்து அந்த நூற்றி ஆறில் ஐந்து பாகத்தைப் பாண்டவர்களுக்குக் கொடுத்துவிட்டு நூற்றி ஒரு பாகத்தையும் நாம் எடுத்திருக்கலாமே என்று எண்ணி எண்ணி ஏங்கினான். தவறிழைத்து விட்டோமே என்று தடுமாறினான். பேராசையால் பேதலித்தான்.
.
அந்தப் பேராசையின் விளைவால் பெரும்பழியைச் சுமக்கத் துணிந்தான். முடிவு சூதுப் போர் நடத்த சூசகமாய்த் திட்டமிட்டான். அந்நாளில் பகடை விளையாடுவது மன்னர் மரபினருக்கு வித்தைதானே தவிர அது வினையான குற்றமில்லை. எனவே பாரம்பரிய விளையாட்டிற்குப் பாண்டவர்களும் ஒத்துக் கொண்டார்கள்.
.
இந்நிலை துரியோதனனைப் பழிவாங்கத் தருணம் பார்த்துக் காத்திருந்த சகுனிக்குச் சந்தோசமாக இருந்தது. துரியோதனனுக்குத் துணைபுரிவதுபோல் நடித்த சகுனியோ பகடையாடுவதில் தனித்திறமை பெற்றவன். எனவே, சகுனி சார்ந்திருந்த துரியோதனன் பகடை விளையாட்டில் வெற்றி பெற்றான்.
.
பாண்டவர்களோ, தாம் ஆண்டுகொண்டிருந்த குரு நாட்டடையும், தம்மையும், தம் மணைவி திரௌபதியையும் கூடத் தோற்றுவிட்டனர். துரியோதனனோ தேசமனைத்தையும் தாமே ஆளவேண்டுமென்ற தன் ஆசை நிறைவேறியதால் நிலையழிந்து நின்றான். திரௌபதியை துகிலுரியச் செய்தான். முடிவு பாராண்ட பாண்டவர்கள் கானகம் சென்றனர். எனினும் பாண்டவர்களும் பாஞ்சாலியும் ஒருமித்த கருத்தவராய் ஒற்றுமையாய் இருந்தார்கள்.
.
.
தொடரும்… அய்யா உண்டு. #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008}


