இன்றைய காலக்கட்டத்தில் மோசடிகள் புதுபுது டிசைன்களில் அரங்கேறுகின்றன. மக்கள் விருப்பத்தை அறிந்து அதே ரூட்டில் நம்பும்படியாய் நடித்து பல மோசடிகள் நடப்பதை பார்க்க முடிகிறது. குறிப்பாக ஆன்லைனில் இதுபோன்ற மோசடிகள் அதிக அளவில் நடைபெறுகின்றன.
மேட்ரிமோனியல் இணையதளம்
ஆன்லைன் லாட்டரி, பரிசு விழுந்துள்ளதாக கூறி ஏமாற்றுவதில் தொடங்கி மணப்பெண், மணமகன் தேடுவதில் வரை மோசடி நீள்வதை பார்க்க முடிகிறது. மேட்ரிமோனியல் வெப்சைட்களில் மணமகன் தேடும் பெண்களை குறிவைத்து சென்னை இளைஞர் மோசடியில் ஈடுபட்டு அதிரவைத்துள்ளார். இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
சென்னை தாம்பரத்தில் கஸ்தூரிபாய் நகர் என்ற இடம் உள்ளது. இங்குள்ள கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்தவர் கோபிநாத். 24 வயதான இவர் தன்னை ஒரு தொழில் அதிபர் போல காட்டிக்கொண்டு டிப்-டாப் உடைகளுடன், விலை உயர்ந்த கார்கள் முன்னாடி புகைப்படம் எடுத்துக்கொண்டு அதை மேட்ரிமோனியல் இணையதளங்களில் பதிவு செய்துள்ளார்.
உல்லாசம் அனுபவித்து ஏமாற்றம்
தன்னை ஒரு தொழில் அதிபர் போல காட்டிக்கொண்டதால், ஐடி, மருத்துவம் என நன்கு படித்த பெண்களும் இவரை நம்பி இவரது வலையில் வீழ்ந்துள்ளனர். கோபிநாத்தை திருமணம் செய்ய விருப்பம் தெரிவிக்கும் பெண்களிடம் நைசாக பேசி பணம் பெற்று, அவர்களுடன் உல்லாசமும் அனுபவித்துவிட்டு ஏமாற்றுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் உள்ள மேட்ரிமோனியல் தளங்களில் தனது மன்மத விளையாட்டுகளை கோபிநாத் அரங்கேற்றி வந்த நிலையில், சென்னை ஐடி பெண் ஒருவர் அளித்த புகாரால் வசமாக சிக்கியுள்ளார்.
12-க்கும் மேற்பட்டபெண்களிடம்
அதாவது, கோபிநாத் விளம்பரத்தை பார்த்த ஐடி பெண் ஒருவர், தனது குடும்பத்தினர் மூலமாக திருமணத்திற்கு பேசியுள்ளார். கோபிநாதும் விருப்பம் தெரிவித்த நிலையில், அந்த பெண் போனில் பேசியுள்ளார். பல நாடுகளில் தொழில் நடத்தி வருவதாக கதை விட்ட கோபிநாத், திடீரென ஒருநாள் தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டுவிட்டதாகவும், வீட்டில் வேலை செய்பவருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று ரூ.20 ஆயிரத்தை கூகுள் பேவில் வாங்கியுள்ளார்.
அதன்பின்னரும் பல்வேறு பொய்களை சொல்லி லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார். அப்போது அந்த பெண்ணுக்கு சந்தேகம் வரவே தனியார் டிடெக்டிவ் ஏஜென்சி வாயிலாக கண்காணித்துள்ளார். அப்போதுதான் கோபிநாத் ஒரு மோசடி பேர்வழி என தெரியவந்துள்ளது. உடனே தாம்பரம் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையை அடுத்து கோபிநாத் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்த 2 லேப்டாப்கள், செல்போன்களை ஆய்வு செய்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பெண் மருத்துவர் உள்பட 12-க்கும் மேற்பட்ட பெண்களிடம் கோபிநாத் பண மோசடியில் ஈடுபட்டதை கண்டறிந்தனர். போலீசார் அவரது மடிக்கணினிகள், செல்போன்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். #📺 நவம்பர் 24 முக்கிய தகவல்கள் #🔴இன்றைய முக்கிய செய்திகள் #விழிப்புணர்வு எச்சரிக்கை பதிவு #😭காதலித்து ஏமாற்றும்😭 #ஏமாற்றும் காதல்


