கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை மூன்றாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 10.12.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
நாளை முகூர்த்தமென்று நாற்றிசையுந் தானறிய
கோழையில்லா மன்னர் குலதெய்வச் சான்றோர்க்கு
முகூர்த்தமென்று சாற்றி மூவுலகுந் தானறிய
பகுத்துவமாய் நல்ல பந்தலிட்டா ரம்மானை
வயிரக்கால் நாட்டி வயிர வளைகளிட்டுத்
துயிரமுள்ள தங்கத் தூண்கள் மிகநாட்டி
முத்து நிரைத்து முதுபவள வன்னியிட்டுக்
கொத்துச் சரப்பளியைக் கோர்மாலையாய்த் தூக்கி
மேற்கட்டி கட்டி மேடைபொன் னாலேயிட்டு
காற்கட்டி பட்டுக் கனமா யலங்கரித்து
வாழை கரும்பு வகைவகையாய் நாட்டிமிக
நாளை மணமென்று நாட்டுக்குப் பாக்குவைத்து
.
விளக்கம்
==========
நிச்சயிக்கப்பட்ட திருமணத் தேதியை நாலாப் புறமும் தெரிவிக்கப்பட்டது. பெருமைக்குரிய மன்னர்களான தெய்வகுல சான்றோர்க்கு நடைபெறயிருக்கும் திருமணமாதலால் அதை மூவுலகத்தாருக்கும் முறைப்படி அறிவித்தனர். மணமகன்கள், மணமகள்கள் இல்லங்களில் தேவைக்கேற்ப அழகுமிகு பந்தல்கள் அமைக்கப்பட்டன.
.
அந்தப் பந்தலுக்காகப் பயன்படுத்தப்பட்ட தூண்களும், மேற்பரப்புகளும் வைரம் பாய்ந்து வளர்ந்து முற்றிய உயர்தரமான மரங்களே தேர்ந்தெடுக்கப்பட்டன. அழகுமிகு அந்தப் பந்தலில் முத்துப் பதிப்பதுபோல் ஆங்காங்கே தீப விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. கொத்துச் சரப்பணி எனப்படும் அடுக்காபரணங்களை ஆங்காங்கே தொங்கவிட்டு அலங்கரித்தனர். அவை அங்கே கட்டப்பட்டிருந்த மேறகட்டிக்கு இன்னும் அழகு சேர்த்தது.
.
மணமேடையில் நிறுவப்பட்டிருந்த கால்களும், மேடையும் பொன்னிறத்தால் பொதியப்பட்டிருந்தது. வகை வகையான வாழை மற்றும் கரும்புத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அந்தப் பந்தலில் பத்திரகாளி வளர்த்த பாலர்களுக்கும் நிருபதி ராஜனின் பெண் மக்களுக்கும் நாளை திருமணம் நடைபெறப் போகிளதென்று முந்தையநாள் வரை நாட்டு மக்களுக்கெல்லாம் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தார்கள்.
.
.
அகிலம்
========
சான்றோர் திருமணம்.
========================
வெடிபூ வாணம் மிகுத்தகம்பச் சக்கரமும்
திடிம னுடன்மேளம் சேவித்தார் பந்தலுக்குள்
வாச்சியங்க ளின்னதென்று வகைசொல்லக் கூடாது
நாச்சியார் மாகாளி நாயகியுங் கொண்டாடி
பாலருக் கேற்ற பணியெல்லாந் தான்பூட்டிச்
சாலமுள்ள சிங்கத் தண்டிகையில் தானிருத்தி
பட்டணப் பிரவேசம் பகல்மூன்று ராமூன்று
இட்டமுடன் பூதம் எடுத்துமிகச் சுற்றிவந்து
மண்டபத்துள் வைத்து மாபூதஞ் சூழ்ந்துநிற்க
தெண்டனிட்டு மன்னர் தேசாதி சூழ்ந்துநிற்க
பதினெட்டு வாத்தியமும் பட்டணமெங் குமுழங்க
ததிதொம் மெனவேசில தம்புருசா ரங்கிகெம்ப
பந்தமது பிடித்துப் பலபூதஞ் சூழ்ந்துநிற்க
நந்தகோ பால நாரா யணர்மகிழ்ந்து
மைந்தருக் கின்று மணமுண்டு என்றுசொல்லி
வைந்தர்பல தேவர்களை வாருமென வேயழைத்துப்
பாலருட முகூர்த்தம் பார்க்கப்போ மென்றுசொல்லி
சீலமுட னனுப்பி ஸ்ரீரங்க மேயிருந்தார்
.
விளக்கம்
==========
திருமணத் திருநாளை முன்னிட்டு, வெடிகள் முழங்கின. பூவாணம் பொலிவு காட்டியது. அஸ்திர வாணங்களோ அனைவரையும் மகிழ்வித்தது. அங்கே ஈரடுக்கு வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. இவற்றை இன்னின்ன வாத்தியங்கள்தான் இங்கே இசைக்கப்படுகிறதென்று இனம் பிரித்துச் சொல்ல முடியாத அளவில் பல்வேறு இசைகள் பந்தலுக்குள் இருப்போரை பரவசப்படுத்தியது. இன்ப மயமான இந்நாளை நினைத்து அன்னைப் பத்திரமாகாளி அகமகிழ்ந்தாள்.
.
பத்திரமாகாளி வளர்த்த பாலர்கள் ஏழுபேருக்கும், அழகூட்டும் ஆடைகளையும், எழில் கூட்டிடும் ஆபரணங்களையும் அணிவித்து சிறப்பு மிகுந்த சிம்மாசனம் அமைந்த பல்லக்கில் அமரவைத்து, பூதகணங்கள் அந்தப் பல்லக்கை சுமந்துவர, அதைச் சுற்றிலும் பலநாட்டு மன்னர்களும் பண்பாக சான்றோர்களும் புடைசூழ ஊர்வலம் புறப்பட்டது.
.
மூன்று பகல்களும், மூன்று இரவுகளுமாக நடைபெற்ற இந்த பட்டணப் பிரவேசத்தில் பதினெட்டு வகையான வாத்தியங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த மூன்று இரவுகளையும் பகல் போலாக்குவதற்காகப் பல பூதங்கள் கையில் பந்தத்தை ஏந்தி காட்சியோ பார்ப்போரைப் பரவசத்தில் ஆழ்த்தியது. இந்த காட்சிகளையெல்லாம் திருவரங்கத்தில் இருந்துகொண்டே கண்டுகளிப்புற்ற மகாவிஷ்ணு, விண்ணவர்களையெல்லாம் அழைத்து, தம்முடைய பாலகர்களின் திருமணத்திற்கு அனுப்பி வைத்து விட்டு அகமகிழ்ச்சியோடு திருவரங்கத்தில் இருந்தார்.
.
அகிலம்
========
தேவதே வர்புகழத் திசைவென்ற சான்றோர்க்கு
மூவர்களும் வந்து உதவிசெய்தா ரம்மானை
நல்ல முகூர்த்தம் நாள்பார்த்துச் சான்றோர்கள்
எல்லாச் சடங்கும் இயற்றிவைத்தா ரம்மானை
சடங்கு முகித்துச் சான்றோரை யொப்பமிட்டுத்
தடங்கொண்ட மன்னவரைத் தண்டிகையின் மீதிருத்தி
அரசர் மிகச்சூழ அணியீட்டி யாட்கள்வர
விரைவாகக் காளி வித்தகலை யேறிவர
அரம்பையர்க ளாடிவர அயிராவதத் தோன்வரவே
வரம்பெரிய தேவர் மலர்மாரி தூவிவர
ஆலத்தி யேந்தி அணியணியாய்த் தான்வரவே
மூலத்தி கன்னி மோகினியாள் தன்னுடனே
பூதம தாடி பிடாரியது சூழ்ந்துவர
நாதம் ரெட்டையூதி நடந்தார்மாப் பிள்ளைகொண்டு
விருதிற் பெரிய வீரதெய்வச் சான்றோர்கள்
நிருபன் மகளை நியமித்து மாலையிட
வீரியமாய் நல்ல விவாகமிட வாறாரெனப்
பூரியலிற் சொல்லி பேர்கள் சிலரூத
இப்படியே வாத்தியங்கள் இசைந்திசைந் தேவூதி
அப்படியே நிருபன் அரசன் மகள்தனையும்
மாலை மணமிட்டு வாழவந்தா ரம்மானை
வாலையது வான மாகாளி வாழுகின்ற
மண்டபத்துள் வந்து மகிழ்ந்திருந்தா ரம்மானை
.
விளக்கம்
==========
தேவர்கள் முதலாய் தேவேந்திரன் வரைக்கும் புகழும்படியாக இந்தத் திருமண ஊர்வலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களும் வந்து கலந்து கொண்டதோடு, இந்த பட்டணப்பிரவேசம் தடையின்றி நடைபெறுவதற்கான அனைத்து உதவிகளையும் செய்தனர்.
.
நிருபதிராஜனின் அரண்மனையை அடுத்து வந்ததுமே, மணப் பெண்களின் வீட்டிற்குள் செல்ல சுபமுகூர்த்தம் பார்த்து எல்லாச் சடங்குகளும் இதமாக நடந்தேறின.
.
இவ்வாறு எல்லா சடங்குகளையும் முடித்து, மீண்டும் அந்தச் சான்றோர்களைப் பல்லக்கிலே ஏற்றுவித்து, அரசர்களும், ஈட்டி ஏந்திய படைகளும் சூழ்ந்துவர அன்னைப் பத்திரகாளியோ, அவருக்கே உரித்தான வித்தாய தத்துவ வாகனத்திலேறி வந்தாள்.
.
தெய்வகுல மாதர்ளெல்லாம் திருநடனம் ஆடிவர, அங்கே தேவேந்திரனும் வருகை தந்தார். மாவரம் பெற்ற தேவர்களெல்லாம் மலர்மாரி தூவினர். அழகுமிகு நங்கையர்களெல்லாம் ஆலத்தி ஏந்திய வண்ணம் அணிவகுத்து வந்தார்கள். அவர்களோடும் ஆதிவாசிப் பெண்களும் கனவுலகக் கன்னியர்களும், பதங்களும், காளிதேவியின் கருணைபெற்ற பிடாரிதேவியும் புடை சூழ்ந்து வந்தனர்.
.
வெற்றி வீரர்களாக அந்தச் சான்றோர்களை மணமகளின் இல்லம் நோக்கி அழைத்துவரும் அந்த ஊர்வலத்தில் ஊதிய இரட்டைச் சங்கு நாதம் ஏகமாய் எதிரொலித்தது. நிருபதிராஜனின் பெண்மக்களை மாலையிட்டு மணமுடிக்க, மாப்பிள்ளைகள் வந்துவிட்டார்கள் என்பதை நிருபதிராஜனின் அரண்மனையிலுள்ள, பேரிகையின் மூலம் அறிவிக்கப்பட்டது.
.
இத்தகைய மகத்தான ஏற்பாடுகளோடு, மன்னன் நிருபதியின் பெண்மக்கள் ஏழுபேருக்கும், பத்திரகாளியின் பாதுகாப்பில் வளர்ந்த மகாவிஷ்ணுவின் பிள்ளைகளான சான்றோர்கள் ஏழுபேருக்கும் திருமணம் நடந்தேறியது. திருமணம் முடிந்ததும் தம்பதியர் பத்திரகாளியின் இருப்பிடமான புட்டாபுரத்திற்குச் சென்றார்கள்.
.
என்றென்றும் இளமையாகவே இருந்து கொண்டிருக்கும் அன்னை பத்திரகாளியின் மண்டபத்திற்கு வந்து சேர்ந்த மணமக்கள் அங்கே இல்லற இயல்புகளோடு இன்புற்றிருந்தார்கள்.
.
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை மூன்றாம் நாள் வாசிப்பு நிறைவு பெற்றது.
தொடரும்… அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர்


