USA: பேய் அரசாண்டால் பிணம் தின்னும் பாலிசிகள்!
சர்க்கரை & இரத்த அழுத்தம்: விசா மறுப்புக்கு காரணமா?
அமெரிக்காவில் தற்போது சர்க்கரை (Diabetes) மற்றும் இரத்த அழுத்தம் (BP) போன்ற உடல் நலக் குறைபாடுகள் விசா மறுப்புக்கான காரணமாக கருதப்படலாம் என்ற செய்தி வெளிவந்துள்ளது. இது நம்ப முடியாத அளவு பைத்தியக் காரத்தனம்! நோய் பரவல் எதுவும் இல்லாத நிலையை, "ஆபத்து" எனக் கருதுவது அரசியல் அறியாமையா அல்லது நிர்வாக முட்டாள்தனமா? அடுத்ததாக கண் கண்ணாடி போட்டவர்களையும் நரைமுடி உடையவர்களையும் தடை செய்யப் போகிறார்களா?
உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) விலகி நின்ற அமெரிக்கா, உலக சுகாதார விவகாரங்களில் தலையிடும் தகுதி இழந்துவிட்டது. ஆனால் தங்களது தவறை மறைக்க உலகுக்கு தவறாகப் போதிக்கும் பழக்கம் அதற்கு உண்டு. 2020-இல் COVID-19 நெருக்கடியை WHO சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டைச் சொல்லி விலகியது — இது ஒரு சுயநலமிக்க வசதியான காரணம்!
இப்போது அதே நாடு, சர்க்கரை மற்றும் பிபி போன்றவற்றை நோயாகச் சித்தரித்து விசா மறுப்பதென்பது நகைச்சுவையா, இல்லையெனில் அரசியல் பைத்தியமா? உண்மையில், இவை தொற்றுநோய்கள் அல்ல. கையாலோ, காற்றாலோ பரவாது. மன அழுத்தம், உணவு பழக்கம், உடல் இயக்கமின்மை போன்றவையால் ஏற்படும் வாழ்க்கை நிலைகள் மட்டுமே.
அப்படியானால், கேள்வி இதுதான் — அமெரிக்கர்கள் அனைவரும் சர்க்கரையும் பிபியுமின்றி முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார்களா? எண்ணிக்கைகளைப் பார்ப்போம்.
1999–2000 காலகட்டத்தில் அமெரிக்கர்களில் சர்க்கரை நோயின் விகிதம் 9.7% ஆக இருந்தது. 2021–2023 காலத்தில் அது 14.3% ஆக உயர்ந்துள்ளது! 2030க்குள் 54.9 மில்லியன் அமெரிக்கர்கள் சர்க்கரை நோயுடன் வாழ்வார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இரத்த அழுத்தம் இன்று அமெரிக்கர்களில் 48.1% பேருக்கு உள்ளது — அதாவது பாதிக்குப் பாதி ஜனத்தொகை!
இது மிகவும் கவலைக்குரியது, இவ்விரண்டு நிலைகளும் சேர்ந்து காணப்படும் எண்ணிக்கை 1999 முதல் 2018 வரை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. அதாவது, கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் இரண்டும் உடையவர்களாகவே வாழ்கிறார்கள் — அவர்கள் வேலை செய்கிறார்கள், திருமணம் செய்கிறார்கள், வரி செலுத்துகிறார்கள், உலகம் முழுவதும் பயணம் செய்கிறார்கள். அப்படியிருக்க, அதே உடல்நிலை கொண்ட ஒரு வெளிநாட்டு நபரின் விசாவை மறுப்பது எத்தனை பெரிய முரண்பாடு? இரட்டைக் கொள்கை!
நாட்டின் நுழைவு கொள்கை சுகாதார அடிப்படையில் தீர்மானிக்கப்படலாம். ஆனால் அது பகுத்தறிவுடன் இருக்க வேண்டும் — பைத்தியக்காரத்தனத்துடன் அல்ல. சர்க்கரை மற்றும் பிபி போன்றவை இன்றைய மனித வாழ்க்கையின் ஓர் அங்கமே. அவற்றை “தகுதி இல்லாமையின் சின்னம்” எனக் கருதுவது மருத்துவம் அல்ல; அறிவிலி அரசியல்.
அமெரிக்காவில் பாதி மக்கள் இதே நிலைகளுடன் வாழும் நிலையில், மற்றவர்களுக்கு நுழைவு மறுப்பது எந்த நியாயம்? உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகிய பிறகு, அமெரிக்கா தன்னையே “Who knows what” என்ற கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது
இறுதியில் ஒரு புதிய விசா படிவம் போதும்:
"உங்களிடம் சர்க்கரை, பிபி அல்லது பொதுவான புத்திசாலித்தனம் உள்ளதா?
டிரம்ப் பின் மருத்துவ வரலாறு இரகசியமானது என்றாலும், அவர் இரத்த அழுத்தத்திற்கு இலக்கானவர். அதன் பேரில் அவருடைய வருகைக்கு இந்தியா அனுமதி மறுக்கலாமா? (அய்யய்யோ, அதெல்லாம் இல்ல... சும்மா... ஒரு பேச்சுக்கு...)
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் பாலிசிகள்!
படித்துவிட்டீர்களா?
திரைபாரதியின்
"திசைகெட்ட பயணங்கள்"
@ அமேசான் KDP?
#அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு
00:10

