ShareChat
click to see wallet page
search
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை மூன்றாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 06.12.2025. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======== பனைமரத்தின் பயன் பற்றிக் கூறுதல் ======================================= உடனே மறையோனும் ஓவியமு ள்ளதென்று தடமேலே நின்று தால மெனவளர்ந்தார் வளர்ந்த அமிர்தமதை மக்களேழு பேர்களுக்கும் பழமமிர்தக் காயோடு பலவகையுந் தானாண்டு அமிர்தமதை நீங்கள் ஆக்கிரகந் தானடக்கிக் குமிர்தமுட னீங்கள் குடித்திருங்கோ வென்றுசொல்லி உங்களுக்குப் பாலமிர்தம் ஊறுமல்லா லித்தாலம் எங்களுக்கு மித்தாலம் இசையாது கண்டீரோ பாலருக்கு இந்தவரம் பரமயுகத் தோர்கொடுத்து ஞாலமுள்ள காளி நாயகியைத் தானழைத்து . விளக்கம் ========== சிவபெருமான் கூறியவற்றைக் கூர்மையாகக் கவனித்த அந்த அந்தணனும், அவனுடைய மனைவியும் அப்போதே பனைமரமாக முளைத்து வளர்ந்தார்கள். அதாவது அந்தணன் அலகுப் பனையாகவும், அந்தணனின் மனைவி பருவப் பனையாகவும் பிறவி செய்யப்பட்டனர். ஆகவேதான், பனை மரத்தில் மட்டும் ஆண்பனை, பெண்பனை என்ற பேதம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். . பின்னர், அங்கிருந்த வானவர்களெல்லாம் அந்த ஏழு குழந்தைகளுக்கும் ஞானபோதனையாக, பாலர்களே ! இந்த பனைமரம் தரும் அமிழ்தத்தையும், பழத்தையும், உண்பதோடு அதிலுள்ள காய், ஓலை, மட்டை, நார் முதலியவற்றையும் பல வகைக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால், பனைமரத்தின் மூலம் கிடைக்கும் சொரபானத்தின் ஆங்காரமான வேகத்தைச் சுண்ணாம்பினால் சற்று குறையச் செய்து பருவத்தில் பருகி மகிழுங்கள். . பனைமரம் உங்களுடைய கைப்பலனால் மட்டுந்தான் பால் அமிழ்தம்தருமே அல்லாமல் உங்களுக்குங்கூட இசைந்து பால் சுரக்காது. என்று அந்த பச்சிளங் குளந்தைகளுக்கு வரமாக ஞான உபதேசம் செய்தனர். அதன்பிறகு அங்கிருந்த புட்டாபுரகாளியை அழைத்தார்கள். . அகிலம் ======== பத்திரத்தாள் பெற்றமக்கள் ============================ மகாவிஷ்ணு, காளியிடம் பாலர்களை ஒப்படைக்கும்போது பெற்ற வாக்குறுதி ============================================================================== பாலரையுங் காளி பண்பாக வாங்குகையில் ஆலமுத முண்ட அச்சுதரு மேதுரைப்பார் அடவு பதினெட்டும் அலங்கார வர்மமதும் கடகரியின் தொழிலும் கந்துகத் தின்தொழிலும் மாவேறுந் தொழிலும் வாள்வீசுந் தொழிலும் பாவேறு பாட்டும் பழமறைநூ லானதுவும் அடவு மேலான அதிகப்பல வித்தைகளும் திடமு மிகவருத்தி சேனா பதியாக்கி எல்லா விதத்தொழிலும் இசைவான ராகமதும் நல்லா வருத்தி நாட்டமுட னேகொடுத்து உயிர்ச்சேதம் வராமல் ஒன்றுபோ லென்மகவை நெய்ச்சீதம் போலே நீவளர்த்துத் தாவெனவே அல்லாம லென்மகவை ஆரொருவ ரானாலும் கொல்லாமல் காக்கக் கூடுமோ வுன்னாலே அன்பான காளி அதற்கேது சொல்லலுற்றாள் என்பாலகர் தனையும் ஈடுசெய்ய யிங்கொருவர் உண்டோகா ணிந்த உலகி லெனக்கெதிரி . விளக்கம் ========== பாலர்களை வாங்குவதற்காகப் பத்திரகாளி மகாவிஷ்ணுவிடம் வந்தாள். அப்போது மகாவிஷ்ணு, பத்திரகாளியைப் பார்த்து, பத்திரகாளி ! நீ, என்னுடைய பாலகர்களை இப்போது பெற்றுக்கொள்வதால் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், தொடுவர்மம் தொண்ணூற்று ஆறும், படுவர்ம் பதினெட்டையும், யானையேற்றம், குதிரையேற்றம், விலங்கின வேட்டை, வான் பயிற்சி, இன்னும் என்னென்ன வித்தைகள் உள்ளனவோ அத்தனையும் கற்றுக் கொடுப்பதோடு, பாட்டு இயற்றும் பாவலராய், பன்னூல் கற்ற பண்டிதராய், வேதங்கள் கற்ற வித்தகராய், மிகுந்த மனபலமும் உடல்பலமும் உள்ளவராய் உருவாக்கி, படைத் தலைவர்களாக அவர்களைப் பவனி வரச் செய்ய வேண்டும். . அது மட்டுமல்ல. அவர்களுக்கு, சங்கீதம் முதலான கலைஞானங்களைக் களவறக் கற்பித்து, இந்த ஏழு பேரிடமும் சரி சமமாய் அன்பு வைத்து, உன்னதாமான குணநலன்களோடு வளர்த்து, என்னுடைய குழந்தைகளை என்னிடம் நீ ஒப்படைக்க வேண்டும். இதுவல்லாமல் இன்னுமொன்று சொல்லுகிறேன். அதையும் நீ கேட்டுக் கொள். . என்னுடைய இந்தப் பிள்ளைகளில் எவர் ஒருவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுவிடக் கூடாது. அப்படி எவர் ஒருவராலும் அவர்களில் ஒருவர் கூட இறந்து போகாமல் பாதுகாக்க உன்னால் முடியுமா? என்று பத்திரகாளியிடம் மகாவிஷ்ணு கேட்டார். . உடனே பத்திரகாளி, என்னுடைய பிள்ளைகளின் உயிரைப் பறிக்கும் வல்லமையுடைய ஒருவன் இந்த வையகத்தில் எனக்கு எதிரியாக இருக்க முடியுமா? என்று மகாவிஷ்ணுவிடம் தன்னுடைய பலத்தில் மட்டுமே நம்பிக்கை வைத்து தைரியமாகத் தெரிவித்தாள். . . அகிலம் ======== என்றேதான் காளி இப்படியே சொல்லியபின் பாலரையுந் தானெடுத்துப் பரமசிவ னாரருளால் கோலமுள்ள மாயன் கொடுத்தாரொரு வார்த்தைசொல்லி சீலமுள்ள காளியென் சித்திரப் பாலருக்கு பாலருக்குப் பங்கமது பற்றாமல் காத்திடுநீ மதலைதனக் கோர்தீங்கு வந்ததே யுண்டானால் குதலையரே வுன்றனக்குக் கொடுஞ்சிறைதான் சிக்குமென்று சொல்லியே காளிகையில் சிறுவரையுந் தான்கொடுத்து . விளக்கம் ========== தமக்கு நிகரான எதிரி எவருமே இவ்வுலகில் இல்லை என்ற பத்திரகாளியின் கூற்றைக் கூர்மையாகக் கவனித்த மகாவிஷ்ணு தம்முடைய பாலகர்கள் ஏழுபேரையும் பரமசிவனாரின் பேரருளை நினைத்துக்கொண்டு பத்திரகாளியிடம் கொடுக்கும்போது, பத்திரகாளியைப் பார்த்துச் சொல்லுகிறார். நிற்குணங்களின் நாயகியாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் பத்திரகாளியே ! அதிசயிக்கத்தக்க நூதனமான சிறப்புகளை அகமே கொண்டுள்ள இந்த ஏழு குழந்தைகளுக்கும், எவ்விதமான இடர்ப்பாடுகளும் ஏற்படாமல் அவர்களைப் பாதுகாத்து வளர்க்க வேண்டியது உன்னுடைய பொறுப்பேயாகும். . என்னுடைய இந்த ஏழு குழந்தைகளின் உயிருக்கும் நீ உத்தரவாதம் தந்து விட்டாய் என்பதை எந்தத் தருணத்திலும் நீ மறந்து விடாதே. . உன்னுடைய தன்னம்பிக்கையையும், வாக்குறுதியையும் நான் திடமாக நம்புகிறேன். அதை நீ கவனமாக் காப்பாற்றிக் கொள். மாறாக, என்னுடைய இந்த ஏழு பிள்ளைகளில் எவருடைய உயிருக்குச் சேதம் நேர்ந்தாலும், சிறுபிள்ளைத்தனமாக வாக்குறுதியளித்த உனக்குக் கடுஞ்சிறைதான் கிடைக்கும் என்று எதிர்கால விதியினை அங்கேயே கட்டளையாகப் பிறப்பித்து, தம்முடைய ஏழு குழந்தைகளையும் பத்திரகாளியின் கையில் மகாவிஷ்ணு ஒப்படைத்தார். . தொடரும்… அய்யா உண்டு. #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர்
Ayya Vaikundar - Dec 1, 2024,22*35 Har Dec 1, 2024,22*35 Har - ShareChat