தமிழ்நாட்டில் தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க.வை தவிர வேறு வழியில்லை என்று நம்பிய பா.ஜ.க.வின் வியூகமும் சறுக்கியுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை அ.தி.மு.க.வுடன் இணைத்து வலுவான கூட்டணியை உருவாக்க விரும்பினார். ஆனால், எடப்பாடி பழனிசாமியின் முரண்பாட்டால் அந்த முயற்சி தோல்வியடைந்தது. இதன் மூலம், அ.தி.மு.க.வை முழுமையாக நம்பியிருந்த பா.ஜ.க.வின் திட்டம் எதிர்பார்த்த பலனை தரவில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலவீனத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், அ.தி.மு.க.வின் முன்னாள் சகாக்கள் சிலர் விஜய்யின் த.வெ.க. பக்கம் கவனத்தை திருப்பி வருகின்றனர். அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தது முதல் அதிர்வலை ஆகும். அ.தி.மு.க.வில் வாய்ப்புகள் இல்லாததால், பலவீனமான நிலையில் உள்ள ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரும் தங்கள் செல்வாக்கை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் த.வெ.க.வுடன் நெருங்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய ஜனநாயக கூட்டணி அனாதையான நிலையில் இருப்பதால், தேர்தலுக்கு முன் மற்ற சிறு கட்சிகளும் த.வெ.க.வின் பலத்தை மதிப்பிட்டு அக்கூட்டணிக்கு செல்ல நிர்பந்திக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
கூட்டணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், தே.மு.தி.க. மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகள் குழப்பத்தை உருவாக்கியுள்ளன. அதிமுக வாக்குறுதி தந்தது போல் ராஜ்ய சபா உறுப்பினர் பதவி கொடுக்காத ஆத்திரத்தில் தே.மு.தி.க. இணக்கமில்லாத போக்கை கடைப்பிடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது இரு பிரிவுகள் காணப்படுகின்றன; ஒரு பிரிவினர் தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்ட, மற்றொரு பிரிவினர் த.வெ.கவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. இது அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்கு மேலும் பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் இந்தச் ஸ்திரமின்மை, முக்கிய தலைவர்கள் மீதான நம்பிக்கை இழப்பு மற்றும் சிறு கட்சிகளின் பிளவு ஆகியவற்றை கருத்தில் கொள்ளும்போது, இக்கூட்டணி “கடை விரித்தும் கொள்வாரில்லை” என்ற பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு முன் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் நிலவும் இந்த குழப்பம், தி.மு.க.வுக்கு சாதகமாக அமையும் என்றும், தமிழகத்தின் அரசியல் களம் விஜய்யின் த.வெ.க.வை சுற்றியே நகர்வதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். எனவே, பா.ஜ.க. தலைமை உடனடியாக இந்த குழப்பமான நிலையை சமாளித்து ஒரு முடிவெடுக்கும் நிலையில் இறங்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது #📢 நவம்பர் 28 முக்கிய தகவல்🤗 #தமிழக அரசியல் களம்


