ShareChat
click to see wallet page
search
#🙏ஆன்மீகம் #பத்திஸ்டேட்ஸ் #நவராத்ரி ஸ்பெஷல் #நவராத்ரி பூஜை நாள் - வாக்கில் வல்லமை தருவாள் வாணி!*🌹 காசிக்கு அருகே உள்ள மாகிஷ்மதி நகரில் மண்டனமிஸ்ரர் என்ற ஒரு பண்டிதர் இருந்தார். அவர் கல்வியில் கரை கண்டவர் என்று புகழப்பட்டவர். அவரை யாராலுமே வாதிட்டு வெல்ல முடியாது என்ற பெருமை கொண்டிருந்தார். குமரிலபட்டர் என்ற துறவி, தன்னுடைய ஆயுள் முடியும் கட்டத்தில், தன் மீது பெரிதும் அக்கறை கொண்டிருந்த ஆதிசங்கரரிடம், மண்டனமிஸ்ரரை வாதத்தால் வீழ்த்தும்படி கேட்டுக் கொண்டார். இதன் மூலம், சங்கரரின் ஞானம் உலகெங்கும் பரவ வேண்டும் என்பதில் குமரிலபட்டர் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார். அதன்படி மாகிஷ்மதி நகரடைந்து மண்டலமிஸ்ரரை சந்தித்து தான் அவருடன் வாதிட வந்திருப்பதாகத் தெரிவித்தார் சங்கரர். அவரும் சம்மதித்தார். மண்டனமிஸ்ரரின் மனைவி சரஸவாணி நடுவராகப் பொறுப்பேற்றார். போட்டியாளர் இருவரும் மாலை அணிந்து கொள்வது என்றும் யாருடைய மாலை வாடுகிறதோ அவர் தோற்றவர் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதோடு மண்டனமிஸ்ரர் தோற்றாரானால் அவர் இல்லறம் துறந்து துறவறம் மேற்கொள்ள வேண்டும்; அதேபோல சங்கரர் தோற்றால் அவர் துறவறம் துறந்து இல்லறம் மேற்கொள்ள வேண்டும் என்று விதி செய்யப்பட்டது. போட்டி ஆரம்பித்தது. சில மணி நேரத்திலேயே மண்டனமிஸ்ரர் திணறினார். தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் உடலில் உஷ்ணம் அதிகரிக்க, அவர் சூடியிருந்த மாலை வாடியது. அதைக் கண்டு திடுக்கிட்ட சரஸவாணி, ‘என் கணவரும் நானும் ஒன்றே. அதனால் என்னையும் வாதத்தில் வென்றால்தான் நீங்கள் வெற்றியாளராவீர்கள்,‘ என்று சங்கரரிடம் புது நிபந்தனையைச் சொன்னாள். அதற்கு சம்மதித்தார் சங்கரர். வேதம், வேதாந்தம், சாஸ்திரம், சம்பிரதாயம், இதிகாசம், புராணம், கணிதம், ஜோதிடம் என்று பல துறைகளில் கேள்விகளும் பதில்களும் முட்டி மோதின... ஒன்றல்ல, இரண்டல்ல 15 நாட்களுக்கு நீண்டது போட்டி. இத்தருணத்தில் தன்னிடம் வாதிடுவது சரஸவாணி அல்ல, அந்த சரஸ்வதியேதான் என்று ஊகித்துக் கொண்டார் சங்கரர். ஒரு கட்டத்தில் துறவியிடம் கேட்கக்கூடாத இல்லறம் பற்றிய கேள்வி ஒன்றை முன்வைத்தாள் சரஸவாணி. சங்கரர் தயங்கினார். அவரால் இல்லறத்தில் ஈடுபடாமலேயே மிகச்சரியாக சிந்தித்து பதில் அளிக்க முடியும். ஆனால் பிறர் தன்னுடைய துறவறத்தை சந்தேகப்படுவர் என்பதை உணர்ந்தார். அதனால் தனக்கு ஒரு மாத கால அவகாசம் கொடுத்தால் அறிந்து வந்து பதிலளிப்பதாகச் சொன்னார். அசல்பதிவேற்றியவருக்கு நன்றி. சரஸவாணி சம்மதிக்க, சங்கரர் தன் சீடர்களுடன் கானகம் சென்றார். அங்கே அமருகன் என்ற மன்னனின் சடலம் கிடப்பதைப் பார்த்து அந்த உடலில் கூடுவிட்டு கூடு பாயும் உத்தியால் உட்புகுந்தார் சங்கரர். அரண்மனைக்குச் சென்றார். அமருகனோ பெண் பித்தன், கேளிக்கைகளும், விருந்தும்தான் அவனுடைய வாடிக்கை. ஆனால் சங்கரரால் அப்படி இருக்க முடியவில்லை. தன் ஆன்மாவின் தூய்மைக்கு பாதிப்பில்லாமல் நடந்து கொண்டார். மன்னரின் இந்த ‘மாற்றம்‘ அனைவரையும் திகைக்க வைத்தது. சில நாட்களுக்குப் பிறகு இதில் ஏதோ மர்மம் இருப்பதை உணர்ந்த ராஜ பிரமுகர்கள், காட்டில் சங்கரர் உடல் கிடப்பதைக் கண்டு அவருடைய கூடுவிட்டு கூடு பாய்ந்த உத்தியைத் தெரிந்து கொண்டார்கள். ஆகவே ‘புதுப்பிக்கப்பட்ட‘ மன்னனால் நாடு செழிக்கும் என்று கருதிய ராஜ பிரதானிகள், சங்கரரின் உடலுக்குத் தீ வைத்தனர். இதைப் பார்த்துப் பதறிய சீடர்கள் ஓடோடிச் சென்று சங்கரரிடம் விவரம் சொல்ல, அவர் பளிச்சென்று மீண்டும் கூடு மாறித் தன் உடலில் புகுந்தார். பிறகு தன் இல்லற அனுபவத்தை சரஸவாணியின் கேள்விக்கான பதிலாகச் சொல்ல, அவள் அதை ஏற்றுக் கொண்டு தன் தோல்வியை ஒப்புக் கொண்டாள். மண்டனமிஸ்ரர் துறவு கொள்ள, அவள் அவரைக் கண்ணீருடன் பிரிந்து, பிரம்மலோகம் சென்றடைந்தாள். இவ்வாறு கல்வியின் மேன்மையைத் தன் பக்தர்கள் மூலமாக நிலைநிறுத்திய சரஸ்வதி தேவியை இன்று மூன்றாவது நாளாக நாம் போற்றி மகிழ்கிறோம். இன்று, அம்பிகை சரஸ்வதியை தாமரை, மரிக்கொழுந்து, துளசி மற்றும் வெள்ளை மலர்களால் அர்ச்சிக்கலாம். பாரதியாரின் சரஸ்வதி துதியைப் பாடி மகிழலாம். சர்க்கரைப் பொங்கல், உளுந்துவடை, வேர்க்கடலை சுண்டல் தயாரித்து நிவேதனம் செய்யலாம். இன்று பாட புத்தகங்கள், தொழிற் கருவிகள், வியாபாரக் கணக்கு நோட்டுகள் ஆகியவற்றை சரஸ்வதி முன் சமர்ப்பித்து இதுவரை நாம் பெற்ற மேன்மைக்கு நன்றி தெரிவிக்கலாம்; இனி தொடர்ந்து அவள் அருள் வேண்டி மனமுருக பிரார்த்திக்கலாம். இந்த ஸ்லோகத்தையும் சொல்லலாம்: பத்மோபவிஷ்டாம் குண்டலினீம் ஸுக்லவர்ணாம் மநோரமாம் ஆதித்ய மண்டலே லீநாம் ப்ரமாமி ஹரிப்ரியாம் பொதுப்பொருள்: தாமரை மலர்மீது வீற்றருளி குண்டலினி சக்தியாகத் திகழ்பவளே, சரஸ்வதி தேவியே நமஸ்காரம். வெண்ணிறமாய் ஒளிவீசும் அழகுடன் விளங்கும் அன்னையே, நமஸ்காரம். சூரிய மண்டலத்தின் நடுவே நாயகமாய் துலங்கும் ஹரிக்குப் பிரியமான சரஸ்வதி தேவியே நமஸ்காரம். கலைவாணியை வழிபட்டு, அறிவாற்றலில் சிறந்து கல்வி, கலை, தொழிலில் மேன்மையடைவோம்.🌹
🙏ஆன்மீகம் - நவராத்திரி ஒன்பதாம் நாள் வாணி நவராத்திரி ஒன்பதாம் நாள் வாணி - ShareChat