அடைந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி!
யானை பார்க்க வெள்ளெழுத்தா என்பது சொலவடை. இன்றைய அரசியல் அப்படித்தான் இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் யாருக்கும் வரலாறு தெரியவில்லை என்பது தமிழக அரசியலின் சாபக்கேடு. அதிமுக தலைமையின் முறையற்ற சர்வாதிகாரப் போக்கினால் கட்சியே செதில் செதிலாக உதிர்ந்து வருகிறது. விஜய் முதல்வர் கனவில் மிதக்கிறார். சீமான் தனி ஆவர்த்தனம். சரி, அதிமுக, தவெக & நாதக ஆகிய எதிர்க் கட்சித் தலைவர்களின் திட்டம்தான் என்ன?
அவர்கள் அனைவரின் திட்டமும் குறிக்கோளும் ஒன்றே ஒன்றுதான்: எப்படியாவது தமது கட்சி வெல்ல வேண்டும், தான் முதல்வராக வேண்டும் என்பதே. அதற்கு திமுகவை ஆட்சிக்கட்டிலில் இருந்து முதலில் கீழே இறக்க வேண்டும். ஆனால், அதற்காக எதிர்கட்சிகள் ஒன்று பட்டு செயல்பட வேண்டும் என்ற முனைப்பு, அவர்கள் யாரிடமும் இல்லை. நீயா, நானா என்றுதான் நிற்கிறார்கள். அதற்கு, தன்னால் வரமுடியாவிட்டால் திமுகவே தொடரட்டும் என்ற எண்ணம் காரணமா? கட்சியின் எதிர்காலம் பற்றிய கவலை இல்லை. பேராசை கண்களை மறைக்கிறது.
தனது கட்சியே உடைந்தாலும் பரவாயில்லை, கட்சிக்குள் தன்னை எதிர்ப்பவர்கள் அனைவரையும் அழித்து ஒழிக்க வேண்டும் என நினைப்பவன் தலைவனே இல்லை. அவன் வெல்வது அபூர்வம். தனது கட்சி வெல்ல வேண்டும் என்று நினைப்பதைவிட ஆளும் கட்சி தோற்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருந்து காய் நகர்த்தும் தலைவனே நாளை நாட்டினை ஆள்கிறான். அப்படி யாரும் இங்கே இல்லை.
விஜய் மற்றும் சீமான் கட்சிகள் ஒன் மேன் ஆர்மிகள். அவர்கள் இல்லை என்றால் அவரது கட்சிகள் இல்லை. இது ஓர் ஆபத்தான (மக்களுக்கு!) ஜனநாயக விளையாட்டு. இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இருவருக்கும் "Politics is a game of numbers" என்பது புரிய வரும்போது எல்லாம் முடிந்திருக்கும்.
ராஜாஜியும் அண்ணாவும் கொள்கை ரீதியாக எதிரெதிர் துருவங்கள். ஆனால், ராஜாஜியுடன் கை கோர்த்துதான் அண்ணா பொது எதிரியான காமராஜரை வென்று ஆட்சிக்கு வந்தார்.
ஜனசங்கமும் (இன்றைய BJP) கம்யூனிஸ்டுகளும் ஒரே அணியில் திரண்டுதான் காங்கிரசை வீழ்த்தினர். 1999 தேர்தலில் பிஜெபியுடன் திமுக கூட்டணி அமைத்தது. அதில் இன்னொரு கூத்தும் நடந்தது. அந்தக் கூட்டணியில் முன்னாள் காங்கிரஸ் தலைவரான வாழப்பாடி ராமமூர்த்தியின் தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியும் பங்கு பெற்று பணியாற்றியது வரலாறு. இன்று தமாகா வாசன் BJP கூட்டணியில்!
ஆனானப்பட்ட ஜம்மு & காஷ்மீரிலேயே, முஃப்டி முகமது சயீத் (PDP கட்சி) BJP யுடன் கூட்டணி அமைத்துதான் முதல்வரானார். அவரது மறைவிற்குப் பின் அவரது மகள் மெஹபூபா முதல்வரானது வரலாறு. இங்குதான் கண்ணை மூடிக் கொண்டு "அமாவாசை" என்று கூச்சல்.
தேர்தலில் கொள்கையும் இல்லை குந்தாணியும் இல்லை. மிகவும் முன்னேறிய மேற்கத்திய நாடுகளிலும் கூட இதே கூட்டணிக் கூத்துக்கள்தான். தமிழக அரசியலின் நிதர்சனம் என்ன?
தரவரிசைப் பட்டியலில் ஒவ்வொரு கட்சி அல்லது கூட்டணியின் வாக்கு சதவீதம் கீழ்க்கண்டவாறு இருப்பதாக சும்மா வைத்துக்கொள்வோம்.
திமுக - 35%
அதிமுக - 25%
விஜய் - 20%
சீமான் - 20%
இருக்கும் மூன்று எதிர்க் கட்சிகளில் ஏதாவது இரண்டு கட்சிகள் கூட்டணி சேர்ந்தால், திமுகவின் தோல்வி உறுதியாகிறது. எப்படியென்றால்,
அதிமுக + விஜய் - 45%
அதிமுக + சீமான் - 45%
விஜய் + சீமான் - 40%
தேர்தலில் மேற்கண்ட சதவீதக் கணக்கு மேலும் சாதகமாக மாறும். அதாவது கூட்டணி அமைக்காத கட்சியில் இருந்து 5 - 10% ஓட்டுக்கள் கூட்டணி அமைத்த எதிர்க் கட்சிகளுக்குப் போகும். எனவே, விஜயோ அல்லது சீமானோ, யாராவது ஒருவர் தனித்து நின்றால் அவருக்கு 10 To 15% கிடைத்தால் எதேஷ்டம்! அதிமுகவின் நிலையும் அதுதான்.
அதாவது, கூட்டணியில் சேராமல் தனித்து நிற்கும் எதிர்க் கட்சி - அதிமுக, தவெக அல்லது நாதக எதுவாக இருந்தாலும் - அதன் டெபாசிட் தொகையை மொத்தமாக இழக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அது மட்டுமல்லாமல் அந்தக் கட்சியின் எதிர்காலமே கேள்விக் குறியாகும் அபாயமும் உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவரும் "அடைந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி!" என முதலமைச்சர் கனவுகளில் இருக்கும் வரை, திமுக ஆட்சிக்கு வருவது என்பது இயற்கை நியதி. விழுந்த ஓட்டுக்களில் 35% மட்டும் பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்கு திமுகவுக்கே வாய்ப்பு அதிகம் என்பதே இன்றைய நிலை. இது மொத்த வாக்காளர்களில் 22.75% ஆகும். (அதாவது 35% of 65%) பிறகு? ஓட்டுப் போடப் போவது 65 சதவீத மக்கள்தானே? இதுதான் ஜனநாயகம்.
#அரசியல்

